என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சாக்கோட்டை அருகே சீட்டுப்பணத்தகராறில் தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே உள்ள பெத்தாட்சி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராணி (வயது 23). இவருக்கும், அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    தற்போது கர்ப்பமாக உள்ள விஜயராணி, தாய்வீடு வந்துள்ளார். கடந்த 11-ந் தேதி மனைவியை பார்க்க வந்த முருகன், சீட்டுப்பணம் கொடுக்க வேண்டும் என ரூ. 500 வாங்கிச் சென்றாராம்.

    ஆனால் அந்த பணத்தை சீட்டுக்கு கொடுக்காமல் முருகன் செலவு செய்து விட்டார். இதனால் மறுநாள் மனைவியை மீண்டும் சந்தித்த அவர், சீட்டுக்காக மீண்டும் பணம் கேட்டார். அவரின் நடவடிக்கையில் ஆத்திரம் அடைந்த விஜயராணி, கணவரை கண்டித்தார்.

    இதில் மனவேதனை அடைந்த முருகன், பாலில் எலிமருந்து (வி‌ஷம்) கலந்து குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முருகன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் திருமணத்திற்கு மறுத்ததால் கைது செய்யப்பட்டார்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி ஓருவருக்கு கல்குறிச்சியைச் சேர்ந்த வாலிபர் கார்த்திக் (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    மானாமதுரை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த கார்த்திக், மாணவியிடம்நெருங்கி பழகி உள்ளார்.

    அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் கார்த்திக் பாலியல் உறவு வைத்துள்ளார். இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

    இது தெரிய வந்ததும், திருமணம் செய்யும் படி கார்த்திக்கிடம் அவர் வலியுறுத்தினார். ஆனால் கார்த்திக் காலம் கடத்தி வந்தார்.

    இதற்கிடையில் வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை, பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தபோது தான், மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை தொடர்ந்து மாணவியை திருமணம் செய்யும்படி கார்த்திக்கிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திருமணம் செய்ய கார்த்திக் மறுத்துள்ளார்.

    இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அமிர்தம், சப்-இன்ஸ்பெக்டர் சேதுபாமா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவியை ஏமாற்றியதாக கார்த்திக் கைது செய்யப்பட்டார்.
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் நிலத்தடி நீரை வற்றச் செய்யும் கருவேல மரங்கள் அதிக அளவில் உள்ளது. அப்பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குறைந்த அளவே கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது.

    மானாமதுரை:

    மானாமதுரை அருகே வைகை ஆற்றங்கரை பகுதியில் உள்ள முத்தனேந்தல், இடைக் காட்டூர், சிறுகுடி, பதினெட்டாங்கோட்டை, பச்சேரி, வேம்பத்தூர், மிக்கேல் பட்டணம், புதுக்குளம், பெரியகோட்டை உள்பட சுமார் 50 கிராம பகுதியில் வைகையாற்று பாசனம் போக கிணற்று நீர் பாசனம் மூலம் தென்னை, கரும்பு, நெல், வாழை மற்றும் தோட்ட பயிர்கள், விவசாயம் நடைபெறும் பகுதிகள் ஆகும்.

    இப்பகுதி முழுவதும் அடர்ந்த கருவேல மரங்கள் காடுகள் போல் பரவி வளர்ந்து வருகிறது. வைகை ஆற்றின் துணை ஆறான உப்பாற்றில் அதிக அளவு கருவேல மரங்கள் வளர்ந்து வருகிறது. அடர்ந்து வளரும் கருவேல மரங்கள் மூலம் நிலத்தடி நீர் குறைவதாக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

    வைகையாற்றில் குடிநீர் ஊற்றுகள் வறண்டதால் பல கிராமங்களுக்கு செல்லும் வைகை கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்படாமல் குடிநீர் விநியோகம் நின்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    போர்க்கால அடிப்படையில் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டு விவசாயம் நடைபெறும் வைகையாற்று பகுதியில் உள்ள மேற்கண்ட கிராம பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். உப்பாற்றில் செழித்து வளரும் கருவேல மரங்களையும் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த காவலாளி கைது செய்யப்பட்டார்.
    சிவகங்கை:

    மானாமதுரை தாலுகா வேதியனேந்தலில் அரசு மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த விடுதியில் மானாமதுரை அருகே உள்ள கேப்பனூரைச் சேர்ந்த பொருட்செல்வம் (வயது57) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் விடுதியில் தங்கி இருந்த 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் விடுதி வார்டன் இந்திராவிடம் புகார் தெரிவித்தனர். அவர் மானாமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் அமிர்தம் வழக்குப்பதிவு செய்து காவலாளி பொருட்செல்வத்தை கைது செய்தார்.

    சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாதிரியார் பரிதாபமாக இறந்தார். வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் மேலூர் ரோட்டில் மறை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பங்கு தந்தையாக சென்னையை சேர்ந்த சேவியர் ஜெயசீலன் (வயது47) என்பவர் இருந்தார்.

    நேற்று பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சேவியர் ஜெயசீலன் வெளியில் சென்றிருந்தார். இரவு நேரத்தில் மறை மாவட்ட அலுவலகத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    மேலூர் ரோட்டில் சென்ற போது கொட்டக்குடியை சேர்ந்த மலைராஜ் என்பவர் திடீரென ரோட்டை கடக்க முயன்றார். இதில் நிலைதடுமாறிய சேவியர் ஜெயசீலனின் மோட்டார் சைக்கிள் மலைராஜ் மீது மோதியது.

    இந்த விபத்தில் சேவியர் ஜெயசீலனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மலைராஜ் படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சிவகங்கை,விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியது தொடர்பாக ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என புகார்கள் வந்தன. இதை கண்டித்தும், ரேசன் கடையில் பொருட்களை சரியாக விநியோகிக்க வலியுறுத்தியும் இன்று மாநில முழுவதும் தி.மு.க. சார்பில் ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 526 ரேசன் கடைகள் முன்பு அந்தந்த பகுதி தி.மு.க. கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அரளிக்கோட்டை, திருப்பத்தூரில் உள்ள ரேசன் கடைகள் முன்பு மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    இளையான்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் நகர செயலாளர் குணசேகரன், பிரேமலதா செந்தில், பொருளாளர் துரைராஜ், முன்னாள் சேர்மன் முத்துதுரை, சங்கராபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மாங்குடி, சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடியில் 36 வார்டு ரேசன் கடைகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முதற்கட்டமாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


    இந்த நிலையில் சில பகுதிகளில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். அதன்படி சிவகங்கை நகர செயலாளர் துரைஆனந்த், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெய ராமன் உள்ளிட்ட 100-க் கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 379 ரேசன் கடைகளில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பந்தல்குடியில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையிலும், மல்லாங்கிணற்றில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையிலும், விருதுநகர் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையொட்டி பெரும்பாலான ரேசன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    ராஜபாளையம் அருகே முகவூரில் கூட்டுறவு வங்கி அருகில் உள்ள ரேசன் கடை முன்பு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.

    ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தில் உள்ள ரேசன் கடை முன்பு நகர செயலாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.

    ராமநாதபுரத்தில் 732 ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பேராவூரில் உள்ள ரேசன் கடை முன்பு மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கீழக்கரையில் நகர செயலாளர் பசீர் அகமது, முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் சாகுல்அமீது ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேசுவரம், தொண்டி, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள ரேசன் கடை முன்பு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து இவர்கள் மம்சாபுரம் ரேசன் கடை முன்பும் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மணிமாறன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

    குடும்ப பிரச்சினையில் விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தங்கையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சொக்கையன்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 40), விவசாயி. இவரது தங்கை தமிழரசிக்கும், அவரது கணவர் பசுபதிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

    இதில் தமிழரசி கோபித்துக்கொண்டு அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வருவார். அப்போது பாண்டி, சமரசம் பேசி தங்கையை கணவர் வீட்டில் விட்டு விட்டுவருவார்.

    இந்த நிலையில் நேற்று தமிழரசி சொக்கையன் பட்டியில் இருந்தபோது அங்கு வந்த கணவர் பசுபதியுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பாண்டி, பசுபதியை கண்டித்துள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பசுபதி திடீரென அவரை கல்லால் சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த பாண்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தார்.

    மானாமதுரையில் 2 மகள்களுடன் தாய் மாயமானார். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மானாமதுரை:

    மானாமதுரை பாகபத் அக்ரகாரம் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். பரமக்குடி பஸ் நிலையத்தில் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி சரண்யா (வயது 25). இவர்களுக்கு மகாலட்சுமி (6), யோகலட்சுமி (5) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    4 தினங்களுக்கு முன்பு சரண்யா, கணவருடன் கோபித்துக் கொண்டு 2 மகள்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார். 3 பேரும் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இது குறித்து சரவணன், மானாமதுரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய், மற்றும் 2 மகள்களையும் தேடி வருகிறார்கள்.

    கடைவீதிக்கு குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்த மர்ம வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    காளையார்கோவில் தாலுகா, சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி (29). இவர் குழந்தையுடன் வீட்டில் இருந்து சாமான்கள் வாங்க கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் முத்து மாரியை வழிமறித்து அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து முத்துமாரி, காளையார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறித்த மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா இளமனூரைச் சேர்ந்தவர் சின்னபொண்ணு (55). இவரும், இவரது மாமியார் இருளாயியும் (74) நேற்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் இருளாயி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.

