என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயமடைந்தவர்களை போலீசார் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
    X
    காயமடைந்தவர்களை போலீசார் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

    வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் காயம்

    வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டையில் ரவுடிகள் மற்றும் கஞ்சாவை ஒழிக்க நேற்று முன்தினம் முதல் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    அரகோணம் சப்-டிவிஷனில் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 2 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் நேற்று அரக்கோணம் பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். இதில் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம், அகன் நகரை சேர்ந்த முருகேச பாபு (வயது 29),

     அரக்கோணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வாலி (24) ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வதாக கூறி அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

    இதில் வாலி என்பவர் அம்பேத்கர் நகர் ஜெயசூர்யாவிடம் இருந்து கஞ்சா வாங்கியதாக கூறினார். அதன்பேரில் ஜெயசூர்யா (24) அரக்கோணம் திருமலை ஆச்சாரி தெருவில் ரியாஸ் (19) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக   போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

    இது குறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சப்-இன்ஸ் பெக்டர் கணேசன் போலீஸ் காரர்கள் கவியரசன், ஏழுமலை  ஆகியோர் ரியாஸ் வீட்டுக்குச் சென்றனர். 

    அங்கு உள்ள மொட்டை மாடியில் போலீசார் சோதனை செய்தனர் அங்கு வெறும் பீர் பாட்டில்களும் செருப்புகளும் மட்டுமே கிடந்ததால் எதுவும் இல்லை என நினைத்து இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மாடியில் இருந்து கீழே இறங்கி விட்டனர். 

    ஆனால் போலீஸ்காரர்கள் சந்தோஷ், ஏழுமலை மற்றும் ஜெயசூர் ஆகியோர் மொட்டை மாடிக்கு பக்கத்தில் இருந்த பள்ளமான இன்னொரு இடத்தில் தேடினர். அங்கு ஒரு கருப்பு நிற பை இருந்தது. அதில் மருந்துகள் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன.

    அந்த பையில் கையை விட்டு ஜெயசூர்யா தேடியுள்ளார். பையில் பந்து போன்ற ஒரு பொருள் இருந்தது அதை எடுத்து போலீசாரிடம் கொடுக்கும் போது கை தவறி கீழே விழுந்தது.

    அந்த பொருள் டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஜெய சூர்யா படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது போலீஸ்காரர் ஏழுமலைக்கு மணிக்கட்டுப் பகுதியில் நரம்பு துண்டானது இன்னொரு 
    போலீஸ்காரர் சந்தோஷ் வலது கையில் காயம் ஏற்பட்டது. 

    மாடியில் இருந்து இறங்கி சென்ற இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் சத்தம் கேட்டதும் மீண்டும் மாடிக்கு ஓடி வந்தனர். அங்கு 2 போலீஸ்காரர் உட்பட 3 பேர் ரத்த காயத்துடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனடியாக 3 பேரையும் ஆட்டோவில் ஏற்றி அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தகவலறிந்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்ட் தீபா சத்தியன், டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்து நடந்த இடத்தில் மரத்துகள்கள் பீர் பாட்டில்கள் உடைந்து கிடந்தன இவற்றை தடவியல் நிபுணர்கள் சேகரித்துச் சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை முதல் அரக்கோணம் பகுதியில் ரியாஸ் வீடு மற்றும் சந்தேகப் படும்படியான இடங்களில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    அங்குள்ள வீடுகளில் கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர். 

    மேலும் போலீசார் அரக்கோணத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறதா நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாட்டு குண்டு வெடித்த வழக்கில் கஞ்சா வியாபாரி ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×