என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    உயிரிழந்த மாணவர் நிதிஷ் குமார் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் உடனடியாக முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கிட முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியை சேர்ந்த நாடிமுத்து-போதினி தம்பதியின் மகன் நிதிஷ் குமார் (வயது 9).‌ இவன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற நிதிஷ்குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கூறியுள்ளனர்.

    மேலும் மாணவனை ஆசிரியர் ஒருவர் வீட்டில் கொண்டு விட்டு உள்ளார். வீட்டிலிருந்தவர்கள் நிதிஷ்குமாரை உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி அறிவுறுத்தினர்.

    அதன்படி அழைத்து சென்றபோது வழியிலேயே அவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாணவன் நிதிஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

    ஆனால் மாணவன் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து முள்ளூர் விளக்கு பகுதியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மாணவனின் சாவுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் மாலை 4 மணிக்கு மேல் தொடங்கிய போராட்டம் இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது.

    கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கிடையே, ஒரு வழியாக வாகனங்கள் சென்றதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆத்திரம் அடைந்தனர். வாகனங்களை மறித்தவர்கள் கலெக்டர், போலீஸ் எஸ்.பி., அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் வர வேண்டும் என்றனர்.

    அதன்பேரில் அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர், எஸ்.பி., முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவன் நிதிஷ்குமாரின் சாவு தொடர்பாக விசாரணை நடத்தப்படும், மாணவனை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதது ஆசிரியர்களின் தவறு தான். மாணவன் சாவுக்கு அரசு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கவிதாராமு உறுதியளித்தார்.

    மேலும் பள்ளி ஆசிரியர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கூறினார். மேலும் மாணவன் சாவில் பள்ளியில் கவனக்குறைவாக பணியாற்றிய தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானமடைந்து இரவு 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியை சேர்ந்த நாடிமுத்து, போதினி தம்பதியினரின் மகன் நிதிஷ்குமார் எதிர்பாராத வகையில் உயிர் இழந்த செய்தியை கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும் உயிர் இழந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் உடனடியாக முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கிட முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கூட்டுறவு சங்க தலைவர் ஜெ.ஆர். அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். இதில் விவசாய கடன் மற்றும் நகை கடன் உள்ளிட்ட பல்வேறு வரவு செலவு பணிகளுக்காக விவசாயிகள் நீண்ட தூரம் கடந்து விராலிமலை வர வேண்டிய நிலைஉள்ளது. 

    எனவே விவசாயிகளின் கால விரயத்தை போக்க விராலிமலையில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை இரண்டாக பிரித்து, கல்குடியில் புதிதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் தொடங்க வேண்டும், 

    அதோடு பூதகுடி, கோமங்கலம் ஊராட்சியை கல்குடியில் இணைக்க வேண்டும், விராலிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பணிச்சுமையை குறைக்க மேலும் ஒரு உதவியாளர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் துணை தலைவர் குமரேசன், இயக்குநர்கள் மணிமாலா செந்தில், வேலுமணி உள்பட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    மக்கள் பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாக வாதாடி வெற்றிபெறுவேன் என புதுக்கோட்டை நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக களமிறங்கிய பெண் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி 31-வது வார்டில் வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார்.

    புதுக்கோட்டை போஸ் நகர் 9-வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சரிதா (வயது 36). 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது கணவர் அங்குள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இரு வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சுப்பிரமணியன் குடும்பத்தினர் பாரம்பரியமாக தி.மு.க.வில் இருக்கிறார்கள். இதையடுத்து சரிதா கட்சி சார்பில் போட்டியிட மனு அளித்து நேர்காணலிலும் பங்கேற்றார். ஆனால் இறுதியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வேட்பாளர் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டார். இருப்பினும் நம்பிக்கை இழக்காத சரிதா சுயேட்சையாக 31-வது வார்டில் போட்டியிடுகிறார்.

    தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சரிதாவின் கொழுந்தனார் மணி (கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி) கூறியதாவது:-

    எனது அண்ணி சரிதா திறமையானவர். மக்களுடன் சகஜமாக பழகுவார். மக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முன்னால் போய் நிற்பார். காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும் சைகை மூலம் அவரிடம் பேச வேண்டியதில்லை. நமது வாய் அசைவினை வைத்தே நாம் என்ன பேசுகிறோம் என் பதை தீர்க்கமாக உணர்ந்து கொள்வார்.

    வாய்பேச முடியாத, காது கேட்காதவர் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சினைகளை எவ்வாறு கேட்டு, நகரட்சியில் குரல் கொடுப்பார்கள் என சிலர் கேட்கிறார்கள். அதற்கும் அண்ணி (சரிதா) விடை கொடுத்துள்ளார்.

    எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் வாதாடி மக்கள் பிரச்சினைகளை, தேவைகளை பூர்த்தி செய்வேன் என்கிறார். வாக்குறுதிகளுடன், இதனையும் துண்டு பிரசுரமாக அச்சிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்கிறோம். அரசியல் கட்சிகள் பணத்தால் ஜெயித்து விடலாம் என கருதுகிறார்கள். இந்த வார்டில் 80 மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள்.

    அண்ணன் மாற்று சமூகத்தை சேர்ந்த அண்ணியை கரம் பிடித்ததால் இருவேறு சமூகத்திலும் ஏராளமான சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள். சரிதாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கணினி மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்வு செய்யும் இரண்டாம் கட்ட பணி நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச் சாவடிக்கான, மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தினை கணினி மென்பொருள் மூலமாக தேர்வு செய்யும் இரண்டாம் ஆம் கட்டப்பணி நடைபெற்றது.

    மாவட்ட தேர்தல் பார்வையாளர் டாக்டர்.மோனிகாராணா, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 121 வாக்குச்சாவடிகளுக்கு 146 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், இரண்டு நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 159 வாக்குச்சாவடிகளுக்கு 191 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும் என மொத்தம் 337 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

    அதனைத்தொடர்ந்து, 28.01.2022 முதல் 04.02.2022 வரை வேட்புமனுதாக்கல் நடைபெற்று, வேட்பு மனுக்களை  ஆய்வு  செய்து, 07.02.2022  அன்று  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மற்றும் கூடுதல் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் டாக்டர். மோனிகா ராணா, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கவிதா ராமு ஆகியோர் அலுவலர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொண்டனர்.

    அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் 189 வார்டுகளில் 2 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 187 வார்டுகளுக்கு தேவைப்படும் 278 மற்றும் கூடுதல் இருப்புடன் 57 என மொத்தம் 335 மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    புதுக்கோட்டையில் எல்.இ.டி. திரை மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பும் வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடை பெறவுள்ளதை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வேட்பு மனு தாக்கல் நிறைவுபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் தயார் செய்யப்பட்டு, சமூக ஊடகம், தொலைக்காட்சிகள் உள்ளிட்டவைகள் மூலமாக விளம்ப ரப்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் இக்குறும்படங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் தேர்தல் நடைபெறும் 2  நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள்,

    கடை வீதிகள், உழவர் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் செய்தி மக்கள்தொடர்புத்துறையின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் அதிநவீன எல்.இ.டி. வீடியோ வாகனம் மூலம் விளம்பர பணிகள் நடந்து வருகிறது.

    இக்குறும்படத்தில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிப்பது குறித்தும்,

    நேர்மையான முறையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பது குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகை யில் தயார் செய்யப்பட் டுள்ள குறும்படங்கள் 7.2.2022 முதல் 18.2.2022 வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் திரையிடப்படவுள்ளது.
    சின்னத்தை மாற்றி தர கோரி அதிகாரியிடம் வேட்பாளர் முறையிட்டார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7&வது வார்டில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய நிர்வாகி தர்மராஜ் போட்டியிடுகிறார்.

