என் மலர்tooltip icon

    சிவகங்கை

    பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா இடையமேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருபவர் யுவராஜ் (வயது15). இவர் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு தன் நண்பர்களுடன் சென்றார். அப்போது பள்ளியை பற்றி விமர்சித்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (27), ஆறுமுகம் (50) அங்கு வந்தனர். அப்போது மாணவர் யுவராஜூக்கும், முருகன், ஆறுமுகம் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகாறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த முருகனும், ஆறுமுகமும் இரும்பு கம்பி, கட்டையால் யுவராஜை தாக்கினர். படுகாயம் அடைந்த அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து முருகன், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (புதன்கிழமை) கும்பாபிஷேம் நடைபெற்றது. இதற்கான யாக சாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, தனபூஜைகள், கணபதி ஹோமத்துடன் தொடங்கின.

    தொடர்ந்து 5 நாட்களாக துர்க்கா லட்சுமி, சரஸ்வதி ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரசன்னாபிஷேகம், முதற்கால யாக பூஜைகள், 2-ம், 3-ம் கால யாக பூஜை கள் நடைபெற்றன.

    நேற்று (புதன்கிழமை) காலை 4-ம் கால யாக பூஜைகள், பூர்ணாகுதி, தீபாராதனைகள் காட்டப்பட்டு காலை 10.15 மணி அளவில் விமானம் மற்றும் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம், மூலவர் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலையில் அம்மனுக்கு மகாபிஷேகம் நடை பெற்றது. இரவு அம்மன் திருவீதி உலாவுடன் விழா நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காரைக்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் அன்னதானங்கள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவிற்கான சிறப்பு வர்ணனை கவிஞர் ராம நாதன், வள்ளி பால கிருஷ்ணன், வித்யாலட்சுமி ஆகியோர் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சிபுரம் லலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளை தலைவர் அருணாச்சலம், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் ராமசுப்பிரமணியன், துணைத்தலைவர்கள் கலைச் செல்வன், விஸ்வநாதன், துணைச்செயலாளர்கள் கருப் பையா, பெரியகருப்பன், டிரஸ்டிகள் சண்முகநாதன், சுப்பிரமணியன், நாச்சியப்பன், ரவிசர்மா, ரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர். காரைக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

    விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான செந்தில் நாதன், நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், தொழில் அதிபர் படிக்காசு, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா, சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, அ.தி.மு.க. மாவட்ட இளை ஞரணி செயலாளர் தேர்போகி பாண்டி, கண்ணங்குடி ஒன்றிய தலைவர் செல்வி பாண்டி, எம்.கே.எஸ். ஜூவல்லரி குடும்பத்தார்கள், உஷா மார்பிள்ஸ் குடும்பத்தார்கள், செஞ்சை கண்ணன் மற்றும் லலிதா, முத்துமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் 500-கும் மேற் பட்ட போலீசார் பாது காப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    மானாமதுரை அருகே குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்த கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை

    மானாமதுரை அருகே உள்ள சின்னக்கண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் சோனைமுத்து (வயது 80). இவருடைய மனைவி ராக்கம்மாள் (70). கடந்த 10–ந்தேதி கணவன்–மனைவி இருவரும் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்தனர். வீட்டினுள் மயங்கிக் கிடந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராக்கம்மாள் இறந்து போனார். சோனைமுத்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் சோனைமுத்துவும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரசார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காரைக்குடி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் விவசாய சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இன்று 2-வது நாளாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. சிவகங்கை மாவட் டம், காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையத்தில் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வந்த ரெயிலை தி.மு.க., காங்கிரசார் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரிய கருப்பன் எம்.எல்.ஏ., சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், மாங்குடி உள்ளிட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ரெயில் மறியலில் ஈடுபட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க கோரி தமிழகம் முழுவதும் இன்றும் (17-ந்தேதி) நாளையும் (18-ந்தேதி) ரெயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    சிவகங்கையில் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் யூனியன் அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ., போராட்டத்தை வாழ்த்தி பேசி வழியனுப்பினார்.

    ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ரெயில் நிலையம் வந்ததும், அங்கு நின்ற ராமேசுவரம்-திருச்சி ரெயிலை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு), தி.மு.க. மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், சிவகங்கை நகர் தி.மு.க. செயலாளர் துரை ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், முத்துராமலிங்கம், மேப்பல் சக்தி, கடம்பசாமி, மார்க் சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் மதி, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ராஜரத்தினம், கவுன்சிலர் சண்முகராஜன், ம.தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் கார்கண்ணன், நகர செயலாளர் சுந்தர பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் திருமொழி, விவசாய சங்க நிர்வாகிகள் முத்துராமலிங்கம், விசுவ நாதன் உள்பட 1000 பேர் பங்கேற்று கைதானார்கள்.

    போராட்டத்தை முன்னிட்டு சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் மங்களேசுவரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    13 வீடுகளில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டன.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலங்களில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. பந்தல் காண்டிராக்டர், பேராசிரியை உள்பட பலர் வீடுகளில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதனை தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையும் நடத்தப்பட்டது. தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர் முகமது சாதிக் தலைமையிலான போலீசார் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 3 பேர் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களது கேள்விகளுக்கு 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதன்பேரில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்களது பெயர் புதுவயல் முருகேசன் (35), பிரம்புவயல் ராஜா என்ற வீரமணிராஜா (40), சிறுகவயல் சண்முக பிரகாஷ் (22) என தெரியவந்தது. இவர்கள் தேவகோட்டை, ஆறாவயல், பள்ளத்தூர் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.

    அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நகைகள், 2 எல்.சி.டி. டி.வி.க்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.75 ஆயிரம் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிங்கம்புணரியில் உள்ள வீடு தீப்பிடித்து எரிந்தத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நாசமானது.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி செட்டியார் தெருவில் வசிப்பவர் பூமிநாதன். டெய்லரான இவர் அப்பகுதியிலேயே கடை வைத்து தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல் பூமிநாதன் நேற்று முன்தினம் இரவு தனது கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது மனைவியும், குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது.

    இந்த தீவிபத்தில் ஏற்பட்ட புகை மண்டலம் தெரு முழுவதும் பரவியது. இதனால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் சுமார் 1 மணி போராடி மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் எரிந்து போனது. தீவிபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மரச்சாமான்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மேலும் இந்த தீவிபத்தால் பூமிநாதனிடம் தீபாவளி பண்டிகைக்காக தைக்க கொடுத்திருந்த துணிகளும் எரிந்து போயின. ஆனால் தீவிபத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர் அருகே காட்டில் 50 டன் எடையுள்ள பாறை சரிந்து விழுந்ததில் 2 வாலிபர்கள் உடல் நசுங்கி பலியாகினர்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 24). இவருடைய மைத்துனர்கள் விஜி (22), குமார் (20). இவர்கள் 2 பேரும் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். அதே கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (20).

    இவர்கள் 4 பேரும் ஜவ்வாதுமலை காட்டில் உடும்பு, முயல், காட்டு எலிகள் உள்ளிட்ட சிறிய விலங்குகளை வேட்டையாடுவது வழக்கம். அதேபோல் காட்டில் விளையும் மூலிகை கிழங்குகளை குழி தோண்டி எடுத்தும், மலைத்தேன், கடுக்காய் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து விற்றும் பிழைப்பு நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வெங்கட்ராமன் உள்பட 4 பேரும் நேற்று ஜவ்வாதுமலை ஏழருவி முருகர் கோவிலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சுமார் 50 டன் எடையுள்ள பாறை ஒன்றின் அடிப்பகுதியில் கிழங்குகளை குழி தோண்டி எடுத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பாறை நகர்ந்து உருண்டது.

    இதனை பார்த்ததும் கிழங்கு தோண்டிய 4 பேரும் பதறி அடித்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து ஓட முயன்றனர். அதற்குள் பாறை விழுந்து அதன் அடியில் சிக்கி வெங்கட்ராமன், விஜி ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி பொதுமக்கள் உதவியுடன் வெங்கட்ராமன், விஜி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

    காட்டுப்பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு செல்வதற்கு வழித்தடம் இல்லை. இதனால் பலியான 2 பேரின் உடல்களும் தூளி கட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை உறவினர்கள் சுமந்து கொண்டு சென்றனர்.

