என் மலர்
நீலகிரி
கொரோனா தொற்று பரவலை தடுக்க வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிநவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களும் அதிகரித்து உள்ளது. கிராமப்புறங்கள் உள்பட தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் முழுமையாக கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊட்டி நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் 2 வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிநவீன எந்திரங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அதிநவீன எந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் வாகனம் நீலகிரி மாவட்டத்திற்கு ஊட்டி நகராட்சி சார்பில் ரூ.3.54 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் அதிகளவில் கிருமி நாசினிகளை காற்றில் கலந்து விட முடியும். எந்திரம் சுமார் 10 முதல் 20 மீட்டர் தூரம் வரை கிருமிநாசினியை சுழற்றி அடிக்கும் திறன் உள்ளது. எந்திரம் பொருத்துவதற்காக ஊட்டி நகராட்சியின் வாகனம் ஒன்று அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு, அந்த வாகனத்தில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க் மற்றும் ஜெனரேட்டர் பொருத்தி இயந்திரம் இயங்குகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் செல்லாமல் தூரத்தில் இருந்தவாறே முழுமையாக கிருமிநாசினி தெளிக்க முடியும். நோய் தொற்று அதிகமாக பரவல் என கண்டறியப்பட்ட கிளஸ்டர் பகுதிகளில் உள்ளே செல்லாமல் அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யலாம். சுகாதாரத்துறை சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பில் அதிநவீன எந்திரத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் அதிக அளவில் கிருமி நாசினிகளை காற்றில் கலந்து விடும் வகையில் மாற்றலாம். இதன் மூலம் 5 முதல் 10 மீட்டர் வரை கிருமிநாசினி தானியங்கி மூலம் தெளிக்க உதவுகிறது.
அந்த எந்திரத்தில் 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த வாகனம் ஊரக பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். மாவட்ட நிர்வாகம் வரையறுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அரசு மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூடலூரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை சுற்றுலா வாகன டிரைவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
கூடலூர்:
தமிழகம், கேரள மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் உள்ளது. நீலகிரி சுற்றுலாத்தலமாக உள்ளதால் ஊரடங்கு காலத்துக்கு முன்பு வரை தினமும் ஏராளமானவர்கள் வருகை தந்தனர். இதனால் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்களை இயக்கவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் வாகன ஓட்டம் இன்றி அவதிப்படுகின்றனர். சொந்த உபயோகத்துக்கு வைத்துள்ள வாகனங்களை விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்குவதால் வருவாய் இன்றி அவதிப்படுவதாக சுற்றுலா வாகன டிரைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூரில் இருந்து ஊட்டிக்கு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட காரை வாகன டிரைவர்கள் பிடித்து கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக கூடலூரில் இருந்து ஊட்டி எம்.பாலாடா பகுதிக்கு 5 பேருடன் சென்ற மற்றொரு காரை சுற்றுலா வாகன டிரைவர்கள் பிடித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை நடத்திய ஆய்வாளர் விதிமுறைகளை மீறி இயக்கிய காருக்கு ரூ.2,500 அபராதம் விதித்து வசூலித்தார். பின்னர் காரை விடுவித்தார். இந்த நிலையில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் கூடலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தை காலை 12 மணிக்கு முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது டிரைவர்கள் கூறியதாவது:-
கேரள பதிவு எண்ணில் சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள வாகனங்கள் சுற்றுலா தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கு முடிவடைந்தும் வாகனங்கள் இயக்கப்படாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் சொந்த பயன்பாட்டுக்கு வைத்துள்ள வாகனங்களை விதிமுறைகளை மீறி வாடகைக்கு பயன்படுத்தப்படுகிறது. அரசு பஸ்கள் இயக்கப்படாமல் உள்ளதால் கூடலூரில் இருந்து ஊட்டி, குன்னூருக்கு அதிகளவு வாகனங்கள் இயக்கப்படுகிறது. அரசுக்கு முறையாக வரிகள் செலுத்தி சுற்றுலா வாகனங்களை இயக்கும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஆனால் அரசுக்கு வரி எதுவும் செலுத்தாத வாகனங்கள் விதிமுறைகளை மீறி வாடகைக்கு இயக்கப்படுகிறது. 2 கார்களை பிடித்து ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒரு காரை அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சமயத்தில் அலுவலகத்தில் இருந்த ஆய்வாளர் பிரபாகரன் சம்பந்தப்பட்ட டிரைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையொட்டி டிரைவர்கள் கலைந்து சென்றனர்.
