என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதி உள்ள படுக்கைகள் 150 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 6 ஆயிரம் லிட்டர் டேங்க் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் 140 பேருக்கு மேல் தொற்று உறுதியாகி வருகிறது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து உள்ளது. ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உதவியுடன் 110 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

    மேலும் ஐ.சி.யூ. வார்டில் 20 படுக்கைகள் உள்ளது. கொரோனா பாதித்து ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கில் ஆக்சிஜன் சேமித்து வைக்கப்படுகிறது. நோயாளியின் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 2 லிட்டர் முதல் 10 லிட்டர் திரவ ஆக்சிஜன் வரை தேவைப்படுகிறது.

    இதை கருத்தில் கொண்டு கூடுதலாக ஆக்சிஜன் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசின் சுகாதார துறையிடம் அனுமதி பெற்று 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் வைக்க தளம், தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து ஊட்டிக்கு லாரி மூலம் ஆக்சிஜன் டேங்க் கொண்டு வரப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட தளத்தில் கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்டது. இதனை பொருத்தும் பணி மற்றும் டேங்கில் இருந்து குழாய்கள் மூலம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகின்றன.

    இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறும்போது 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    தற்போது ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிகம் பேர் என்பதால் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 110-ல் இருந்து 150 படுக்கைகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் 106 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர் என்றார்.
    கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூரில் 76 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டது.

    இதற்கிடையில் கேரள மாநில எல்லையை ஒட்டி எருமாடு, தாளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க கூட்டம் அதிகரித்தது. இதனால் தடுப்பு நடவடிக்கையாக 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

    இந்த நிலையில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. மேலும் முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. இதையொட்டி கடந்த 8-ந் தேதி மற்றும் 9-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகள் முழு நேரமும் இயங்கியது. முழு ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து ஊட்டியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க மதுபிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் விற்பனை சூடுபிடித்தது.

    இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சேகர் கூறியதாவது:-

    கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் கடந்த 8-ந் தேதி ரூ.3 கோடியே 56 லட்சத்து 85 ஆயிரத்து 600, 9-ந் தேதி ரூ.5 கோடியே 2 லட்சத்து 29 ஆயிரத்து 310-க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. 2 நாட்களில் ரூ.8 கோடியே 59 லட்சத்து 14 ஆயிரத்து 910-க்கு மதுபானங்கள் விற்பனையானது.

    வழக்கமாக ஒரு நாளில் ரூ.1.70 கோடி முதல் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால், அதற்கு முந்தைய 2 நாட்கள் அதிகமாக விற்பனை ஆகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முழு ஊரடங்கையொட்டி நேற்று முதல் நீலகிரியில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை குறைக்கும் வகையிலும், கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையிலும் இந்த மாதத்தில் அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக ரூ.2,000 நிவாரண தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 318 முழு நேர ரேஷன் கடைகள், 89 பகுதி நேர ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 2 லட்சத்து 16 ஆயிரத்து 85 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு வருகிற 15-ந் தேதி முதல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகையாக தலா ரூ.2,000 வழங்கப்படுகிறது.

    இதையடுத்து நேற்று முதல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் நிவாரண தொகை வழங்க சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணியை தொடங்கினர். அதில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை எண், இடம், அட்டைதாரர் பெயர், நிவாரண தொகை பெற வேண்டிய தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு நாளில் ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 200 டோக்கன்கள் வீடுதோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ரேஷன் கடைகளில் நிவாரண தொகை பெறும் ஆர்வத்தில் அதிகம் பேர் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். நிவாரண தொகை பெற வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
    சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி மாவட்டத்தில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கொரோனா தொற்றால் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது முதியவர், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 47 வயது நபர் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை 10,933 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10,019 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 861 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீதரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் நேற்று நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக மொத்தம் 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா காலம் என்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், தடை செய்த பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
    நீலகிரி மாவட்டத்தில் நகர பஸ்களில் கட்டணமின்றி பெண்கள் உற்சாகமாக பயணித்தனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்பட அனைத்து மகளிரும் நகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    நீலகிரி கோட்ட போக்குவரத்து கழகத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்-2 ஆகிய 6 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் நகர பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் உற்சாகமாக பயணம் செய்தனர்.

    ஊட்டி-காந்தல் இடையே இயக்கப்படும் நகர பஸ்களில் வேலைக்கு செல்லும் பெண்கள், தூய்மை பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் பெண்கள் என அனைத்து மகளிரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்தனர். அந்த பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைவரும் முககவசம் அணிந்து, 2 இருக்கைகள் உள்ள சீட்டில் ஒருவர் என அமர்ந்து பயணித்தனர்.

