என் மலர்tooltip icon

    சிவகங்கை

    ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகள் 2015-2016-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூல் செய்யப்பட வேண்டு மென சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

    பண்டிகை காலமான 27.10.2016 முதல் 31.10.2016 வரையுள்ள காலத்தில் பண்டிகை இல்லாத காலங்களில் இயல்பாக வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூல் செய்யப்பட வேண்டும்.

    அதற்கு மாறாக கூடுதலாக கட்டணம் ஏதும் வசூலித்தால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.

    இது தொடர்பாக 04575-240339 அல்லது கட்டணமில்லா தொலை பேசி 1077 ஆகிய தொலை பேசி எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    காவிரி பிரச்சனையில் தி.மு.க. கூட்டிய சர்வகட்சி கூட்டத்தை புறக்கணித்த கட்சிகள் விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார்கள் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இதை மத்திய அரசு எதிர்க்கிறது. தமிழக அரசு இப்பிரச்சனையில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தவில்லை. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் பிரச்சினையாக உள்ள இதை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார்.

    இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், விவசாய சங்கங்கள் கலந்து கொண்டார்கள்.

    கூட்ட முடிவில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். தமிழக அரசு உடனடியாக அவசரமாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். அரசு தலைமையில் அனைத்து அரசியல் கட்சியினர் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து குடியரசு தலைவர், பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தரவேண்டும் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம்.

    இதை 3 மாதத்திற்குள் அரசு நிறைவேற்றாவிட்டால் மீண்டும் அனைத்து கட்சியினர் கூடி முடிவு எடுப்போம். இதில் கலந்து கொள்ளாத அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்சனையில் அக்கறை இல்லாதவர்கள். தி.மு.க. நடத்திய கூட்டம் என்பதால் பங்கேற்கவில்லை என்று குறை கூறுவது தவறு ஆகும். விவசாயிகள் நலனில் அக்கறை உள்ளவர்கள் பங்கேற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.
    காளையார்கோவிலில் மருது சகோதரர் நினை விடத்தில் குருபூஜை இன்று நடைபெற்றது. அங்குள்ள பெரியமருது சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவிடம் காளையார் கோவிலில் உள்ளது. அங்கு இன்று (வியாழக்கிழமை) 215-வது ஆண்டு குருபூஜை நடத்தப்பட்டது.

    இதையொட்டி காலை 7 மணிக்கு கோவை சிவலிங்க சுவாமிகள் அங்கு பூஜையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பால்குட ஊர்வ லம் நடைபெற்றது.

    இதில் மருதுபாண்டியர் களின் வாரிசுதாரர்கள், பல்வேறு சமூகத்தினர், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் பால் குடங்களை எடுத்து வந்தனர்.

    ஊர்வலத்தின் முடிவில் பெரிய மருது சிலைக்கு பாலா பிஷேகம் செய்யப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந் தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச் சந்திரன் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பத்தூரில் உள்ள ஒரு குடோனில் அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்தவர் கைது செய்யப்பட்டார். அந்த குடோனிலிருந்து ரூ.37½ லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திருப்பத்தூர்:

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பட்டாசு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பட்டாசு கடை நடத்துபவர்கள் வருவாய்த்துறையினரிடம் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்துள்ளனர். அது குறித்து அனுமதி பெற்ற பட்டாசு வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டமும் நடத்தினர்.

    திருப்பத்தூரில் ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் சிவஞானம் என்பவர் காகித குடோன் வைத்துள்ளார். இவர் தற்போது பட்டாசு கடை வைப்பதற்கு அனுமதி பெற்று குடோனுக்கு எதிரே பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது குடோனில் அனுமதியின்றி பட்டாசு கிப்ட் பாக்ஸ்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த குடோனில் பட்டாசுகள் பாதுகாப்பான முறையில் வைக்காமலும் திடீரென தீப்பிடித்தால் அதனை அணைப்பதற்கான உபகரணங்கள், தண்ணீர் மற்றும் மணல் நிரப்பிய வாளி எதுவுமே அங்கு அவர் வைக்கவில்லை. திடீரென தீவிபத்து ஏற்பட்டால் விபரீதம் ஏற்படும் அபாயமும் இருந்தது.

    இந்தநிலையில் அங்கு திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில் குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த குடோனில் 1, 500 பட்டாசு ‘கிப்ட் பாக்ஸ்’கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றின் விலையும் ரூ.2,500 என பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. அனுமதியின்றியும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமலும் வைத்திருந்ததால் 1, 500 ‘கிப்ட் பாக்ஸ்’களையும் போலீசார் பறிமுதல் செய்து திருப்பத்தூர் தோரணபதியில் உள்ள வெடிமருந்து குடோனில் ஒப்படைத்தனர்.

    பின்னர் சிவஞானத்தையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் கைப்பற்றப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.37½ லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    வீட்டில் தனியே இருந்த மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்த மர்ம வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூலாங்குறிச்சி கக்கன்நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது தாயார் அழகம்மை (வயது86).

    நேற்று மாலை இவர் வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் தனியே அமர்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம வாலிபர்கள், குடிக்க தண்ணீர் கேட்டனர். தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்ற அழகம்மையிடம் அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு மர்ம வாலிபர்கள் தப்பிவிட்டனர்.

    இது குறித்து பூலாங்குறிச்சி போலீசில் மூதாட்டியின் மகன் பழனிச்சாமி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்.

    காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 215-வது ஆண்டு குருபூஜை விழா திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.