கொரோனா நிவாரண நிதி வழங்க கோரி ஊட்டியில் தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியிருந்த வியாபாரிகள் உள்பட பலர் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டனர். தையல் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரி மாவட்ட தையல் தொழிலாளர் சங்கம் சார்பில், தையல் நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.7,500 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி பிங்கர்போஸ்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பாபுட்டி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன், ஊட்டி இடைக்கால குழு தலைவர் யாஸ்மீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தையல் நலவாரியத்தில் 10 மாதமாக வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்து 60 வயது பூர்த்தி அடைந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் ஆன்லைன் பதிவை எளிமையாக்கி பதிவு பெற்ற தொழிற்சங்கங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் பெண் தையல் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் ஊட்டி,கோத்தகிரி, எருமாடு உள்ளிட்ட இடங்களில் நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்ப ட்ட பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தங்காடு ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது.
ஓரநள்ளி, மஞ்சகொம்பை ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களில் அனைவரும் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொள்கிறார்களா? காய்ச்சல் உள்ளதா என்று சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்கிறார்களா, கிருமி நாசினி தெளித்து சுகாதாரப்பணிகள் நடைபெறுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருகை புரிபவர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு வருபவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் சோதனை சாவடிகளில் சுகாதார குழுக்கள் மூலம் உடனடியாக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நோயின் அறிகுறி கண்டறியப்பட்டு 176 இடங்களை கண்டறிந்து அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து வீடு வீடாக கண்காணிக்கப்படுகிறது.
கிருமிநாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. வெளியாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்லாதவாறு காவல்துறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக அரசு தெரிவிக்கும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு திருமணம், துக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் இனி வரும் காலங்களில் பொது மக்கள் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை தவிர்த்து, இல்ல நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது. அனுமதி பெற்ற நிகழ்ச்சியின்போது சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நடத்த வேண்டும்.
இதர நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நோய் அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் வாகனங்களில் இலவச மருத்துவ பரிசோதனைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்கள் தோறும் ஒரு நாளைக்கு 20 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சந்திரசேகர், குந்தா தாசில்தார் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்களுக்கு 18 வாகனங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள் கிராமங்கள் தோறும் நடத்தப்படுகிறது. இதற்காக சுகாதாரத்துறை சார்பில் 16 வாகனங்கள், ஜெயின் சங்கம் சார்பில் 2 வாகனங்கள் என மொத்தம் 18 நடமாடும் வாகனங்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று கொரோனா நோய் தடுப்பு மருத்துவ முகாம்களுக்கான நடமாடும் வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஊட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கிளஸ்டர் ஆக உருவானதால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் காணொலி காட்சி மூலம் தலைமைச்செயலாளர் நடத்திய ஆய்வு கூட்டத்தில் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதன்படி, நீலகிரி மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு மருத்துவ முகாம்கள் இன்று (அதாவது நேற்று) முதல் நடத்தப்படுகிறது. சளி, காய்ச்சல், தொண்டை வலி இருப்பவர்கள் மருத்துவ முகாம் மூலம் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள். அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சளி மாதிரி எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
கிராமப்புறங்களுக்கு செல்லும் வகையில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மருத்துவ குழுவினர் கிராமங்கள் மற்றும் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர். இந்த முகாம் வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாரம் வரை நடக்கிறது. அனுமதி பெற்று நடத்தப்படும் திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேலும், துக்க நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேலும் கலந்து கொள்வதை கண்டறிய காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறையினர் கண்காணிப்பார்கள். மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தொடர்பில் உள்ளவர்கள் என மொத்தம் 30 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது. நீலகிரியில் பாதிக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை. கொரோனா வைரஸ் சமூக பரவல் ஆகாமல் இருக்க கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் மற்றும் ஜெயின் சங்க செயலாளர் ஹீராலால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலைக்கு எதிராக குன்னூரில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்:
அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடி மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் குறைவான தொழிலாளர்களை கொண்டு சமூக இடைவெளியை பின்பற்ற படாமல் பணி மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சாலை பொது மேலாளர் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்தார். அப்போது தொழிற்சங்க நிர்வாகிகளில் சிலர் தமிழில் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது பொது மேலாளர் தமிழில் பேச தடை விதித்து இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேச கூறினார். தமிழில் பேச மறுப்பு தெரிவித்த தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி மறுநாள் பொது மேலாளரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொது மேலாளர் தமிழில் பேச தடை விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நேற்று குன்னூர் வி.பி.தெருவில் தி.மு.க. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டுகட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொது மேலாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வெடி மருந்து தொழிற்சாலை பொது மேலாளரை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமசந்திரன் ‘திராவிடர் கழகத்தை சேர்ந்த டாக்டர் கவுதமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பத்ரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுதாகர், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியனை சேர்ந்த ராஜேந்திரன் உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அரசு பெண் ஊழியர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. 1077 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு வெளியிடங்களில் இருந்து வந்த நபர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் நலமாக இருக்கிறார்களா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரிந்து வந்த ஆண் சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதனை தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் கிருமி நாசினி தெளித்து கூட்டரங்குக்கு கட்டுப்பாட்டு மையம் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. கியூ பிரிவில் பணிபுரிந்து வரும் அரசு பெண் ஊழியர் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்களை அளிக்க வரும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரடியாக பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் துறை ரீதியாக அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த பெண் ஊழியர் தனக்கு சளி, காய்ச்சல் உள்ளதாக ஊட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
அதே பிரிவில் பணிபுரிந்த மற்றொரு பெண் ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து அரசு பெண் ஊழியர்கள் உள்பட 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஊழியர்கள் அச்சமடைந்து உள்ளனர். கட்டுப்பாட்டு மையத்தில் சுகாதார ஆய்வாளர் உடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதேபோல் 2 அரசு பெண் ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. அரசு டிரைவர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டு விட்டு உடனடியாக வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் மனுக்கள் பெறும் இடத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தது. ஊட்டி நகராட்சி ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் கியூ பிரிவு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். வெளியாட்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லாமல் இருக்க அரசு ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகே தனியார் தேயிலை தோட்டத்திற்குள் குட்டிகளுடன் உலாவரும் கரடியால் பீதியடைந்துள்ளனர். கூண்டுவைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டு யானை, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் நடமாடி வருகின்றன. இதன் காரணமாக அவ்வப்போது மனித வன விலங்கு மோதல்களும் நிகழ்ந்து, அதனால் மனிதர்கள் காயமடைவதும், அவ்வப்போது உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரி ராம்சந்து சதுக்கத்திலிருந்து கிளப் ரோடு செல்லும் சாலைக்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஒன்றில் கடந்த சில தினங்களாக இரண்டு சிறிய குட்டிகளுடன் தாய் கரடி ஒன்று உலா வந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அந்த தோட்டத்திற்கு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் கரடி முகாமிட்டுள்ள தேயிலை தோட்டத்தை சுற்றிலும் உள்ள கல்பனா காட்டேஜ், கிளப் ரோடு, ரைபிள் ரேஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்து உள்ளதால் அப்பகுதி குடியிருப்புவாசிகளும் பீதியடைந்துள்ளனர்.
மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், தற்போது கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகளில் நாவல் பழம் சீசன் தொடங்கியுள்ளதால் மரங்களில் உள்ள அந்த பழங்களை உண்பதற்காக வனப்பகுதியில் இருந்து கரடிகள் வெளியே வந்து தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித் திரிகின்றன. இந்த கரடிகளால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன், கரடிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது கூண்டு வைத்து பிடிக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரியில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது மதுரை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி மேரீஸ் ஹில் பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், இந்து நகரை சேர்ந்த ஒரு ஆண், மஞ்சனக்கொரை காசா காலனியை சேர்ந்த ஒரு ஆண், விவேகானந்தா நகரை சேர்ந்த ஒரு ஆண், அருவங்காடு பகுதியை சேர்ந்த ஒரு ஆண், தூனேரியை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி டேவிஸ் டேலை சேர்ந்த ஒரு பெண், எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்த ஒரு பெண், கேத்தி உல்லாடாவை சேர்ந்த ஒரு ஆண், பிங்கர்போஸ்ட்டை சேர்ந்த ஒரு ஆண், மருத்துவ சிகிச்சைக்கு வெளியூர் சென்று வந்த பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
கோவை மாவட்டத்துக்கு சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட காக்காசோலையை சேர்ந்த ஒரு ஆண், ஒசட்டியை சேர்ந்த 2 ஆண்கள், அருவங்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், ஊட்டி ஜெயில் ஹில் பகுதியை சேர்ந்த ஒரு பெண், தும்மனட்டியை சேர்ந்த ஒரு சிறுவன், மும்பை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த தொரையட்டியை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எப்பநாடு கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள், கெங்கமுடியை சேர்ந்த ஒரு பெண், மணியட்டியை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த ஒரு ஆண், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரின் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த குன்னூரை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரியில் இதுவரை 513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 324 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் அத்தியாவசிய மருத்துவ தேவைகளை தவிர்த்து வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கலெக் டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது மதுரை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த ஊட்டி மேரீஸ் ஹில் பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், இந்து நகரை சேர்ந்த ஒரு ஆண், மஞ்சனக்கொரை காசா காலனியை சேர்ந்த ஒரு ஆண், விவேகானந்தா நகரை சேர்ந்த ஒரு ஆண், அருவங்காடு பகுதியை சேர்ந்த ஒரு ஆண், தூனேரியை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி டேவிஸ் டேலை சேர்ந்த ஒரு பெண், எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்த ஒரு பெண், கேத்தி உல்லாடாவை சேர்ந்த ஒரு ஆண், பிங்கர்போஸ்ட்டை சேர்ந்த ஒரு ஆண், மருத்துவ சிகிச்சைக்கு வெளியூர் சென்று வந்த பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
கோவை மாவட்டத்துக்கு சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட காக்காசோலையை சேர்ந்த ஒரு ஆண், ஒசட்டியை சேர்ந்த 2 ஆண்கள், அருவங்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், ஊட்டி ஜெயில் ஹில் பகுதியை சேர்ந்த ஒரு பெண், தும்மனட்டியை சேர்ந்த ஒரு சிறுவன், மும்பை சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்த தொரையட்டியை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், ஓரநள்ளி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எப்பநாடு கிராமத்தை சேர்ந்த 2 ஆண்கள், கெங்கமுடியை சேர்ந்த ஒரு பெண், மணியட்டியை சேர்ந்த ஒரு ஆண், ஊட்டி அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த ஒரு ஆண், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரின் இரண்டாம் நிலை தொடர்பில் இருந்த குன்னூரை சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரியில் இதுவரை 513 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 324 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் அத்தியாவசிய மருத்துவ தேவைகளை தவிர்த்து வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கலெக் டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்களில் நோயைப் பரப்பும் வகையில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்களில் நோயைப் பரப்பும் வகையில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 203 கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் இறைச்சி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், ஹார்ட்வேர் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறந்து செயல்பட்டு வருகிறது. கடைகளில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோடுகள் அல்லது வட்டங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தரையில் வரையப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ தண்ணீர், சோப்பு வைக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் சமூக இடைவெளி கடைகளில் பின்பற்றப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படுகிறது. சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இதுவரை சமூக இடைவெளிக்கு ஏற்பாடு செய்யாத 203 கடைக்காரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏரியில் குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38), பெயிண்டர். இந்த நிலையில் செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது நண்பர்கள், உறவினர்கள் வேலை செய்யும் இடம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தேடி பார்த்தனர். ஆனால், எங்கும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊட்டி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஊட்டி ஏரியில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தது செல்வராஜ் என்பதும், மது அருந்தும் பழக்கம் உடைய அவர் தனக்கு திருமணம் ஆகாததால் விரக்தியில் இருந்ததும், இதனால் ஊட்டி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






