என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வள்ளிக்கண்ணு (வயது29). இவர்களுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
நேற்று மாலை கொத்தமங்கலத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குள் வந்த வள்ளிக்கண்ணு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தை செட்டிநாடு போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் கூறுகையில், வள்ளிக்கண்ணு குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் பிரச்சனையா? என விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காரைக்குடி:
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் நேற்று மாலை காரைக்குடியில் அதிரடி சோதனை நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய விடுதிகள், மக்கள் கூடும் இடம், கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை காரைக்குடி 100 அடி ரோட்டை சேர்ந்த ஆனந்தவள்ளி (வயது64) என்பவர் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு மரத்தில் அவர் பூக்களை பறித்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் ஆனந்தவள்ளி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். கொள்ளை நடைபெற்ற இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் உள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆனந்தவள்ளி கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விவேகானந்தபுரம் குறுக்கு வீதியை சேர்ந்தவர் மணி (வயது65). இவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது உறவினர்கள் திருவேகம்பத்தூர் பகுதியில் உள்ளனர். அங்கு நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மணி குடும்பத்துடன் சென்று விட்டார். பின்னர் 2 நாட்கள் கழித்து அவர்கள் நேற்று வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணி உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடக்க அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
இதனால் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பதை அறிந்த அவர் தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக மணி தெரிவித்தார்.
இதற்கிடையில் அவரது வீட்டின் அருகே உள்ள திவ்யநாதன் என்பவரது வீட்டிலும் மர்ம மனிதர்கள் புகுந்து 2 பவுன் நகையை திருடியுள்ளனர். அந்த வீட்டிலும் யாரும் இல்லை. மேலும் மற்றொரு வீட்டிற்குள் கொள்ளையர்கள் நுழைய முயன்றபோது அங்கிருந்தவர்கள் உஷாராகி மின் விளக்குகளை போட்டுள்ளனர்.
இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அடுத்தடுத்த வீடுகளில் ஒரே நேரத்தில் மர்ம மனிதர்கள் கைவரிசை காட்டியிருப்பது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவேகானந்தபுரம் பகுதி முக்கிய அரசு அலுவலர்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளை நடந்த வீடுகளில் சிவகங்கை மாவட்ட தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்து பழைய குற்றவாளி களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கவாத்து கத்தி, கிளை வெட்டும் கத்திரி, பிளாஸ்டிக் கிரேட்ஸ், பி.வி.சி. பைப், தார்பாய், தண்ணீர் டிரம், களைக்கொத்து, கடப்பாறை, மண்வெட்டி எடையிடும் கருவி மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஒரு விவசாயிக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. இந்த மானியம் ஆய்வுக்குப்பின் நேரிடையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அடையாள அட்டை நகல் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையுமாறு சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதிக அளவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.
வருகிற கார்த்திகை தீப திருவிழாவுக்கு வீடுகள் முழுவதும் விளக்கு ஏற்றுவார்கள். கோவில்களிலும் அதிக அளவில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதற்காக மானாமதுரை மண்டபாண்ட தொழிற்கூடத்தில் இரவு பகலாக கொட்டும் மழையிலும் தீப விளக்குகள், கிளியான்சட்டிகளை தொழிலாளர்கள் தயார் செய்து வருகின்றனர்.
திருமணம் முடிந்து புதுப்பெண்ணுக்கு சீர் வழங்க சரவிளக்குகள், விநாயகர் விளக்குகள் மற்றும் கேரளா விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு, அணையா தீபம் ஏற்ற குடுவை விளக்கு, மண்குத்து விளக்கு, அகல் விளக்கு மற்றும் கலை அரங்கு விடுதிகளில் வைக்க ரூம் விளக்குகள் என விதவிதமான விளக்குகளை தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.
இதுபற்றி மண்பாண்ட கூட்டுறவு குடிசை தொழில் சங்க தலைவர் வேலுசாமி கூறுகையில் இந்த ஆண்டு அதிக அளவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. கார்த்திகை தீப விழாவுக்காக மழைக்கு முன்பே அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. உற்பத்தி விலைக்கே மானாமதுரையில் வந்து வியாபாரிகள், பொதுமக்கள் விரும்பிய விளக்குகளை வாங்கி செல்லலாம் என தெரிவித்தார்.
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே உள்ள பனையூர் காசி நகரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 40). இவர் தனது மனைவி கண்ணகியுடன் (38) மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.
