என் மலர்
செய்திகள்

காரைக்குடி பஸ் நிலையத்தில் துப்பாக்கியுடன் நின்ற வாலிபர் கைது
காரைக்குடி:
காரைக்குடியில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் நகர் முழுவதும் ரோந்து சுற்றி கண்காணித்து வருகிறார்கள். நேற்று இரவு வடக்கு காவல் நிலைய போலீசார் புதிய பஸ் நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்து இருந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் ஒரு நாட்டு துப்பாக்கி இருந்தது.
அதிர்ச்சி அடைந்த போலீசார் அதை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி தவசிமடையை சேர்ந்த வேளாங்கண்ணியின் மகன் செபஸ்தியான் (வயது37) என தெரியவந்தது.
இவர் எதற்காக நாட்டு துப்பாக்கியை கொண்டு வந்தார்? யாருக்காவது விற்க கொண்டு வந்தாரா? அல்லது வேறு எதற்கும் பயன்படுத்த வைத்து இருந்தாரா? என்பது குறித்து செபஸ்தியானிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






