என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மில் வேலைக்கு சென்ற 15 வயது சிறுமி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாயி. இவரது மகள் மந்தையம்மாள் (வயது15).

    இவர் ஒக்கூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    கடந்த 13-ந்தேதி வேலைக்கு சென்ற மந்தையம்மாள் மாலையில் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து பூவந்தி போலீசில் கருப்பாயி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மாயமான மந்தையம்மாளை தேடி வருகிறார்.

    சிவகங்கையில் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி அனைத்து அரசு, தனியார் வங்கிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெற்று வருகின்றன. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தற்போது வரை பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்படவில்லை. இந்த வங்கியில் நகைக்கடன் பெற்றவர்கள் கடனை செலுத்த பழைய ரூபாய் நோட்டுகளுடன் வந்தனர்.

    ஆனால் வங்கி ஊழியர்கள் அதனை பெறவில்லை. இதனால் அவர்கள் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து விரக்தியுடன் திரும்பினர்.

    இந்நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் சங்க தலைவர் உதயகுமார், செயலாளர் ராமசாமி, பொருளாளர் பாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பழைய நோட்டுகளை பெறாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். பழைய நோட்டுகளை பெற அனுமதிக்கக்கோரி நாங்கள் கடந்த 12-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம். இன்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.
    தேவகோட்டை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாய மானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    தேவகோட்டை தாலுகா சாதிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் பிரியா (வயது21). இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பிரியா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமான முனியசாமி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின்பேரில் தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து, பிரியா தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.

    பெண்ணை காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசின் புதுவாழ்வு மைய அலுவலகம் உள்ளது. இங்கு வேலை பார்ப்பவர் பிரிய தர்ஷினி (வயது26). இவர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அதில் என்னுடன் வேலை பார்க்கும் முத்துக்கிருஷ்ணன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இந்த நிலையில் அவர் திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து மானாமதுரை துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் விசாரணை நடத்தி முத்துக்கிருஷ்ணனை கைது செய்தார். மேலும் அவரது பெற்றோர் மூக்கன்- நாகவள்ளி, உறவினர்கள் மகேஸ்வரி, சுதா, தேவராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாக சமுதாய கூடத்தில் மாவட்ட அளவிலான நீர் பாசன அமைப்புகள் மேம்படுத்துதல் தொடர்பாக கருத்தரங்கு நடந்தது. மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையேற்று தொடங்கி வைத்தார்

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் அதிகமான நீர்நிலைகள் உள்ள பகுதியாகும். முறையாக நீர்நிலைகளை பாரமரித்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர வாய்ப்புள்ளது. நீர்நிலைகளில் வரத்து கால்வாய் மற்றும் நீர் வெளியேற்றும் வழிதடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். அதை போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.

    மேலும் விவசாயிகள் காலமாற்றத்திற்கு ஏற்ப நவீன வசதிகளை பயன்படுத்தி விவசாய முறையினை மாற்றி கொள்ள வேண்டும். நீர் பற்றாக் குறையாக உள்ளதால் சொட்டு நீர்பாசனத்திட்டம், நுண்ணூயிர் பாசனத் திட்டம் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைத்து விவசாயத்தை செம்மையாக பயன்படுத்தினால் அதிக மகசூல் என்ற இலக்கை எட்டமுடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, வேளாண்மை இணை இயக்குநர் செல்வம், வேளாண்மை துணை இயக்குநர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மதியழகன் (பொது), தர்சன் (வேளாண்மை), தோட்டக் கலை துணை இயக்குநர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை அரசு பள்ளி அருகில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் மர்ம காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை ஒத்தக்கடை 6-வது வார்டு அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் சென்னை பதிவு எண் கொண்ட கருப்பு நிற கார் கடந்த 15 நாட்களுக்கு மேல் கேட்பார் இன்றி நிற்கிறது.

    சில நாட்களாக தேவகோட்டை நகர் பகுதியில் பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. இந்த மர்ம கார் கருப்பு நிறமாக உள்ளதால் மற்ற ஊர்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு பயன்படுத்தி இங்கு நிறுத்தப்பட்டுள்ளதா? என அருகில் வசிப்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பள்ளி அருகில் கார் நிற்பதால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் அச்சத்துடனே வருகிறார்கள். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை மிகவும் அருகில் உள்ளதால் கடத்தலுக்கு பயன்படுத்தியதா? இல்லை மர்ம நபர்கள் வந்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரைக்குடி அருகே மாணவி உள்பட 2 பேரை காணவில்லை. போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    காரைக்குடி மீனாட்சி நகரை சேர்ந்தவர் மிக்கேல்ராஜ். இவரது மகள் ஜான்சி (வயது18). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற ஜான்சி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து தாய் ராஜேஸ்வரி வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.

