search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீரன் சின்னமலை வரலாற்றை பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும்- ராமதாஸ் வேண்டுகோள்
    X

    தீரன் சின்னமலை வரலாற்றை பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும்- ராமதாஸ் வேண்டுகோள்

    • தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
    • தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவுநாள் இன்று. தீரன் சின்னமலை என்றாலே அவரது வீரமும், வெற்றிகளும் தான் நினைவுக்கு வரும்.

    1801-ல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-ல் ஓடாநிலையிலும், 1804-ல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.

    தீரன் சின்னமலையின் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஈடு இணையற்ற புரட்சியாளர் தீரன் சின்னமலை எனப்படும் தீர்த்தகிரி கவுண்டர் சூழ்ச்சியாலும், சதியாலும் வீழ்த்தப்பட்டதன் 219-ம் நினைவு நாள் இன்று. ஆங்கிலேயர்களைக் கண்டு பிற மன்னர்கள் அஞ்சிய நிலையில், ஆங்கிலேயர்களை அடுத்தடுத்து மூன்று போர்களில் வீழ்த்தி அஞ்ச வைத்த வரலாறு தீரனுக்கு உண்டு.

    வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த அவர், கொடைகளை வழங்குவதில் கோமானாக திகழ்ந்தார். தன்னிடமிருந்த பணத்தை மக்களுக்கு வாரி வழங்கியவர். கொங்கு நாட்டில் இருந்து மைசூர் மன்னரால் வசூலித்துச் செல்லப்பட்ட வரிப்பணத்தை பறித்து ஏழை, எளிய மக்களுக்கு வழங்கியவர் வீரன் சின்னமலை. இளம் வயதிலேயே எண்ணற்ற சாதனைகளை படைத்து, வரலாற்றில் இடம்பெற்ற தீரன் சின்னமலையின் தியாகங்கள் இன்னும் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதும், அவரைப் போலவே அநீதிகளை எதிர்த்து போராட வேண்டியதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற இந்த நாளில் நாம் உறுதியேற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×