என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சோளிங்கரில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றம்
சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் மாணவரிடம் விசாரணை சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றம் ெசய்யபட்டுள்ளனர்.
ராணிபேட்டை:
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் தங்கமணி, சென்னையில் விக்னேஷ் ஆகியோர் சட்ட விரோத காவலில் உயிரிழந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடியும் வரை அவசியம் இல்லாமல் விசாரணைக்காக இரவு நேரங்களில் சட்ட விரோத காவலில் வைத்து விசாரிக்கக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பதிலாக அவரது மகனை அழைத்து வந்து சட்ட விரோதமாக போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
கல்லூரியில் படிக்கும் அந்த மாணவரின் நிலை குறித்த தகவல் மாவட்ட காவல் நிர்வாகத்துக்கு புகாராக சென்றது. இது தொடர்பான விசாரணையில், கல்லூரி மாணவரை அவசியமே இல்லாமல் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தது உறுதி செய்யப்பட்டது.
இதற்கு சப் இன்ஸ்பெக்டர் பசலைராஜ் மற்றும் காவலர்கள் சுந்தரபாண்டியன், பரத் என்று தெரியவந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பசலைராஜை திருப்பத்தூர் மாவட்டத்துக்கும், காவலர்கள் இருவரையும் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேற்று முன்தினம் இரவு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இந்த பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து சப் இன்ஸ்பெக்டர் பசலைராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்து வடக்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கவனக்குறைவாகவும் பணியில் மெத்தனமாக இருந்ததாக எழுந்த புகாரில் சோளிங்கர் போலீஸ் நிலைய தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தனிப்பிரிவில் இருந்து விடுவிக்க பட்டார்.
Next Story






