என் மலர்
ராணிப்பேட்டை
சிப்காட் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் அருகே உள்ள புளியந்தாங்கல் கிராமம் பஜனைகள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (50) பந்தல் அமைப்பாளர்.
இவர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் குடி போதையில் சிப்காட் அண்ணா நகர் 5வது தெருவைச் சேர்ந்த ஆண்டனி (34) என்பவரை குடிபோதையில் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆன்டனி நேற்று மாலை சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பார்த்தசாரதி சப்-இன்ஸ்பெக்டர் தாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் மாணவரிடம் விசாரணை சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றம் ெசய்யபட்டுள்ளனர்.
ராணிபேட்டை:
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் தங்கமணி, சென்னையில் விக்னேஷ் ஆகியோர் சட்ட விரோத காவலில் உயிரிழந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடியும் வரை அவசியம் இல்லாமல் விசாரணைக்காக இரவு நேரங்களில் சட்ட விரோத காவலில் வைத்து விசாரிக்கக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பதிலாக அவரது மகனை அழைத்து வந்து சட்ட விரோதமாக போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
கல்லூரியில் படிக்கும் அந்த மாணவரின் நிலை குறித்த தகவல் மாவட்ட காவல் நிர்வாகத்துக்கு புகாராக சென்றது. இது தொடர்பான விசாரணையில், கல்லூரி மாணவரை அவசியமே இல்லாமல் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தது உறுதி செய்யப்பட்டது.
இதற்கு சப் இன்ஸ்பெக்டர் பசலைராஜ் மற்றும் காவலர்கள் சுந்தரபாண்டியன், பரத் என்று தெரியவந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பசலைராஜை திருப்பத்தூர் மாவட்டத்துக்கும், காவலர்கள் இருவரையும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இந்த பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து சப் இன்ஸ்பெக்டர் பசலைராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்து வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கவனக்குறைவாகவும் பணியில் மெத்தனமாக இருந்ததாக எழுந்த புகாரில் சோளிங்கர் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தனிப்பிரிவில் இருந்து விடுவிக்க பட்டார்.
அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி வட மாநில வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
அரக்கோணம் அடுத்த அம்மனூர் பெரிய ஏரியில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் 30 வயது மதிக்க தக்க நபர் ஒருவர் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றபோது திடீரென நீரில் மூழ்கினார். இதனை கண்ட அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தவர்கள் இது குறித்து அரக்கோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக தேடியும் உடல் கிடைக்காததால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆழ்நிலை நீர் மூழ்கி வீரர்களுடன் 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் சம்பவம் நடந்த ஏரியில் தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடலுக்கு பின் மாலை 4 மணியளவில் 15 மணி நேரத்திற்கு பின் பிணமான வாலிபர் உடலை மீட்டனர்.
மேலும், அரக்கோணம் டவுன் போலீசார் சடலத்தை கைபற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தினர்.
மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபர் என்றும் கடந்த சில நாட்களாக அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதி மற்றும் அம்மனூர் பகுதிகளில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எப்படி இப்பகுதிக்கு வந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெமிலி:
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அரக்கோணம் முதல் திருவள்ளூர் ரெயில் நிலையம் வரை பயணி களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று கடம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய ரெயில் நிலையங்களில் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வது, ரெயில்கள் மீது கற்களை வீசுவது, தண்டவாளத்தை கடந்து செல்வது, தண்டவாளம் முன்பு நின்று கொண்டு ‘செல்பி’ எடுப்பது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது.
மேலும், ரெயில்வேவுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களிலும் பொது மக்கள் ஈடுபடக்கூடாது, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை:
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே சில இடங்களில் வெப்பச் சலனம் வளிமண்டல மேலடுக்கு கீழடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலினால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அவதிக்குள்ளாகி இருந்தனர்.
