search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை சேரவிடாமல் பா.ஜ.க. தடுக்கிறது- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசிய காட்சி. அருகில் அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை சேரவிடாமல் பா.ஜ.க. தடுக்கிறது- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேச்சு

    • தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார்.
    • ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசியதாவது:-

    வருகிற 4-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை தருவதாக இருந்ததன் அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தரும் முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதனை ஏற்றுக்கொண்ட பின்னர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் மரக்கூழ் ஆலை இரண்டாவது அலகினை திறந்து வைக்கிறார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு பெரம்பலூர் புறப்பட்டு செல்கிறார்.

    அங்கு மாலையில் இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து 5-ந்தேதி முதல்-அமைச்சர் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் இருந்தது.

    அதன் அடிப்படையில் தனித்தனியாக நடைபெற இருந்த கூட்டம் இன்று 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்து இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நீண்ட தூரம் பயணிக்க கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும் நாளைதான் அவரது வருகை தொடர்பான முடிவு தெரியவரும்.

    தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார். இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். சின்ன விஷயத்தையும் பா.ஜ.க.வினர் ஊதி பெரிதாக்குகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த ஒரு குறையும் கூறமுடியாத அளவுக்கு நமது முதல்வர் ஆட்சியை நடத்தி வருகிறார்.

    இப்போது அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. நான்தான், நீதான் என்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இடத்தை பிடித்து விட வேண்டும், எதிர்க்கட்சியாக வந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. அந்த நோக்கத்தில் அவர்கள் அ.தி.மு.க.வை ஒன்று சேரவிடாமல் பார்த்து கொள்வதோடு, தடுத்தும் வருகிறார்கள்.

    நான் வெளிப்படையாக வெட்கத்தை விட்டு கூறுகிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் அனைவரும் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்.

    தற்போது தி.மு.க. எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ வருங்காலத்தில் இதோடு இன்னும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி 40-க்கு 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். திருச்சி என்ன நினைக்கிறதோ, அதுதான் தமிழ்நாட்டில் நடக்கும். திருச்சி சரியாக இருந்தால் தமிழ்நாடு சரியாக இருக்கும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களை தவிர மீதமுள்ள அனைத்து இடங்களிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்று சொன்னேன். அதேபோல் மூன்று இடங்களை தவிர டெல்டாவில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றிபெற்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாபெரும் வெற்றியை தலைவருக்கு தேடித்தர வேண்டும்.

    கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சில சில சங்கடங்கள் நிலை வருகிறது. அவற்றை சரிசெய்யும் வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×