    இவருக்கு, இவரது கட்சி சின்னமான நட்சத்திரத்துடன்கூடிய கொடி சின்னம் ஒதுக்காமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர், சின்னத்தை மாற்றித் தருமாறு தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டனர்.
    தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சியில் நமது தலைவர் செயல்படுத்தி வருகிறார்.
    கரூர்:

    கரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

    முதலில் அவர் கரூர் புதிய பஸ் நிலையம் ரவுண்டானா அருகே கரூர் மாநகராட்சி வேட்பாளர்களை ஆதரித்து திரண்டிருந்த மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றவாறு பேசியதாவது:-

    இங்கு திரண்டுள்ள மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது நீங்கள் அனைவரும் மிகப்பெரிய எழுச்சியோடும், சிரித்த முகத்தோடும் வந்துள்ளீர்கள் என்பதை அறிய முடிகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் துவங்கினேன் தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை எனது சொந்தத் தொகுதியான சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் நேற்று துவங்கினேன். சென்னைக்கு வெளியே முதல்முறையாக கரூர் மாவட்டத்தில் பிரசாரத்தை துவங்கியுள்ளேன்.

    கரூர் மாவட்டத்திற்கு தி.மு.க.வுக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனென்றால் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் தான் முதல் முதலில் தி.மு.க. தலைவர் கலைஞர் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்ட சபைக்கு சென்றார்.

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றபோது கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு படுக்கை வசதிகள் தட்டுப்பாடு இருந்தது. இதனை சிறப்பாக கையாண்டு முறையாக அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் 3-வது அலையை எளிதாக கடந்து இருக்கிறோம்.

    திமுக

    இரண்டாவது அலையை எதிர்கொண்டு அதிலிருந்து வெற்றிகரமாக நாம் மீண்டதால் கொரோனா மூன்றாவது அலையை எளிதில் தடுத்து நிறுத்திவிட்டோம்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறை வேற்றி வருகிறோம். முதலில் கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்தோம். அதன்படி இரண்டு தவணைகளாக ரூ.4 ஆயிரம் வழங்கினோம்.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றோம். அதன்படி லிட்டருக்கு ரூ.3 குறைத்தோம். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலையை குறைத்தோம். பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டத்தை அமல் படுத்தினோம். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி வரை 46 லட்சத்து 16 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர்.

    கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்கள் கல்வி இடை நிற்றலை தடுக்கும் விதமாக இல்லம் தேடி கல்வி திட்டத்தை அமல்படுத்தி நிறைவேற்றி வருகிறோம். நம்மைக்காக்கும் 48 என்ற திட்டம் மூலம் விபத்து நடந்த 24 மணி நேரத்தில் மீட்கப்படும் நபருக்கு இலவச உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மின்னகம் அமைக்கப்பட்டு மின் நுகர்வோர்கள் சேவை மையத்தை தொடங்கி அதன் மூலம் 24 மணி நேரமும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

    தேர்தலில் வெற்றிபெற்று முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டு நமது தலைவர், முதல் மக்கள் சந்திப்பிலேயே தி.மு.க. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காதவர்களும் வருத்தப்படும் அளவுக்கு நல்லாட்சியை தருவோம் என்றார்.

    ஒரு வட மாநில ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் சமீபத்திய கருத்து கணிப்பில் இந்தியாவில் நம்பர் ஒன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அறிவிக்கப்பட்டது. இது பெரிய வி‌ஷய மல்ல, தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சியில் நமது தலைவர் செயல்படுத்தி வருகிறார்.