    ஊட்டி மற்றும் குன்னூர் பணிமனைகளில் இருந்து ஊட்டி-காந்தல் இடையே 4 பஸ்கள், ஊட்டி-தலைகுந்தா இடையே 2 பஸ்கள், குன்னூர் சிம்ஸ் பூங்கா வழியாக 4 பஸ்கள் உள்பட மொத்தம் இயக்கப்படும் 11 நகர பஸ்களில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பெண்கள் கூறும்போது, நகர பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று வெளியான அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அன்றாடம் செலவில் ஒரு பகுதி குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

    ஊட்டி-காந்தல் இடையே இயக்கப்படும் நகர பஸ்கள் மூலம் போக்குவரத்து கழகத்துக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது. பெண்கள் இலவசமாக பயணிப்பதால் வருவாய் இழப்பு ஏற்படும். இதற்கான இழப்பு தொகையை போக்குவரத்துக்கழகங்களுக்கு அரசு வழங்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பாதிப்பு குறைந்த கொரோனா நோயாளிகள் இளைஞர் விடுதிக்கு மாற்றப்படுகின்றனர் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று உறுதியானது. நாள்தோறும் 100 பேருக்கு மேல் தொற்று உறுதியாவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது 733 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐ.சி.யூ. வார்டில் உள்ள படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கூடுதலாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நீலகிரியில் 1,250 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால், அதனை சமாளிக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-

    ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு 5 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்ற பின்னர் தொற்று பாதிப்பு குறைகிறது. அதன் பின்னர் அவர்களை ஊட்டி இளைஞர் விடுதியில் 3 நாட்கள் அனுமதித்து கண்காணித்து சிசிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு 80 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது 25 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பாதிப்பு குறைந்ததும் இங்கு மாற்றப்படுகின்றனர். அதன் பின்னர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் தினமும் 1,700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 1,200 மாதிரிகள் ஊட்டியிலும், 500 மாதிரிகள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 781 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 934 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 148 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் 85 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

    நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 781 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 9 ஆயிரத்து 934 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதித்து 51 பேர் இறந்தனர். மீதமுள்ள 796 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளியிடங்களுக்கு சென்று வருகிறவர்கள் வீடுகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 70 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் 110 படுக்கைகள், ஐ.சி.யூ. வார்டில் 25 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு உள்ளது. குன்னூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 24 படுக்கைகள் உள்ளன. நீலகிரியில் கடந்த 3 நாட்களாக தினமும் 100 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    தற்போது உடல் நிலை அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பரிசோதனைக்காக வருகின்றனர். அறிகுறி தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறியதாவது:-

    ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 70 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ. வார்டில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் படுக்கைகள் நிரம்பி வருகிறது.

    உடல் மோசமான நிலைக்கு சென்ற பின்னர் மருத்துவமனைக்கு வருவதால் நுரையீரல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. 5 நாள் சிகிச்சை அளித்த பின்னர் சி.டி. ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. அதிக பாதிப்பு இருந்தால் கூடுதல் நாட்கள் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. சித்தா மருத்துவ பிரிவு சார்பில் தினமும் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. உடல்நிலை முன்னேற்றம் அடைந்த பின்னர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நோயாளிகளுக்கு மூச்சு பயிற்சி, யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரியில் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 649 பேரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வந்தது. இதற்கிடையே தடுப்பூசி இல்லாததால் 2 நாட்கள் அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து நீலகிரிக்கு கூடுதலாக கோவிஷீல்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2-வது டோஸ் செலுத்த வேண்டியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் நடந்தது.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-

    நீலகிரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தினமும் 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது 1,700 பேருக்கு தினமும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் முடிவுகள் ஒரே நாளில் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் பரிசோதனை மேற்கொள்ள கூடுதலாக கருவிகள் வரவழைக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 9 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி கொண்டு வரப்பட்டு உள்ளது. நீலகிரியில் இதுவரை 4 லட்சத்து 17 ஆயிரத்து 649 பேரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றார்.
    நீலகிரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நேற்று ஒரே நாளில் 113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது. 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து எண்ணிக்கை 9 ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 51 பேர் இறந்துள்ளனர். மீதமுள்ள 640 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவைப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நான்கு தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரியில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 5 கேர் சென்டர் மற்றும் மருத்துவமனைகளில் 1,252 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 427 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மக்கள் அச்சம் கொள்ளாமல், கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். காலதாமதாக செல்வதாலும், அதிக மாத்திரைகள் உட்கொள்வதாலும் நுரையீரல் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்து தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி முகாம், கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.

    தடுப்பு மருந்து போதிய அளவு இல்லாததால், இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வந்தது.

    இதற்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பிற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் என 43 மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னையில் இருந்து கடந்த வாரம் நீலகிரிக்கு 7,200 கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஒரே நாளில் 4,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் ஓரிரு நாட்களில் தடுப்பூசி தீர்ந்தது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை.

    ஊட்டியில் உள்ள மையங்களுக்கு முதல் டோஸ் மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில் 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள பொதுமக்கள் வருகின்றனர். தடுப்பூசி தட்டுப்பாட்டால் செவிலியர்கள் அவர்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதனால் தடுப்பூசி போடும் இடங்கள் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் நீலகிரியில் 2 நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து விரைவில் கோவிஷில்டு தடுப்பூசி வரவழைக்கப்பட இருக்கிறது. அதன் பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என்றனர்.

    ×