    பிறகு, பிரேத பரிசோதனைக்காக உடல்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்ல 3 நாட்களுக்கு 110 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சிவகங்கை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்ல 3 நாட்களுக்கு 110 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இது குறித்து சிவகங்கை மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலத்தின் வாயிலாக 26, 27 மற்றும் 28.10.2016 ஆகிய நாட்களில் 24 மணி நேரமும் சென்னை கோயம்பேட்டிலிருந்து சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 110 பேருந்துகள் இயக்குகிறது.

    கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவயல், பூவிருந்தவல்லி, நசரத் பேட்டை, வெளிச்சுற்று சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலிருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு, பேருந்துகளில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    அரசு பஸ் மோதியதில் பிளஸ்-1 மாணவன் பலியானான்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது செட்டிநாடு கூட்டுக் கொல்லை. இந்த பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், அரசு கால்நடை பண்ணை வாகன ஓட்டுனர்.

    இவரது மகன் வசந்தகுமார் என்ற காளிமுத்து (வயது15). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாணவன் வசந்த குமார் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அவர் ஒரு திருப்பத்தில் சென்ற போது திருச்சியில் இருந்து பரமக்குடி நோக்கி அரசு பஸ் வந்தது.

    அந்த பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காளிமுத்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து செட்டிநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்புவனம் அருகே வயல்சேரி பகுதியில் பன்றிகள் அட்டகாசம் செய்வதால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வேர்க் கடலை, பருத்தி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    திருப்புவனம்:

    திருப்புவனம் அருகே வயல்சேரி பகுதியில் பன்றிகள் அட்டகாசம் செய்வதால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வேர்க் கடலை, பருத்தி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    திருப்புவனம் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்தது வயல்சேரி சிவனாங்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சிரமப்பட்டு பயிர்செய்துள்ள வேர்க்கடலை, பருத்திச் செடிகளை பன்றிகள் கும்பல், கும்பலாக வந்து செடிகளை வேறோடு பிடுங்கி நாசம் செய்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். பன்றிகளை விரட்ட வேண்டும் என வயல்சேரியைச் சேர்ந்த விவசாயி ராசுத்தேவர் தெரிவித்துள்ளார்.

    மானாமதுரை அருகே 120 ஆண்டு கால பழமையான மரம் 4 வழிச்சாலை பணிக்காக மாற்று இடத்தில் நடப்பட்டது.

    மானாமதுரை:

    மதுரையில் இருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முத்தனேந்தலில் 4 வழிச் சாலை அமையும் இடத்தில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இங்கு 120 வயதான இலந்தை மரம் உள்ளது.

    இந்த மரத்தை வெட்டாமல் வேருடன் மாற்று இடத்தில் வைக்க முடிவு செய்தனர். அதை தொடர்ந்து ராட்சத மண் அள்ளும் எந்திரம் மூலம் வேருடன் மரம் பெயர்த்து எடுக்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டது.

    1969-ல் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்க எங்களது இடத்தை வழங்கினோம். தற்போது 4 வழிச்சாலை பணிக்காக எங்கள் நிலத்தில் 2 ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

    இதில் மூதாதையர் காலத்தில் நடவு செய்யப்பட்ட 120 ஆண்டுகள் பழமையான சீமை இலந்தை மரமும் பாதிக்கப்படுவதால், தாவரவியல் நிபுணர்களின் ஆலோசனைப்படி அந்த மரத்தை அப்படியே பெயர்த்து எடுத்து மாற்று இடத்தில் நடவு செய்துள்ளோம். இம்மரம் கான்பூர், நாக்பூர் ஆகிய இடங்களில் அதிகளவு காணப்படுகிறது. செப்டம்பரில் இதில் பழங்கள் பழுக்க தொடங்கும். ஒவ்வொரு பழமும் எலுமிச்சை அளவில் இருக்கும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×