என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்த போது எடுத்த படம்.
ராணிப்பேட்டையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டர்
ராணிப்பேட்டையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிக்கபடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அதற்கு மாவட்ட கலெக்டர் பதிலளிக்கையில், யாரிடமும் கூடுதலாக தொகை எதுவும் அளிக்கத் தேவையில்லை, அது சம்பந்தமாக புகார் அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் குத்தகைதாரர் அனைவரும் பதிவுத்துறை மூலம் பதிவு செய்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றார்.
அத்துமீறும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலாற்றில் அமோனியா அளவு அதிகமாக கலப்பதை தடுக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,
உரங்கள் வாங்கும் பொழுது வேறு பொருட்களை திணிப்பதை தடுக்க வேண்டும், சிப்காட் மற்றும் தோல் கம்பெனிகள் மூலம் உருவாகும் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நிலம் மற்றும் நீர் மாசு அடைகிறது, இதனை கட்டுப்படுத்தி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வைத்தனர்.
கூட்டத்தில் வேளாண்மை விற்பனை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம், மின்சார வாரிய துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பட்டு வளர்ச்சித்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மற்றும் வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Next Story






