search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
    X

    நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

    • இருபுறமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நடப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதனையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க.-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளரையும் அறிமுகப்படுத்தி சூறாவளி பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்த 2 தொகுதிகளும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திறந்த வெளி மேடையில் வைத்து 2 தொகுதிக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

    இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கார் மூலமாக பிரசார கூட்டம் நடைபெறும் நாங்குநேரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டி பேசுகிறார்.


    நாங்குநேரியில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் மேடையின் முகப்பு பகுதி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நான்குவழிச்சாலையில் இருபுறமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நடப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனையின் பேரில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாகமுடன் செய்து வருகின்றனர்.

    நாங்குநேரி கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மீண்டும் சாலை மார்க்கமாக தூத்துக்குடிக்கு சென்று. அங்குள்ள தனியார் விடுதியில் இரவில் தங்குகிறார். மீண்டும் நாளை மாலை அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை செல்கிறார்.

    அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு இரவில் தங்குகிறார். முதலமைச்சர் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×