    இது குறித்து மருமகள் சின்னபொண்ணு கொடுத்த புகாரின் பேரில், இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஜோலார்பேட்டையில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த பட்டதாரி பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரை கொன்று தூக்கில் தொங்க விட்டதாக ஆயுதப்படை போலீஸ்காரர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்னம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). சென்னையில் ஆயுதப்படை போலீஸ்காரராக உள்ளார்.

    இவருக்கு தாய்மாமன் பேத்தியான புளியங்கொட்டை பகுதியை சேர்ந்த ராஜவேல் என்பவரது மகள் செந்தமிழ்செல்வியை பெண் பார்த்தனர்.

    டிப்ளமோ பட்டதாரியான செந்தமிழ்செல்வி பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார். பிரபாகரனுக்கு செந்தமிழ் செல்வியை திருமணம் செய்து வைக்க ராஜவேல் மற்றும் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.

    எனவே திருமண பேச்சு அப்படியே நின்று போனது. ஆனால் செல்போனில் செந்தமிழ் செல்வியை பிரபாகரன் அடிக்கடி தொடர்பு கொண்டு நட்பை வளர்த்ததாக தெரிகிறது.

    இது காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து செந்தமிழ் செல்வியின் பெற்றோருக்கு தெரியாமல் பிரபாகரன் செந்தமிழ்செல்வியை கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஜலகாம்பாறை கோவிலில் திருமணம் செய்தார்.

    தங்கள் மகள் பெங்களூருவில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக செந்தமிழ் செல்வியின் பெற்றோர் நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் செந்தமிழ் செல்வி வக்னம்பட்டிக்கு வந்து பிரபாகரனுடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை செந்தமிழ்செல்வியின் பெற்றோருக்கு பிரபாகரன் போன் செய்தார். உங்கள் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், உடல் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் கூறினார்.

    தகவல் கேட்டு செந்தமிழ் செல்வியின் தந்தை ராஜவேல் மற்றும் உறவினர்கள் பதறிப் போனார்கள். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் சென்று பார்த்தனர். அங்கு பிரபாகரன் இல்லை. தலைமறைவாகிவிட்டார்.

    மேலும் செந்தமிழ்செல்வியின் முகத்தில் காயம் இருந்தது. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக செந்தமிழ் செல்வியின் உறவினர்கள் புகார் கூறினர்.

    இது தொடர்பாக பிரபாகரன் மீது ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் செந்தமிழ்செல்வியின் தந்தை ராஜவேல் புகார் செய்தார். போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் செந்தமிழ்செல்விக்கு திருமணம் ஆகி 1 மாதமே ஆவதால் திருப்பத்தூர் உதவி கலெக்டர் கார்த்திகேயனும் விசாரணை நடத்தி வருகிறார். பிரபாகரன் கோடியூர், ஆம்பூர் பகுதியை சேர்ந்த மேலும் 2 பெண்களையும் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது செந்தமிழ்செல்விக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அதன் தொடர்ச்சியாக செந்தமிழ் செல்வி இறந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அல்லது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள பிரபாகரனை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருக்கோஷ்டியூர் அருகே பிராமணன்பட்டி கிராமத்தில் 82 குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டதால் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பால் 5 தினங்களாக ரேசன் கடை மூடப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே பிராமணன்பட்டியில் ரேசன் கடை உள்ளது. இக்கடையில் மொத்தம் 429 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இம்மாதம் 82 அட்டைதாரர்கள் பெயரி நீக்கப்பட்டதாகவும், ரேசன் கடையில் பொருட்கள் ஏதும் வழங்க முடியாது என்று ரேசன் கடை விற்பனையாளர் கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ரேசன் கடையில் கேட்டதற்கு உங்களது பெயர்கள், வருமானம் அதிகம் உள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் ரேசன் கடை பொருட்கள் வழங்கக்கூடாது என்று உத்தரவு வந்துள்ளதாக கூறினார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரேசன் கார்டு பயனாளிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவார்கள்.

    இதனால் பிராமணன் பட்டியில் உள்ள 429 ரேசன் அட்டைதாரர்களுக்கு நீக்கப்பட்ட 82 பேருக்கு பொருட்கள் வழங்கினால் நாங்கள் வாங்குவோம். அதுவரை பொருட்கள் வழங்கக்கூடாது என்று கூறி ரேசன் கடையை முற்றுகையிட்டனர். இதனால் ரேசன் கடை பூட்டப்பட்டது.
    மானாமதுரையில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சோமசுந்தரம் காலனியில் வசிப்பவர் நாச்சியப்பன். இவர் கடந்த 3-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 9 பவுன் நகை, ரூ. 21 ஆயிரம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

    வீடு திறந்து கிடந்ததை பார்த்து பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் இது குறித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    ×