search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் சொத்து தகராறில் பெண் அடித்துக்கொலை- மகன் கைது
    X

    மதுரையில் சொத்து தகராறில் பெண் அடித்துக்கொலை- மகன் கைது

    • சொத்து பிரச்சினையில் தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மேலக்குயில்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பம்பையா. இவரது மனைவி சிந்தாமணி(வயது 75). இவர் தனது 2 மகன்கள் மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தார்.

    சிந்தாமணியின் 2-வது மகன் வேந்தன்(50). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் தனது தாய் சிந்தாமணி வீட்டிலேயே வசித்து வந்தார். அவர் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வேந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். அவரை சிந்தாமணி கண்டித்து வந்தார். சிந்தாமணிக்கு பூர்வீக சொத்துக்கள் உள்ளது. அதனை பிரித்து தரும்படி வேந்தன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    வழக்கம்போல் நேற்று இரவும் வேந்தன் தாய் சிந்தாமணியிடம் சொத்தை பிரித்து தரும்படி கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அவர் உனக்கு சொத்து தரமுடியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த வேந்தன் விறகு கட்டையை எடுத்து வந்து சிந்தாமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனைகண்ட வேந்தன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    இதுபற்றி அறிந்த உறவினர்கள் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் சிந்தாமணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுபற்றி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வேந்தனை பிடித்து கைது செய்தனர். சொத்து பிரச்சினையில் தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×