நரிக்குடி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், அழகேசனை பின் தொடர்ந்து வந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்த போது மர்ம ஆசாமிகள், மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்திருந்த கண்ணகி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
காரைக்குடி:
சிவகங்கை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது50). இவர் அந்த பகுதியில் இளநீர் கடை வைத்துள்ளார். இவரது மகள் ரேவதி (22). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
ஏகாம்பரததின் இளநீர் கடைக்கு காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்த அழகர்சாமி மகன் சதீஷ் குமார் (26) என்பவர் இளநீர் காய்களை இறக்கி வந்தார். அப்போது ரேவதியை பார்த்த சதீஷ்குமார் அவரை திருமணம் செய்ய ஆசைப் பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்த ரேவதியை வாலிபர் சதீஷ் குமார் காரில் போட்டு கடத்தி சென்றார். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காரைக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு அரியக்குடி சோதனைச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த ரேவதி மீட்கப்பட்டார். அவரை கடத்திய வாலிபர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர்:
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவரது மகன் சரவணன் (வயது 42). கூலித் தொழிலாளி. சரவணன் மனைவியின் அக்காள் திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
அவருக்கு, 9 வயதில் மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் சரவணன், மனைவியின் அக்காள் வீட்டிற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கினார். சரவணன் சித்தப்பா முறை என்பதால் அவருடன் சிறுமி விளையாடினார். சரவணன் அருகிலேயே சிறுமி படுத்து உறங்கினார்.
நள்ளிரவில் சிறுமி மற்றும் அவரது பெற்றோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அப்போது, சரவணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. மறுநாள் காலை விடிந்தவுடன் அவரச, அவரசமாக சரவணன் ஊருக்கு கிளம்பி சென்று விட்டார்.
அதன்பிறகே, தங்களது மகளுக்கு சரவணன் பாலியல் தொல்லை கொடுத்தது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சரவணனை தேடி வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள பெரியகாட்டுக்குறிச்சியை சேர்ந்த 16 வயதுடைய அரசு பள்ளி மாணவி சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி அழகம்மாள். இவர்களது மகள் சூர்யா (19) அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சூர்யா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின்பேரில் பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.
காரைக்குடி:
செல்லப்பன் மங்கையர்க்கரசி சுழற்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (2-ந்தேதி) தொடங்குகிறது.
இதுகுறித்து காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் தாளாளர் சத்யன் கூறியதாவது:-
எனது பெற்றோர்களின் பெயரில் செல்லப்பன் மங்கையர்க்கரசி சுழல் கோப்பை டி-2 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் ஆண்டு போட்டிகள் நாளை (2-ந்தேதி) முதல் 5-ந் தேதி வரை, செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 25 பள்ளிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
போட்டியின் முதல் நாள் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். தேவகோட்டை துணை ஆட்சியர் அல்பி ஜான், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கல்யாணராமன் முன்னிலை வகிக்கிறார்.
போட்டிகள் நடைபெறும் மைதானம் ஒரு மாநில அளவிலான தகுதி திறன் பெற்றது. அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி மாணவர்கள் போட்டி அலுவலர்களாக செயல்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பத்தூர்– சிங்கம்புணரி சாலையில் ஏ.காளப்பூர் மேம்பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த ஒரு காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்து தாருமாறாக ஓடியது. மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து நின்றது. இதில் தடுப்புச்சுவரில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து போனது. காரில் இருந்த 2 பேர் லேசான காயங்களுடன் தப்பினார்கள்.
கார் தாருமாறாக ஓடியபோது வேறு வாகனம் ஏதும் வராததால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பொய்யாவயல் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது27). இவரது மனைவி கனிமொழி (19). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தீபாவளி அவர்களுக்கு தலைதீபாவளி என்பதால் பாலமுருகன் மனைவியுடன் அவரது சொந்த ஊரான விலாவடியேந்தலுக்கு சென்றார். அங்கு சந்தோஷமாக தலை தீபாவளி கொண்டாடிய இருவரும் மாலையில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
நேற்று இரவு 7 மணியளவில் மித்ரங்குடி பகுதியில் வந்தபோது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். எதிர்பாராதவிதமாக இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த பாலமுருகன், ஆயினிபட்டி அய்யாவு என்ற ரமேஷ் (27) ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கனிமொழி உள்பட 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தலை தீபாவளி முடித்து திரும்பிய வாலிபர் மனைவி கண் முன்பு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து குறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






