search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரதிய ஜனதா மீண்டும் சமரச முயற்சி- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை அடுத்தடுத்து சந்திப்பு
    X

    பாரதிய ஜனதா மீண்டும் சமரச முயற்சி- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் அண்ணாமலை அடுத்தடுத்து சந்திப்பு

    • தமிழ் கலாசாரத்தின் மீது தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள்., மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள்.
    • கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் தலைமை பொறுப்பை வகிப்பது யார்? என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியாக போட்டியாளர்களை அறிவித்துள்ளனர். அவர்கள் இருவரையும் பா.ஜ.க. தலைவர்கள் சமரசம் செய்ய மேற்கொண்ட முதல்கட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

    இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால் பொதுக்குழு வழக்கு விவகாரங்கள் நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ள வேட்பாளர்களுக்கு சுயேட்சை சின்னம் தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சர்ச்சைக்கு தீர்வு காண பா.ஜனதா தலைவர்கள் சி.டி.ரவி, அண்ணாமலை மற்றும் கரு.நாகராஜன் இன்று அதிரடியாக சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

    முதலில் அவர்கள் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு காலை 8.15 மணிக்கு சென்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்தனர். பதிலுக்கு அவரும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உடன் இருந்தார். அவர்கள் சுமார் 1 மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி தன் நிலைப்பாட்டை உறுதிபட வெளியிட்டார். ஈரோடு இடைத்தேர்தல் களம் எங்களுக்கு முக்கியமானது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது.

    எனவே எனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கப்போவதில்லை.

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சந்திப்பை முடித்துக் கொண்டு பா.ஜ.க. தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், கரு.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி ஓ.பி.எஸ்.சிடம், ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பும் சுமார் 1 மணிநேரம் நீடித்தது.

    ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை முடிந்ததும் பா.ஜ.க. தலைவர்கள் தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு சி.டி.ரவி, அண்ணாமலை இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை இன்று அவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினோம். அப்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக விரிவான கருத்துக்களை பரிமாறினோம்.

    1972-ல் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அப்போது தி.மு.க.வை தீயசக்தி என்று அவர் தெரிவித்தார். அதன்பிறகு அ.தி.மு.க.வை வழிநடத்திய ஜெயலலிதாவும் தீய சக்தி என்ற வார்த்தையை தொடர்ச்சியாக பயன்படுத்தினார்.

    இன்று வரை தி.மு.க.வும் அதேநிலையில் தான் உள்ளது. நாளுக்கு நாள் தி.மு.க. அரசின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவர்கள் ஒரு குடும்பத்துக்காக மட்டுமே உழைக்கிறார்கள். தமிழக மக்களுக்காக அல்ல. மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி ஏற்றம் போன்ற பல்வேறு சுமைகளை ஏற்றி தி.மு.க. அரசு வஞ்சித்து உள்ளது.

    தமிழ் கலாசாரத்தின் மீது தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள்., மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

    இப்படி தி.மு.க. ஆட்சியின் அவலத்தை பார்த்து தமிழக மக்கள் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    அரசு எந்திரங்கள் அங்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றன. பணப்பட்டுவாடாவும் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அவசியமாகும்.

    அதேபோல ஒன்றுபட்ட அ.தி.மு.க.வும் அவசியம். இதுதொடர்பாகவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று பேச்சு நடத்தினோம். எங்கள் சந்திப்பு மிகவும் நன்றாக அமைந்திருந்தது. இருவரும் இணைந்து செயல்படுவதைத் தான் டெல்லி மேலிடம் விரும்புகிறது.

    இதுதொடர்பாக எங்கள் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரிலேயே இருவரையும் சந்தித்து பேச உள்ளோம். ஜே.பி.நட்டா தெரிவித்த கருத்துக்களை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரிடமும் தெரிவித்து இருக்கிறோம்.

    இருவரும் தனித்தனியாக இருப்பது தமிழகத்துக்கும் நல்லதல்ல. இருவரும் இணைந்து செயல்பட்டால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும். இதுதொடர்பாக எங்கள் கருத்துக்களை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். இருவரையும் இணைப்பதற்காக முயற்சிக்கிறோம். இணைவார்கள் என்கிற நம்பிக்கையும் உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கலுக்கு வருகிற 7-ந்தேதி வரை கால அவகாசம் உள்ளது. பாரதிய ஜனதாவின் நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    உங்களது கோரிக்கைகளை இருவரும் ஏற்றுக்கொண்டார்களா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சி.டி.ரவி எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். முயற்சி செய்கிறோம் என்று தெரிவித்தார்.

    ஒருவேளை உங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பாரதிய ஜனதா நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற கேள்விக்கு பதில் அளித்த சி.டி.ரவி 7-ந்தேதி வரை கால அவகாசம் உள்ளது. அதுவரை பொறுத்திருங்கள்.

    பா.ஜனதா மாநில துணைத்தலைவர்கள் வி.பி. துரைசாமி, கரு.நாகராஜன், செயலாளர் சுமதி வெங்கடேசன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஜான் பீட்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×