என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்கலைக்கழக பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் கல்வியியல் துறை தலைவராக பணிபுரிந்து வருபவர் அருணாசலம் (வயது 47).

    இவர், மாணவிகளை கோவா, மற்றும் கன்னியாகுமரிக்கு கல்விச்சுற்றுலாவாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மாணவிகளிடம் ஆபாச படங்களை காண்பித்தும், செல்போனில் ஆபாச படங்களை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    பல்கலைக்கழக வகுப்பு அறையிலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுபற்றி இதழியல் துறை மாணவ, மாணவிகள் காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயனிடம் புகார் செய்தனர்.

    அதன் பேரில் பேராசிரியர் அருணாசலம் மீது பெண் வன்கொடுமை, பாலியல் தொல்லை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.


    சிவகங்கை ரெயில் நிலையத்தில் ஆயுதப்படை பெண் போலீஸ் மாயமான சம்பவம் குறித்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, கீழபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 25). புதுக்கோட்டையில் ஆயுதப்படை போலீஸ் காரராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் ராமநாதன் வெளி நாட்டில் இருந்து கீழபசலை கிராமத்திற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகா, தனது சகோதரருடன் புதுக்கோட்டையில் இருந்து மானாமதுரைக்கு ரெயிலில் புறப்பட்டார்.

    சிவகங்கை ரெயில் நிலையத்தில் இறங்கிய கார்த்திகா பாத்ரூம் சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது கணவர் சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து, மாயமான கார்த்திகாவை தேடி வருகிறார்.
    சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா, மதகுபட்டி அருகே உள்ள செங்குழிப்பட்டியில் நேற்று அனுமதியின்றி, உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் மாட்டுவண்டி பந்தயம், குதிரை ரேஸ் ஆகியவை நடந்தது.

    இது குறித்து மதகுபட்டி கிராம நிர்வாக அதிகாரி மூர்த்தி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம் நடத்தியதாக அதே ஊரைச் சேர்ந்த காளிமுத்து, கதிரவன், சுந்தர்ராஜன் ஆகிய 3 பேர் மீது மதகுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    காளையார்கோவில் அருகே உள்ள சோலைமுடி கிராமத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன், புவனேஸ்வரன் மற்றும் சிலர் மீது காளையார் கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பராயலு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    சிவகங்கை அருகே போலீஸ்காரரை தாக்கி செல்போனை பறித்து சென்ற 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை தாலுகா மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பவர் சிங்காரவேலன் (வயது 34). இவர் நேற்று ரோந்து மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு வயல் பகுதியில் 7 வாலிபர்கள் மது குடித்து கொண்டு இருந்தனர். அவர்களை போலீஸ்காரர் சிங்காரவேலன் பொது இடத்தில் மது குடிப்பது தவறு. எனவே கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். அப்போது 7 பேரும் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிங்காரவேலன் மதகுபட்டி போலீசில் புகார் செய்தார். அதில், புதுப்பட்டியைச் சேர்ந்த தனசேகரன் (வயது 29), தனபால் (25), வினோத் (22), சுகுமார் (23) உள்பட 7 பேர் தன்னை தாக்கி செல்போனை பறித்துச் சென்றதாக கூறியுள்ளார்.

    புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து 7 பேரை தேடி வருகிறார்.

    திருப்பத்தூரில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தன.

    இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் சுரேஷ்குமார், கண்காணிப்பாளர் ரமேஷ், மருந்தக ஆய்வாளர் பிரபு மற்றும் திருப்பத்தூர் டவுன் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது திருப்பத்தூர் நடுத்தெருவில் நிர்மல் (வயது70), பெரிய கடைவீதியில் அப்துல் சுபகான் (71) ஆகியோர் டாக்டருக்கு படிக்காமல், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். போலி டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான 5 காளைகள் பங்கேற்றன.


    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான 5 காளைகள் பங்கேற்றன. சிவகங்கையில் வளர்க்கப்பட்டு வரும் இந்த காளைகள் இன்று காலை ஏ.சி. கேரவன் மூலம் அலங்காநல்லூருக்கு கொண்டு வரப்பட்டன.

    பின்னர் அவைகள் வாடிவாசல் மூலம் அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு இலங்கை அமைச்சர் தொண்டைமான் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

    தீபா ஆதரவாளர்கள் மீது அ.தி.மு.க.வினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் கவுன்சிலர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
    காரைக்குடி:

    முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று அளித்த பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அவரது பேட்டியால் தீபா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தீபா ஆதரவாளர்கள் இன்று 5 விலக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் ஊரவயல் ராமு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அசோகன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்களுக்கும் தீபா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தீபா ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் தீபா ஆதரவாளர்களான முன்னாள் கவுன்சிலர்கள் ரவி, அங்குராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அண்ணா சாலையில் உள்ள வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிங்கமுகம். இவரது மனைவி உமாசெல்வி (வயது 32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சிங்கமுகம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், உமாசெல்வி தனது மகள்களுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்காக உமாசெல்வி தனது குடுமபத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தென்னம்பூவயல் கிராமத்திற்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நேற்று நள்ளிரவு அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் மறைவான இடத்தில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 60 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

    இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்த தகவலை உமாசெல்விக்கு தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது நகை, வெள்ளி, பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

