என் மலர்
ராணிப்பேட்டை
சோளிங்கர் அருகே நீர்நிலைபகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் பகுதியில் உள்ள நெட்டேரி, பெரிய ஏரி பகுதிகளில் 2.6 ஹெக்டர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் 8 வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக சோளிங்கர் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரதுறை உதவி பொறியாளர் சேரலாதனுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சோளிங்கர் வருவாய் துறையினர் மூலம் நெட்டேரி, பெரிய ஏரி பகுதியில் ஆக்ரமிப்பு செய்திருந்த பகுதிகளை அளவிட்டனர். அதனை தொடர்ந்து தாங்களாக முன் வந்தது ஆக்ரமிப்புகளை அகற்ற கால அவகாசத்தை சோளிங்கர் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரதுறையினர் அளித்தனர்.
இந்நிலையில் நேற்று சோளிங்கர் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரதுறை உதவி பொறியாளர் சேரலாதன் தலைமையில் சோளிங்கர் வட்டாட்சியர் வெற்றி குமார், வருவாய் ஆய்வாளர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர் சங்கர், கொண்டபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் நெட்டேரி, பெரிய ஏரி ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து செய்திருந்த 2.6 ஹெக்டர் நிலத்தையும் நிலத்தை சுற்றி இருந்த அமைந்திருந்த வேலி மற்றும் வரப்புகளை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றி நீர்பிடிப்பு நிலத்தை பொதுப்பணித்துறை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
நெட்டேரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதே நீர்பிடிப்பு பகுதியில் ஐந்து வீடுகளில் மின் இணைப்புகளும், பெரிய ஏரி பகுதியில் மூன்று வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் இனி வரும் காலங்களில் பொதுப்பணித்துறையில் சொந்தமான ஏரி ஏரி கால்வாய், நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் சேரலாதன் எச்சரித்தார்.
ஆற்காட்டில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்செய்யப்பட்டது.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் சப்&இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகப்படும் படியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட வேனை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 50 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் 3 டன் ரேசன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில் வேன் டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டு பகுதியைச் சேர்ந்த சான்ட்டோ பீட்டர் (வயது 29) என்பது தெரியவந்தது.
அவரையும், அரிசி கடத்தலுக்கு உதவிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலை ஆனந்தராஜ் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிக்கபடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அதற்கு மாவட்ட கலெக்டர் பதிலளிக்கையில், யாரிடமும் கூடுதலாக தொகை எதுவும் அளிக்கத் தேவையில்லை, அது சம்பந்தமாக புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் குத்தகைதாரர் அனைவரும் பதிவுத்துறை மூலம் பதிவு செய்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றார்.
அத்துமீறும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலாற்றில் அமோனியா அளவு அதிகமாக கலப்பதை தடுக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,
உரங்கள் வாங்கும் பொழுது வேறு பொருட்களை திணிப்பதை தடுக்க வேண்டும், சிப்காட் மற்றும் தோல் கம்பெனிகள் மூலம் உருவாகும் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நிலம் மற்றும் நீர் மாசு அடைகிறது, இதனை கட்டுப்படுத்தி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வைத்தனர்.
கூட்டத்தில் வேளாண்மை விற்பனை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம், மின்சார வாரிய துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பட்டு வளர்ச்சித்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மற்றும் வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.
ரத்தினகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரியை அடுத்த தென்னந்தியலம் பகுதியை சேர்ந்தவர் கிரி பாபு (வயது 31). இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஆபத்தான நிலையில் இருந்த இவரை மீட்டு மேல்விசாரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டையில் குறைதீர்வு கூட்டத்தில் 250 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, போலீசார், ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சி துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மருத்துவத்துறை, கிராம பொது பிரச்சினைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநல மனுக்கள் என 260 மனுக்கள் பெறப்பட்டது.
அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கப்பட்டு, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு உடனடியாக தெரிவித்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
காவேரிப்பாக்கம் அருகே ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணி துறை கடுப்பாட்டில் ஏரி உள்ளது.
இந்த ஏரியில் அதே பகுதிகளை சேர்ந்த சில விவசாயிகள் ஏரியின் இடத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.
இந்த ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த ரூ.40 லட்சம் அரசு நிதி ஒதிக்கியுள்ளது.
இதனால் ஏரியின் ஆக்கிரமிப்பு இடங்களை நெமிலி தாசில்தார் ரவி முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில், 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் இளைஞர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமிற்கு வரும் அவர்கள் தங்களது சுய விவரம், ஆதார் அட்டை, அடையாள அட்டையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த முகாம் இன்று (செவ்வாய்க்கிழமை) நெமிலி, சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடந்தது.
நாளை (புதன்கிழமை) ஆற்காடு, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், வருகிற 31&ந் தேதி வாலாஜா, காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகங் களிலும் நடைபெறுகிறது. வருகிற 6-ந் தேதி அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு விழா நடைபெற உள்ளது.
ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொள்ள இருப்பதால் வேலை நாடுபவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
ஆற்காட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆற்காடு:
சுதந்திர தின விழாவை யொட்டி ஆற்காட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆற்காடு டெல்லி கேட் நினைவு சின்னத்தில் இருந்து 75-வது சுதந்திர தின விழாவை யொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் சுமார் 300 பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு, ஆற்காடு பைபாஸ், பழைய மேம்பாலம், பழைய ராணிப்பேட்டை பஸ் நிலையம் வழியாக முத்துக்கடைக்கு வந்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நெமிலி ஒன்றியக்குழு கூட்டத்தில் மகளிர் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர்கல் கூட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
முக்கியமாக கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் பகுதிகளில் முன்கூட்டியே அவசரகால நடவடிக்கையாக எடுக்கப்பட வேண்டும் என ஒன்றியக்குழு சேர்மன் வடிவேலு தெரிவித்தார்.
மேலும் நெமிலியில் மகளிர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டையில் ரவுடிகள் மற்றும் கஞ்சாவை ஒழிக்க நேற்று முன்தினம் முதல் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அரகோணம் சப்-டிவிஷனில் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 2 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் நேற்று அரக்கோணம் பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். இதில் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம், அகன் நகரை சேர்ந்த முருகேச பாபு (வயது 29),
அரக்கோணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வாலி (24) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வதாக கூறி அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் வாலி என்பவர் அம்பேத்கர் நகர் ஜெயசூர்யாவிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக கூறினார். அதன்பேரில் ஜெயசூர்யா (24) அரக்கோணம் திருமலை ஆச்சாரி தெருவில் ரியாஸ் (19) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சப்-இன்ஸ் பெக்டர் கணேசன் போலீஸ் காரர்கள் கவியரசன், ஏழுமலை ஆகியோர் ரியாஸ் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கு உள்ள மொட்டை மாடியில் போலீசார் சோதனை செய்தனர் அங்கு வெறும் பீர் பாட்டில்களும் செருப்புகளும் மட்டுமே கிடந்ததால் எதுவும் இல்லை என நினைத்து இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாடியில் இருந்து கீழே இறங்கி விட்டனர்.
ஆனால் போலீஸ்காரர்கள் சந்தோஷ், ஏழுமலை மற்றும் ஜெயசூர் ஆகியோர் மொட்டை மாடிக்கு பக்கத்தில் இருந்த பள்ளமான இன்னொரு இடத்தில் தேடினர். அங்கு ஒரு கருப்பு நிற பை இருந்தது. அதில் மருந்துகள் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன.
அந்த பையில் கையை விட்டு ஜெயசூர்யா தேடியுள்ளார். பையில் பந்து போன்ற ஒரு பொருள் இருந்தது அதை எடுத்து போலீசாரிடம் கொடுக்கும் போது கை தவறி கீழே விழுந்தது.
அந்த பொருள் டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஜெய சூர்யா படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது போலீஸ்காரர் ஏழுமலைக்கு மணிக்கட்டுப் பகுதியில் நரம்பு துண்டானது இன்னொரு
போலீஸ்காரர் சந்தோஷ் வலது கையில் காயம் ஏற்பட்டது.
மாடியில் இருந்து இறங்கி சென்ற இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் சத்தம் கேட்டதும் மீண்டும் மாடிக்கு ஓடி வந்தனர். அங்கு 2 போலீஸ்காரர் உட்பட 3 பேர் ரத்த காயத்துடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக 3 பேரையும் ஆட்டோவில் ஏற்றி அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தகவலறிந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்ட் தீபா சத்தியன், டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்து நடந்த இடத்தில் மரத்துகள்கள் பீர் பாட்டில்கள் உடைந்து கிடந்தன இவற்றை தடவியல் நிபுணர்கள் சேகரித்துச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் அரக்கோணம் பகுதியில் ரியாஸ் வீடு மற்றும் சந்தேகப் படும்படியான இடங்களில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்குள்ள வீடுகளில் கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் அரக்கோணத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறதா நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாட்டு குண்டு வெடித்த வழக்கில் கஞ்சா வியாபாரி ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கலவை:
வேலூர் சத்துவாச்சாரியில் சமீபத்தில் பெண் டாக்டர் ஒரு வரை ஆட்டோவில் கடத்தி சென்று பலர் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் எதிரொலியால் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவுப்படி கலவை போலீஸ் சார்பில் இன்ஸ் பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல் ஆகிய பகுதியில் இருந்து ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகன டிரைவர்களை போலீசார் அழைத்து வந்து அவர்களுக்கு கலவை போலீஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
வாகனங்களில் சந்தேகப்படும்படி யாரேனும் சென்றாலும், பெண்கள் தனியாக சென்றாலும் அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்டோ டிரைவர்கள் தங்களின் வாகன ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி அறிவுறுத்தினார்.
பாணாவரம் அருகே புதுப்பென் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த சூரை கிராமம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (26).
இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் லிப்ட் ஆப்பரேட்டிங் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி பூர்ணிமா (19). இருவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சூரை கிராமத்தில் உள்ள தங்கள் நிலத்தின அருகே உள்ள மரத்தில் பூர்ணிமா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 1 வருடமே ஆனதால் அரக்கோணம் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் மற்றும் ராணிப்பேட்டை ஆர்.டி.ஓ. பூங்கொடி ஆகியோர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.