    சிவகங்கை:

    காளையார்கோவிலில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 215-வது ஆண்டு குருபூஜை விழா திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது.

    இந்த ஆண்டு 4 தினங்கள் விழா கொண்டாடப்படு கிறது. நேற்று மாமன்னர் மருது சகோதரர்கள் நினை விடத்தில் 51 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடை பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பொங்கல் வைத்து வழிபாடு கிறார்கள்.

    26-ம் தேதி காலை (புதன் கிழமை) மாலை வாண வேடிக்கை நடைபெறுகிறது. 27-ம் தேதி (வியாழக்கிழமை) குருபூஜையை முன்னிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். காலை 7 மணி முதல் 11 மணி வரை பால்குடம் எடுக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்துகிறர்கள்.

    திருப்பத்தூர் அருகே இடி-மின்னல் தாக்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பாலமுருகன் (வயது10). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலை பாலமுருகன் தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

    அப்போது பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல் தாக்கியதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    சிவகங்கை:

    சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    காலை 8 மணி அளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் மலர்விழி நினைவு மண்டபத்திற்கு வந்து மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    முன்னதாக நினைவு மண்டபத்தில் கலெக்டர் மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் இளங்கோ, போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. உமாதேவன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்கள் ராமசாமி, சாத்தையா, பழனிக்குமார், பாண்டியன், வைரவசுந்தரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும் நினைவு மண்டபம் முன்பு பொங்கலிட்டு பூஜை செய்தனர்.

    காலை 9 மணி அளவில் அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன் ஆகியோர் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    திருப்பத்தூரில் நேற்று பலத்த சத்தத்துடன் இடியும்,மின்னலும் வெட்டின. அப்போது மின்னல் தாக்கியதில் மரத்தின் கீழ் ஒதுங்கிய 8 ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஒன்றியம் கே.வயிரவன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வயல் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், செல்வராஜ், முருகேசன், செல்வம் ஆகியோரது ஆடுகள் கும்பலாக அந்த பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.

    அப்போது பெய்த மழையால் ஒரு சில ஆடுகள் அருகில் இருந்த புளியமரத்தின் கீழ் ஒதுங்கி உள்ளது. அந்த நேரத்தில் வானத்தில் பலத்த சத்தத்துடன் இடியும், மின்னலும் வெட்டின. அப்போது மின்னல் தாக்கியதில் மரத்தின் கீழ் ஒதுங்கிய 8 ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது.

    இதை சற்று தூரத்தில் இருந்து பார்த்த ஆடு மேய்ப்பவர் அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து திருப்பத்தூர் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
    போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் படங்களின் திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் உரிமம் பெறப்படாத திருட்டு சி.டி.க்கள் அதிக அளவில் புகழக்கத்தில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனுக்கு புகார்கள் வந்தன. இது குறித்து அதிரடி சோதனை நடத்த அவர் உத்தரவிட்டார்.

    இதன்பேரில் மாவட்டம் முழுவதும் துணை கண்காணிப்பாளர்கள் முருகன், கார்த்திகேயன், கருப்புசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் சி.டி.கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் திருட்டு சி.டி.க்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

    தனுசின் தொடரி, விக்ரமின் இருமுகன், சிவகார்த்திகேயனின் ரெமோ, விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, தோணி உள்ளிட்ட புதுப்படங்களின் சி.டி.க்களை போலீசார் கைப்பற்றினர். திருப்பத்தூரில் 114 சி.டி.க்களும், சிங்கம்புணரியில் 94 சி.டி.க்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது தொடர்பாக சி.டி.கடைகளின் உரிமையாளர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    6 கடைகளில் கதவை உடைத்து பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் உள்ள காரைக்குடி-திண்டுக்கல் சாலையில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் இரும்பு கடை உள்ளிட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றை நேற்று இரவு விற்பனைக்குப் பின் உரிமையாளர்கள் அடைத்து சென்றனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை அந்த கடைகளுக்கு பேப்பர் போடுபவர் அங்கு வந்துள்ளார். அப்போது 6 கடைகளின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் கடை உரிமையாளர்களான ரவி, ரேவதி, கலைமாறன், ஜாபர் அலி மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.5 ஆயிரத்து 100-ம், கலைமாறன் என்பவரது உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ரூ.5 ஆயிரமும், ஜாபர் அலியின் இரும்பு கடையில் ரூ.20 ஆயிரமும் கொள்ளை போயிருப்பது முதற்கட்டமாக தெரிய வந்தது.

    மற்ற கடைகளில் கொள்ளைபோன பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த துணிகர கொள்ளை குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நேற்று இரவு சிங்கம்புணரியில் ஆய்வு நடத்தினார். அவர் சென்ற பிறகு இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    காரைக்குடி பஸ் நிலையத்தில் துப்பாக்கியுடன் நின்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் நகர் முழுவதும் ரோந்து சுற்றி கண்காணித்து வருகிறார்கள். நேற்று இரவு வடக்கு காவல் நிலைய போலீசார் புதிய பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்து இருந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு நாட்டு துப்பாக்கி இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த போலீசார் அதை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி தவசிமடையை சேர்ந்த வேளாங்கண்ணியின் மகன் செபஸ்தியான் (வயது37) என தெரியவந்தது.

    இவர் எதற்காக நாட்டு துப்பாக்கியை கொண்டு வந்தார்? யாருக்காவது விற்க கொண்டு வந்தாரா? அல்லது வேறு எதற்கும் பயன்படுத்த வைத்து இருந்தாரா? என்பது குறித்து செபஸ்தியானிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×