என் மலர்
செய்திகள்

சிறுமிகளை கடத்தும் கும்பலை பிடிக்க தனிப்படையினர் தீவிரம்
சிவகங்கை:
சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் ஆறுமுகம். இவரது மகள் திவ்யா (வயது9). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அவரை பவுண்டு தெருவில் உள்ள வீட்டில் இருந்து பாட்டி பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். நேற்றும் பேத்தி திவ்யாவை பள்ளியில் விட்டு விட்டு பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் பள்ளி நேர இடைவேளையில் திவ்யா, வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது அவளை ஒரு கும்பல் காரில் கடத்தியதாகவும் வழியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்ட கும்பல் மாணவி திவ்யாவை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றதாகவும் போலீசாருக்கு புகார் வந்தது.
மேலும் அந்த கும்பல் கத்தி முனையில் திவ்யாவிடம் இருந்த தங்கத்தோடை பறித்து உள்ளதாகவும், சிவகங்கை நகர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் ஆறுமுகம் தெரிவித்து இருந்தார். மேலும் தன்னை கடத்திய 4 பேரும் முகத்தை கறுப்பு துணியால் மறைத்திருந்தனர் என திவ்யா கூறியதை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமியை கடத்தி விட்டு சென்ற கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சஞ்சய்கா சேமிப்பு அட்டை எடுப்பதற்காக மாணவி திவ்யா பள்ளியில் இருந்து வெளியே சென்றது தெரியவந்தது. கடத்தல் தொடர்பாக மதுரையை சேர்ந்த ஒருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட திருப்புவனம் டி.பழையூரை சேர்ந்த திருக்கேசுவரன் மகள் குணதாரிணி (10) என்பவரை நேற்று மாலை காரில் வந்த 2 பேர் கடத்த முயன்றுள்ளனர். தந்தையின் போன் நம்பர் மற்றும் முகவரி குறித்து கேட்டபோது குணதாரிணி கூச்சலிட்டதால் அவளை விட்டு விட்டு சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 சிறுமிகளை கடத்த முயன்றறாக வந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் காரில் சுற்றும் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.






