என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணக்கோலத்தில் செந்தமிழ் செல்வி-பிரபாகரன்.
    X
    மணக்கோலத்தில் செந்தமிழ் செல்வி-பிரபாகரன்.

    பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த பட்டதாரி பெண் மர்மச்சாவு: போலீஸ்காரர் மீது புகார்

    ஜோலார்பேட்டையில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த பட்டதாரி பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரை கொன்று தூக்கில் தொங்க விட்டதாக ஆயுதப்படை போலீஸ்காரர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்னம்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). சென்னையில் ஆயுதப்படை போலீஸ்காரராக உள்ளார்.

    இவருக்கு தாய்மாமன் பேத்தியான புளியங்கொட்டை பகுதியை சேர்ந்த ராஜவேல் என்பவரது மகள் செந்தமிழ்செல்வியை பெண் பார்த்தனர்.

    டிப்ளமோ பட்டதாரியான செந்தமிழ்செல்வி பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார். பிரபாகரனுக்கு செந்தமிழ் செல்வியை திருமணம் செய்து வைக்க ராஜவேல் மற்றும் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை.

    எனவே திருமண பேச்சு அப்படியே நின்று போனது. ஆனால் செல்போனில் செந்தமிழ் செல்வியை பிரபாகரன் அடிக்கடி தொடர்பு கொண்டு நட்பை வளர்த்ததாக தெரிகிறது.

    இது காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து செந்தமிழ் செல்வியின் பெற்றோருக்கு தெரியாமல் பிரபாகரன் செந்தமிழ்செல்வியை கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஜலகாம்பாறை கோவிலில் திருமணம் செய்தார்.

    தங்கள் மகள் பெங்களூருவில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக செந்தமிழ் செல்வியின் பெற்றோர் நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் செந்தமிழ் செல்வி வக்னம்பட்டிக்கு வந்து பிரபாகரனுடன் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை செந்தமிழ்செல்வியின் பெற்றோருக்கு பிரபாகரன் போன் செய்தார். உங்கள் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், உடல் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் கூறினார்.

    தகவல் கேட்டு செந்தமிழ் செல்வியின் தந்தை ராஜவேல் மற்றும் உறவினர்கள் பதறிப் போனார்கள். திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்கள் சென்று பார்த்தனர். அங்கு பிரபாகரன் இல்லை. தலைமறைவாகிவிட்டார்.

    மேலும் செந்தமிழ்செல்வியின் முகத்தில் காயம் இருந்தது. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக செந்தமிழ் செல்வியின் உறவினர்கள் புகார் கூறினர்.

    இது தொடர்பாக பிரபாகரன் மீது ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் செந்தமிழ்செல்வியின் தந்தை ராஜவேல் புகார் செய்தார். போலீசார் மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் செந்தமிழ்செல்விக்கு திருமணம் ஆகி 1 மாதமே ஆவதால் திருப்பத்தூர் உதவி கலெக்டர் கார்த்திகேயனும் விசாரணை நடத்தி வருகிறார். பிரபாகரன் கோடியூர், ஆம்பூர் பகுதியை சேர்ந்த மேலும் 2 பெண்களையும் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது செந்தமிழ்செல்விக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அதன் தொடர்ச்சியாக செந்தமிழ் செல்வி இறந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அல்லது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள பிரபாகரனை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×