என் மலர்
ராணிப்பேட்டை
சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் ஆதிதிராவிடர் தங்கும் விடுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
சோளிங்கர்:
ராணிபேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
மாணவர் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு தேவையான பொருட்களான மின்விசிறிகள், எல்இடி விளக்குகள், பாய் மற்றும் தலையணை, தண்ணீர் சூடு செய்யும் கருவி, உணவருந்தும் தட்டுகள் உள்ளிட்ட அடிப்படை பொருட்களை வழங்கினார். தற்போது மாணவர்கள் எவ்வாறு படிக்கின்றார்கள் என கேட்டறிந்தார் இம்மையத்தில் 49 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
தற்போது விடுமுறை என்பதால் மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
என விடுதி காப்பாளர் கலெக்டரிடம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து விடுதியின் பக்கத்திலுள்ள மைதானத்தின் எதிரில் குடியிருப்புகளில் இருந்து குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் மதுபான பாட்டில்கள் தூக்கி எறியப்பட்டு இருந்ததை பார்த்து வீட்டின் உரிமையாளர்களுக்கு கலெக்டர் எச்சரித்தார்.
வீட்டு உரிமையாளர்கள் இனி குப்பைகளை தூய்மை பணியாளரிடம் கொடுப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் மைதானத்தில் கொட்ட ப்ப ட்டு இருந்த குப்பைகளை அகற்றி தூய்மை செய்தனர்.
மேலும் மைதானத்தில் உள்ள முட் செடிகளை அகற்றி மாணவர்கள் பயன்படும் வகையில் சீரமைத்து தர உத்தரவிட்டார். மைதானத்தில் சுற்றி மரக்கன்றுகளை நடவு செய்ய அறிவுறுத்தினார்.
அப்போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளவரசி சோளிங்கர் தாசில்தார் வெற்றி குமார் விடுதி காப்பாளர் ராஜேஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
ஓச்சேரி அருகே ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த ஆயர்பாடி கிராமம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன்.இவர் தச்சு வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் சூர்யா (எ) முகேஷ் (22). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சதிஷ் (26).என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் நண்பர்கள் 3 பேருடன் ஓச்சேரிக்கு சென்றுள்ளார்.
அப்போது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் இருந்து கல் மீது ஆட்டோ ஏறியதில் தாறுமாறாக ஓடி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஓச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கிருந்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை பாண்டுரங்கன் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப் இன்ஸ்பெக்டர் மோகன், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் கொன்னம்மா குட்டைத் தெருவை சேர்ந்த சந்தோஷ் (வயது 34) கூலித் தொழிலாளி. இவருக்கு துர்கா என்ற மனைவியும் 9 வயது மகளும் 5 வயது மகனும் உள்ளனர்.
சந்தோஷ் கடந்த 6 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்பத்தினர் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை மோசமானதால் மனமுடைந்த சந்தோஷ் அவரது வீட்டின் உள் பக்கமாக தாழ்பாள் போட்டு கொண்டு கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சந்தோஷின் மனைவி துர்கா ராணிப்பேட்டை போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜான் சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறைதீர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வரப்பெறும் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் தீர்வு காணுவதற்கு மாவட்ட அளவில் அலுவலராக ஊரக வளர்ச்சி முகமை ரஞ்சிதா என்பவர் குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் எழுத்துப்பூர்வமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
பனப்பாக்கத்தில் மயூரநாதர் திருவிழா நடைபெற்றது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சவுந்தர நாயகி சமேத மயூரநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சேக்கிழார் பெருமான், மாணிக்கவாசகர் உள்ளிட்ட நாயன்மார்களுக்கு தனித் தனியாக சன்னதிகள் அமைந்துள்ளது.
இந்த கோவில் பிரம்மன், இந்திரன், திருமால், அகத்தியர், நந்திதேவர் உள்ளிட்டவர்கள் பூஜை செய்து வழிபட்ட பழமைவாய்ந்த தலமாகும்.மேலும் உமையம்மை மயில் வடிவத்தில் சிவபெருமானை வணங்கிய புண்ணியத் தலமாகும்.
இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க திருவிழா தொடங்கியது.தொடர்ந்து மயூரநாதர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு மயூரநாதர், சவுந்திர நாயகி அம்மன், முருகன், விநாயகர் மற்றும் 63 நாயன்மார்கள் தனித் தனி வாகனத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.அப்போது சிவ வாத்திய கணங்கள் முழங்க தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் ஓதுவார்களால் இசையுடன் பாடப்பட்டது.
திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பாணாவரம் அருகே ரயில் மோதி ஒருவர் பலியானார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயில் மோதி உடல் சிதைந்து நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்யார்? தற்கொலை செய்துகொண்டரா அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை நவல்பூரில் மேம்பால பணியை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை அருகே நவல்பூர் பகுதியில் ெரயில் வழித்தட பாதையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் பழமையானதாகும்.
போக்குவரத்து நெரிசல் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடமாக இருந்து வந்ததால் இதற்கு மாற்றாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கடந்த ஆட்சியில் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ.வாக இருந்த காந்தி பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுவதை தவிர்க்கவும் கனரக வாகனங்கள் சென்னை, பெங்களூர், சித்தூர் வழியாக செல்ல சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.26.63 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது 25 சதவீதம் பணிகள் நிறைவுற்று உள்ளது. 26 மேம்பால தூண்கள் அமைக்கப்பட்டு முடிவுற்று உள்ளது. இதன்மீது சாலை கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேம்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலை அமைக்க நவல்பூர் சி.எஸ்ஐ சர்ச் சுற்று சுவர் பகுதியில் சுமார் 1427 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. அதனை கையகப்படுத்திட இடத்தினை நேரடியாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த இடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட நடவடிக்கை எடுக்க தேவாலய குழுவிடம் கேட்டுக் கொண்டனர். இதற்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டுவிடும் இதன் மீது தனி கவனம் செலுத்தி அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எஞ்சியுள்ள பணிகளைக் குறித்த காலத்திற்குள் முடிக்க உதவி செயற்பொறியாளர் திட்டங்கள் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் காந்தி உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத், நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
சோளிங்கர் அடுத்த சோமசுந்தரம் கிராமத்தில் ஸ்ரீ சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
சோளிங்கர்,
ராணிப்பேட்டைமாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மான் சகாதேவ சித்தர் கோவில் உள்ள சிவலிங்கத்திற்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அருகம்புல் பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சோளிங்கரில் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
சோளிங்கர்,
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களை வெற்றி பெறசெய்த கிளைக் கழக நிர்வாகிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அவைத்தலைவர் அசோகன், கலந்துகொண்டு ஜூன் 3-ந் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களை வெற்றி பெற செய்து கழக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட கிளைக் கழக நிர்வாகிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார்.
அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது மாவட்ட சுற்றுச்சூழல் அணி வேதா சீனிவாஸ் மற்றும் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் கிளைகழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் கோவில் தேரோட்ட விழாவில் மூதாட்டியிடம் c 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நேற்று நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்திருவிழாவின்போது சுப்பாராவ் தெருவை சேர்ந்தராணி கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை 2 பெண்கள் பறித் துள்ளனர்.
உடனே ராணி கூச்சலிட்டுள்ளார் . அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்ற 2 பெண்களை கையும் களவுமாக பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி சமயபுரம் அருகே உள்ள மணச்சநல்லூர் வாய்க்கால் மேட்டு தெரு பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது 32 ) , பொன்னாத்தா என்கிற கவிதா ( 35 ) என்பது தெரியவந்தது .
இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவை குறி வைத்து பெண்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அரக்கோணத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் பழனிபேட்டை, பஜார் பகுதி மற்றும் சுவால்பேட்டை என 3 கோட்டத்தில் 190 நிரந்தர தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைத்து பழனிபேட்டை கோட்டத்தில் மட்டுமே வேலை செய்யும் படி இடமாறுதல் செய்து ஆணையர் லதா உத்தரவிட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து நிரந்தர தூய்மைப் பணியாளர்களும் நேற்று காலை சுவால்பேட்டை அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஏபிஎம் சீனிவாசன் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமலும், தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முன் அறிவிப்பின்றி பணியிட மாற்றம் செய்யக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார். தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி துணை தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது நகராட்சி ஆணையரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா தாராபடவேடு கிராமம் குலக்கரை தெருவை சேர்ந்த புகழேந்தி. இவரது மகன் பலராமன் (எ) பாலா (27) என்பவரை வழிபறியில் ஈடுபட்டதாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பலராமனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவட்டார். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.