    இதேபோல தேவகோட்டை பெரியகருப்பு தெருவைச் சேர்ந்த சுரேஷ் பாபு மகள் பிரியங்கா (21). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். நேற்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து தேவகோட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது. மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    சிவஙக்கை அருகே தேவகோட்டை கீழ மருத குளத்தை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 60). இவர் நேற்று பொதுகுறிச்சியில் இருந்து தேவகோட்டைக்கு பஸ்சில் வந்துகொண்டு இருந்தார்.

    பின்னர் ஊருக்கு வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கும்போது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பஸ்சில் இருக்கும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி குணசுந்தரி கழுத்தில் கிடந்த நகையை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தேவகோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முகமது தாரீக் அல்லமின் வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.

    மின் வாரிய பெண் ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் உஷாராணி (வயது 40). இவரது கணவர் துரைசாமி இறந்துவிட்டார்.

    உஷாராணி மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். இன்று காலை அவர் வேலைக்கு சென்றார். வீட்டில் அவரது மாமியார் மட்டும் இருந்தார்.அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரி மாணவர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் சிலரை, அந்த கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக புகார் வந்துள்ளது.

    இதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் அழகப்பாபுரம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதனை தொடர்ந்து புகார் கூறப்பட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டார். இவர் பல மாணவர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    2 சிறுமிகளை காரில் கடத்த முயன்றதாக வந்த தகவலால் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் சுற்றுபவர்களை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் ஆறுமுகம். இவரது மகள் திவ்யா (வயது9). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அவரை பவுண்டு தெருவில் உள்ள வீட்டில் இருந்து பாட்டி பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்றும் பேத்தி திவ்யாவை பள்ளியில் விட்டு விட்டு பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் பள்ளி நேர இடைவேளையில் திவ்யா, வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது அவளை ஒரு கும்பல் காரில் கடத்தியதாகவும் வழியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்ட கும்பல் மாணவி திவ்யாவை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றதாகவும் போலீசாருக்கு புகார் வந்தது.

    மேலும் அந்த கும்பல் கத்தி முனையில் திவ்யாவிடம் இருந்த தங்கத்தோடை பறித்து உள்ளதாகவும், சிவகங்கை நகர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் ஆறுமுகம் தெரிவித்து இருந்தார். மேலும் தன்னை கடத்திய 4 பேரும் முகத்தை கறுப்பு துணியால் மறைத்திருந்தனர் என திவ்யா கூறியதை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமியை கடத்தி விட்டு சென்ற கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சஞ்சய்கா சேமிப்பு அட்டை எடுப்பதற்காக மாணவி திவ்யா பள்ளியில் இருந்து வெளியே சென்றது தெரியவந்தது. கடத்தல் தொடர்பாக மதுரையை சேர்ந்த ஒருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட திருப்புவனம் டி.பழையூரை சேர்ந்த திருக்கேசுவரன் மகள் குணதாரிணி (10) என்பவரை நேற்று மாலை காரில் வந்த 2 பேர் கடத்த முயன்றுள்ளனர். தந்தையின் போன் நம்பர் மற்றும் முகவரி குறித்து கேட்டபோது குணதாரிணி கூச்சலிட்டதால் அவளை விட்டு விட்டு சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 சிறுமிகளை கடத்த முயன்றறாக வந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் காரில் சுற்றும் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    திருப்பத்தூர் அருகே லாரி மோதியதில் காரில் சென்ற 2 வாலிபர்கள் பலியானார்கள். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே காளையார்கோவில் பக்கமுள்ள முத்தூரை சேர்ந்த நடராஜன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது30). கருப்பையா மகன் ராமசந்திரன் (25). சாணாகுளத்தை சேர்ந்த அழகு மகன் முருகபாலன் (35) ஆகிய 3 பேரும் நேற்று காரில் திருச்சிக்கு சென்றனர்.

    சிங்கப்பூருக்கு சென்ற உறவினரை வழி அனுப்பி விட்டு இன்று அதிகாலை ஊர் திரும்பினர். காரை கோபாலகிருஷ்ணன் ஓட்டினார். 3 மணி அளவில் காட்டாம்பூர் பை-பாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது காரும் திருக்கோஷ்டியூரில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன், காரில் வந்த முருகபாலன் ஆகிய இருவரும் அதே இடத்தில் பலியானார்கள். ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருக்கோஷ்டியூரை சேர்ந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படையினர் சென்று காரில் இடி பாடுக்குள் சிக்கி இருந்த ராமச்சந்திரனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தெம்மாபட்டுவை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×