    நேற்றைய நாள் மிகவும் முக்கியமான நாளாகும். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இதற்காக தமிழக சட்டசபையில் நீட் தேர்வு ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அந்த மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல் 180 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய ஒரு வார காலத்திற்குள் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்வை ரத்து செய்யும் சிறப்பு மசோதாவை நிறை வேற்றி மீண்டும் தமிழக ஆளு நருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் நீட் தேர்வு ரத்து ரகசியம் உதயநிதிக்கு தெரியும் என்று கூறியுள்ளார். இப்பொழுது இந்தக்கூட்டத்தில் நான் அந்த ரகசியத்தை தெரிவிக்கிறேன். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம். தமிழகத்தில் உள்ள ஆளுநர் நினைப்பதைப் போல இது அ.தி.மு.க. அடிமை ஆட்சி இல்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. ஆட்சி. தமிழகத்தில் சமூக நீதி காத்த கலைஞர் வழிவந்த ஸ்டாலின் ஆட்சி. நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யும்படி சட்டப் போராட்டத்தை மேற் கொள்வோம்.

    கரூர் மாவட்டத்திற்கு இந்த தி.மு.க. ஆட்சி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின்கீழ், பெறப்பட்ட 50 ஆயிரத்து 531 மனுக்களில் 50 ஆயிரத்து 225 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணமாக 3 லட்சத்து 11 ஆயிரத்து 526 பேருக்கு ரூ.126 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5008 பேருக்கு ரூ.5.6 கோடியில் தையல் எந்திரங்கள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் 721 பேர் பயனடைந்து உள்ளனர். சுகாதாரத்துறை சார்பில் 4 ஆயிரம் பேருக்கு ரூ.2 கோடியில் உதவிகள், முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடியில் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

    உழவர் காப்பீட்டு திட்டத்தில் ரூ.1.96 கோடி, இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தில் ரூ.1.27 கோடியில் 27 ஆயிரம் பேருக்கு சான்றிதழ்கள், ரேசன்கார்டுகள் 17 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறை சார்பில் 4288 புகார் கள் பெறப்பட்டு, அதில் 4280-க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    திமுக அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து வைக்க வேண்டும். இன்றைய தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல். ஏனென்றால் கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தேர்தல் நடை பெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் வெற்றியை பெற்று தந்தது போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும். மக்களிடத்திலே பிரசாரம் மேற் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து அவர் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே புகழுர், பள்ளப்பட்டி நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், கிருஷ்ணராயபுரத்தில் கிருஷ்ணராயபுரம், புலியூர், உப்பிடமங்கலம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்தும், குளித்தலை பேருந்து நிலையம் அருகே குளித்தலை நகராட்சி, மருதூர், நங்கவரம் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்தார். அவருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்றார்.

    இதையும் படியுங்கள்... கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வெளிநாட்டினருக்கு இந்திய குடியுரிமை?- அமைச்சர் பதில்

    பஸ் வசதி இல்லாதால் மாணவ, மாணவிகள் அவதி
    புதுக்கோட்டை:


    கந்தர்வகோட்டை அருகில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்லும்  மாணவர்கள் ஆபத்தான  பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    கந்தர்வக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மருதன் கோன் விடுதிஅரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் உள்ளன.  

    இந்தநிலையில் மாலை நேரத்தில்  பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பும் மாணவர்களுக்கு  போதிய  பேருந்து வசதி  இல்லை.  மாலை  3 மணியிலிருந்து 5 மணி வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை.

    இதனால்   ஒரே நேரத்தில் 300க்கும்  அதிகமான மாணவர் கள் ஒரு பேருந்தில் ஆபத்தான பயணத்தை  மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அரசு அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகம்  மூலம் பலமுறை கோரிக்கை  விடுத்தும்  இது வரை எந்த  நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கல்லாக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் சுமார் 300  மாணவர்கள் பயணம்    செய்ய முயன்றனர். உடனடியாக   பேருந்து ஓட்டுனர்   பேருந்தை நிறுத்தி விட்டு,  கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின்  பேரில் கந்தர்வகோட்டை போலீசார்  மற்றும் வருவாய்த்துறை    அலுவலர்கள் மாணவர்களிடம் பேசி கூடுதல் பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும்,  தற்போது ஒரு பேருந்தில் குறிப்பிட்ட அளவு பயணிகளை மட்டுமே செல்லவும் அறிவுறுத்தினர்.  இதனால்  மற்ற  மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல இரவு 8 மணி ஆனது.

