search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தியில் பரபரப்பு அடுத்தடுத்து 2 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை

    • பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    • காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மாவுரெட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுதாகரன் என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

    சுதாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. சுப்பிரமணி மளிகை கடையில் நேற்று இரவு 10 மணி வரை வியாபாரம் செய்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்த சுப்பிரமணி, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பணம் வைக்கும் டேபிள் கடைக்கு வெளியே உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்த சுதாகரனுக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், மளிகை கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்களும், செல்போன் கடையில் வைத்திருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடுத்தடுத்து 2 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×