    கொள்ளை சம்பவம் குறித்து அவர், தேவகோடடை டவுன் போலீசில் புகார் தெரிவித்தார். டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் சிவகங்கையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    தேவகோட்டை பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தட்டம்மை தடுப்பூசி முகாமில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய மகன்–மகளுக்கு ஊசி போட்டு கலெக்டர் மலர்விழி முகாமை தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு 9 மாத குழந்தைகள் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை நடத்துகிறது. மாநிலம் முழுவதும் இந்த முகாம் நேற்று 6–ந்தேதி தொடங்கி வருகிற 28–ந்தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த முகாம் தொடக்க விழா சிவகங்கையை அடுத்த சுந்தரநடப்பு கிராமத்தில் உள்ள மான்போர்டு பப்ளிக் பள்ளி மற்றும் சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி வரவேற்று பேசினார். சுந்தரநடப்பு கிராமத்தில் உள்ள மான் போர்டு பப்ளிக் பள்ளியில் படிக்கும் தன்னுடைய மகள்–மகனுக்கு முதன் முதலில் தட்டம்மை தடுப்பூசியை போட்டு கலெக்டர் மலர்விழி முகாமை தொடங்கி வைத்தார்.
    விழிப்புணர்வு

    பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–

    தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் ஊசியை என்னுடைய மகள்–மகனுக்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊசியை ஏற்கனவே போட்டிருந்தாலும் மீண்டும் போடலாம். பொதுவாக காய்ச்சல் வந்த பின்னர் மருந்து கொடுப்பதை விட, வரும்முன்னர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க கைகளை நன்றாக கழுவ வேண்டும். நாம் சாதாரணமாக கழுவுவது போன்று அல்லாமல், டாக்டர் அறிவுரையின்படி கைக்கழுவுதல் வேண்டும். இப்படி செய்தால் பன்றிக்காய்ச்சல் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் இருக்கும். பொதுவாக ஆசிரியர்கள் சொல்வது தான், மாணவ–மாணவிகளுக்கு வேதவாக்காக இருக்கும். இதனால் தான் ஆசிரியர்கள் மூலம் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    மேலும் தட்டம்மை தடுப்பூசி கடந்த 1985–ம் ஆண்டு முதல் போடப்பட்டு வருகிறது. என்வே இந்த தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் போட்டால் ரூ.800 ஆகும். ஆனால் அரசு இலவசமாக கொடுக்கிறது. இதனால் பக்கவிளைவு எதுவும் கிடையாது. தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் டாக்டர் பரூக் அப்தல்லா கை கழுவும் முறை குறித்த செயல்விளக்கத்தை செய்துகாட்டினார். மேலும் இதில் மருத்துவ கல்லூரி டீன் சவுந்திரராஜன் முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல்முருகன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுரேஷ்குமார், துணை இயக்குனர் ராம பாண்டியன், தலைமை ஆசிரியர்(பொறுப்பு) பழனியப்பன், மாவட்ட சமூகநல அதிகாரி உமையாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    சிங்கம்புணரி

    இதேபோல் சிங்கம்புணரியில் பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை சுகாதார பணிகள் இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள்மணி தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் நமீசாபானு முன்னிலை வகித்தார். டாக்டர்கள் சுபசங்கரி, செந்தில்குமார் ஆகியோர் மாணவ–மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.
    தேவகோட்டை

    தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கமலேஸ்வரன் மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டார். திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தமீம் அன்சாரி, சண்முகநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுதா, தேவகோட்டை அக்பர் தெரு அங்கன்வாடி உதவியாளர் சரளா ஆகியோர் மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பாக எடுத்து கூறினர்.
    இளையான்குடி அருகே வீட்டின் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்து நகைகள், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரியாண்டிபுரத்தை சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சிகப்பி. 2–வது மனைவி முத்துப்பிள்ளை(வயது 57). குருசாமி தனது முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அரியாண்டிபுரத்தில் வசித்து வருகிறார். அவரது 2–வது மனைவியான முத்துப்பிள்ளை மட்டும் அருகில் உள்ள சிறுபாலை கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். அவ்வப்போது குருசாமி இவரை கவனித்து வந்தார். மேலும் முத்துப்பிள்ளை மாற்றுத்திறனாளி என்பதால், அதற்கான பணப்பலன்களை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு முத்துப்பிள்ளை வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். மேலும் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    பின்னர் மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் முத்துப்பிள்ளை வீட்டின் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதனால் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, முத்துப்பிள்ளை பிணமாக கிடந்தார். உடனடியாக இதுகுறித்து இளையான்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இளையான்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் ஏற்படும் குடிநீர் பிரச்சினையை சரிசெய்ய வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் மாவட்டத்தில் வறட்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்கு ஆங்காங்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் குறித்த விவரங்களை சேகரித்து அரசிற்கு அனுப்பி வைக்கவும், அவைகளை சரி செய்யவும் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காகாணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட அளவிலான குழுவின் கண்காணிப்பு அலுவலராக ஊராட்சிகள் உதவி இயக்குனர் நியமிக்கபட்டுள்ளார்.

    எனவே பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட அளவில் 74026 08352 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077–ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இதேபோல் வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே வட்டார அளவில் புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அந்தந்த வட்டார அளவில் புகார் தெரிவிக்கலாம்.

    அதன்படி சிவகங்கை 99658 78653, காளையார்கோவில் 94436 09150, மானாமதுரை 94863 26263, திருப்புவனம் 94426 73654, இளையான்குடி 95977 28877, தேவகோட்டை 94427 63969, கண்ணங்குடி 94429 86661, சாக்கோட்டை 97890 13035, கல்லல் 95857 03999, திருப்பத்தூர் 80563 25010, சிங்கம்புணரி 95973 86711, எஸ்.புதூர் 74029 08107 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள கீழபூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 53). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகிறார். அவ்வப்போது சொந்த ஊரில் உள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வார்.

    இதனால் பல நாட்கள் வீடு பூட்டியே கிடக்கும். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்தனர். பின்னர் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் பீரோவில் இருந்த நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த சொக்கலிங்கம் ஊருக்கு வந்து பார்த்தபோது 2½ பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மதகுப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    ×