search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பாதிப்பு குறைந்த கொரோனா நோயாளிகள் இளைஞர் விடுதிக்கு மாற்றம்

    ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பாதிப்பு குறைந்த கொரோனா நோயாளிகள் இளைஞர் விடுதிக்கு மாற்றப்படுகின்றனர் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று உறுதியானது. நாள்தோறும் 100 பேருக்கு மேல் தொற்று உறுதியாவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது 733 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐ.சி.யூ. வார்டில் உள்ள படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கூடுதலாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் நீலகிரியில் 1,250 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால், அதனை சமாளிக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-

    ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு 5 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்ற பின்னர் தொற்று பாதிப்பு குறைகிறது. அதன் பின்னர் அவர்களை ஊட்டி இளைஞர் விடுதியில் 3 நாட்கள் அனுமதித்து கண்காணித்து சிசிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக அங்கு 80 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது 25 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பாதிப்பு குறைந்ததும் இங்கு மாற்றப்படுகின்றனர். அதன் பின்னர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் தினமும் 1,700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 1,200 மாதிரிகள் ஊட்டியிலும், 500 மாதிரிகள் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×