இந்நிலையில் அசாணி புயல் தீவிரமடைந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
இதே போன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு விவரம்:-
அரக்கோணம் : 8.6
ஆற்காடு: 6.2
காவேரிப்பாக்கம்: 13
வாலாஜா: 17.1
அம்மூர்: 4.6
சோளிங்கர்: 17.2
கலவை: 6.2
மொத்தம்: 72.9
அவரேஜ்: 10.41
இதனால் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து சற்று இதமான சூழல் நிலவியதால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடந்தது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கினார். 15 பயனாளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், முழங்கை தாங்கி, செயலிகள் உடன் கூடிய திறன்பேசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் 227 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை, 148 பேருக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு, 157 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அலுவலக பணியாளர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் அருகே தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெமிலி:
அரக்கோணம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான வீரர்கள், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு குறிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எளிதில் தீப்பற்றக்கூடிய உபகரணங்களை பயன்படுத்தும் விதம், எதிர்பாராதவிதமாக தீப்பற்றினால் அதனை எவ்வாறு கையாண்டு தீயை மேலும் பரவாமல் தடுப்பது என்பது பற்றிய செயல்விளக்கம் செய்து காண்பித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் திடீரென ஏற்படும் தீ விபத்தை தடுக்க பதட்டப்படாமல் செயல்பட வேண்டும் எனவும் கூறினர்.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை பெற மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்ட ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயத்தை மேம்படுத்த நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திட ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பம்புகள் உள்ளிட்டவற்றை பொருத்துவதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் 2007-08-ம் ஆண்டுமுதல் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையாக 50 விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ 50,000 வரை அரசால் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் விவசாயிகளின் 482 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வங்கிகள் தெரிவித்த 300 மனுக்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ள 182 மனுக்களை விரைந்து பரிசோதனை செய்யவும், வட்டார அளவில் வங்கியாளர்கள் மற்றும் விவசாயிகள் குழு கூட்டம் நடத்தி விரைந்து பரிசோதனை செய்து கடன் வழங்க வங்கிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகர் மற்றும் வேளாண்மை துறை, தேசிய வங்கி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் அடுத்த ஆயல் கிராமத்தில் அர்ஜுனன் தபசு நிகழ்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம்சோளிங்கர் அடுத்த ஆயல் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் நாள் திருவிழாவில் மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் கூத்து கலைஞர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டைக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று திரவுபதி அம்மனுக்கும் அர்ஜுனனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
மகாபாரதத்தின் கதை படி அர்ஜுனன் தபசு மரத்தின் உச்சியில் தவமிருந்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை, குங்குமம், மஞ்சள், மாங்கல்ய கயிறு, வில்வம் இலை உள்ளிட்ட பொருட்களை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி தபசு வழிபாடு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வாரம் தோறும் நடைபெறும் இக்கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறைகளில் மற்ற துறைகளில் இருந்து கிடைக்க வேண்டிய அனுமதிகள், பிரச்சனைகளை தீர்வு காண்பது குறித்து கலந்து ஆலோசித்து கொள்ள இக்கூட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாவட்ட நிலை அலுவலர்கள் கண்டிப்பாக இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதை அடுத்தவாரம் முதல் உதவி செய்ய வேண்டும். 3 மாவட்டங்களுக்கும் இணைந்து மாவட்ட நிலை அலுவலர் வேலூர் இருந்தால் அவர் மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயமாக பங்கேற்க வேண்டும்.இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அவர்களுக்கு தெரிவித்து கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். மேலும் மாவட்ட நிலை அலுவலர்கள் கட்டாயமாக அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க கூடாது. மாவட்ட நிலை அலுவலர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
பல்வேறு துறைகளில் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதனை தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் நீதிமன்ற வழக்குகள் அனைத்து துறைகளும் அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
நீதிமன்ற வழக்குகளை விரைவாக முடித்தால் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆளுமை துறை சார்ந்த அலுவலர்கள் நீதிமன்ற வழக்குகளை நிலுவையில் வைத்துள்ளதை வாரம்தோறும் அறிக்கை சமர்ப்பித்து, அதற்கான மேல் நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள், குழந்தை திருமணங்கள் தடுத்தல் இவற்றைக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட துறைகள் அப்பகுதிகளில் சென்று ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
அதற்கான குழு கூட்டம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு குழந்தை திருமணங்கள் நடப்பதை தவிர்க்கவும், அதேபோன்று பள்ளி செல்லா குழந்தைகள் எவ்வளவு என்பதை கணக்கெடுத்து அதற்கு பின்னர் எடுத்த நடவடிக்கை விவரம் கணக்கெடுக்க வேண்டும். இதனை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்தால் பிரச்சினைகள் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகளை மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனுக்கள் மீது உடனடி நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை, பட்டா, குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பொதுநலன் குறித்த மனுக்கள் என 265 மனுக்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களிடம் இருந்து பெற்று கொண்டார்.
சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், உதவி கலெக்டர்கள் சேகர், இளவரசி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆற்காடு அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ராணிபேட்டை:
ஆற்காட்டை அடுத்த கீழ்வி ஷாரம் மார்க்க பந்து நகர் பகுதியைச் சேர்ந்த பழனி. இவரது மகன் பிரசாந்த் (வயது 19).
இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.
அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே பிரசாந்த் அணிந்திருந்த துணிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த பழனி ஆற்காடு தீயணைப்பு துறை மற்றும் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் தேடி பிரசாந்தை பிணமாக மீட்டனர்.
மேலும் இது குறித்து ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