    எனவே காலை, மாலை நேரங்களில் கந்தர்வகோட்டை  பட்டுக்கோட்டை மார்க்கமாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என  பெற்றோர்கள், பொதுமக்கள்  அரசுக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர்.
    ஆலங்குடியில் பள்ளி மாணவன் சாவு
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த  நாடிமுத்து  மகன் நிதிஷ்குமார் (வயது 9). இவர் பாப்பான் விடுதி அரசு நடுநிலைப்பள்ளியில்  4ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பள்ளிக்குச்சென்று  வகுப்பில் இருந்துள்ளார். அப்போது வகுப்பில் மயக்கமடைந்து கீழே விழுந்ததாக  கூறப்படுகிறது.இதையடுத்து உடனடியாக பள்ளி ஆசிரியர் அவரை மீட்டு அவரது பெற்றோரி டம் நிதிஷ் குமாரை ஒப்படைத்தனர்.

    மாணவனின்  பெற்றோர்கள் உடனடியாக  நிதிஷ் குமாரை   ஆலங்குடியில்  உள்ள தனியார்  மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் தனியார் மருத்துவமனை டாக்டர்  அவரை உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து அவரை  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அப்போது  நிதிஷ்குமாரை  பரிசோதனை செய்த  டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவனின் உடல்  உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பாப்பான் விடுதி கிராம மக்கள் பள்ளியை  முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும்  ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் மாணவனின் பெற்றோர் தரப்பில் இறந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    புதுக்கோட்டையில் 902 பேர் தேர்தல் களம் காணுகிறார்கள்
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் வரும் 19&ந் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 189 வார்டுகளுக்கு 1,114 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. 

    அதில் மொத்தம் 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், நகராட்சிகளில் புதுக்கோட்டையில் 47, அறந்தாங்கியில் 17, பேரூராட் சிகளில் ஆலங்குடியில் 16, அன்னவாசலில் 7, அரிமளத்தில் 15, இலுப்பூரில் 33, கறம்பக்குடியில் 9, கீரமங்கலத்தில் 20, 

    கீரனூரில் 10 மற்றும் பொன்னமராவதியில் 17  என மொத்தம் 191 வேட்பு மனுக்கள் நேற்று வாபஸ் பெறப்பட்டன. 2 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மாவட்டத்தில் 187 வார்டுகளில் 902 பேர் களத்தில் உள்ளனர்.

    மழையூர் பெரியநாயகி அம்பாள் உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மழையூரில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபெரியநாயகி அம்பாள் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், ஸ்ரீ அகத்தீஸ்வரர்,  ஸ்ரீபெரிய நாயகி அம்பாள், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 7 நாட்களாக யாகசாலைபூஜைகள் நடைபெற்று வந்தன. யாகசாலையில் பூஜை செய்யபட்ட புனித நீர் கோபுரகலசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கருட பகவான் வானில் வட்டமிட அனைத்து கோபுரங்களிலும் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

    விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், எம்.எல்.ஏ. முத்து ராஜா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், மழையூர் பொன்னன் விடுதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் செய்திருந்தனர். கறம்பக்குடி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் விசாரணை
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெங்கிடகுளம் ஊராட்சி சொரியன்தோப்பு கிராமத்தில் வசித்து வந்தவர் பனையப்பன் ( வயது 70). இவர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள், பனையப்பனை பல பகுதிகளில் தேடிவந்தனர்.

    இந்நிலையில் சொரியன்தோப்பு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதைனை அறிந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது காணாமல்போன பனையப்பன் என்பது உறுதிசெய்தனர். 

    பின்னர் ஆலங்குடி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பனையப்பனின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

    பின்னர் இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×