என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் சாக்கையர் பகுதியில் வசிப்பவர் மயிலாடுதுறையை சேர்ந்த அய்யப்பன். விவசாய கூலி வேலை செய்து வந்தார்.
இவர் சாக்கையில் புனிதா என்பவரை திருமணம் செய்துகொண்டு அங்கேயே வசித்துவந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று சாக்கையில் சட்ரஸ் பாலத்தின் மேல் உட்கார்ந்து இருந்தபோது அவர் தவறி ஆற்றில் விழுந்து விட்டார். இதில் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் வந்து ஆற்றில் இறங்கி அய்யப்பனின் உடலை கைப்பற்றினர். இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நாகை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் ராஜசேகரன் தலைமையிலான பறக்கும் படையினர் நாகை அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
காரைக்காலில் இருந்து நாகை வழியாக முதுகுளத்தூர் சென்ற அரசு பஸ்சை மறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணி வைத்திருந்த பையில் ரூ. 3 லட்சத்து 26 ஆயிரத்து 207 இருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த பணம் பஸ்சில் வந்த மதுரை மேலபென்னாகரம் பகுதியை சேர்ந்த ஆனந்த் கொண்டு வந்தது தெரிய வந்தது.
இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக உள்ளார். அந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்பட்ட பல்வேறு கடைகளில் வசூல் செய்து கொண்டு வந்தது தெரிய வந்தது.
உரிய ஆவணத்தை செலுத்தி பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இந்த பணத்தை நாகை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு காவல் சரகம் வாய்மேடு உதயதேவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன்(வயது86). இவர் நேற்று மதியம் வேதாரண்யம்– பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது சுந்தரேசன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு பேராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சிவதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகில் உள்ள ஒடியன் குளத்தை சேர்ந்தவர் காத்தையன் (வயது 70) விவசாயி. இவர் திருமாளம் அய்யனார் கோவிலில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
இது பற்றி கிராம நிர்வாக அதிகாரி தமிழ்செல்வம் தலைஞாயிறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வான்குடையில் பறக்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் புதியக் கடற்கரையில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பழனிசாமி, வான்குடையில் பறந்து வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
"தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த பாராளுமன்ற தேர்தலில் மிகக்குறைவான வாக்குபதிவு நடைபெற்ற 138 வாக்குசாவடி மையங்களை இலக்காக வைத்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தெருமுனைப்பிரசாரம், தெருமுனை நாடகம், பேரூந்து போன்ற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், மனித சங்கிலி, விழிப்புணர்வு பேரணி போன்றவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விழிப்புணர்வின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் பாராசூட்டில் பறந்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பின்னர் வேதாரண்யம் கடற்கரையிலும் நடந்தது. மயிலாடு துறையிலுள்ள ராஜன் தோட்டத்திலும் பாராசூட்டில் பறந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் பொதுமக்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவ- மாணவிகள் வான் குடையில் பறந்து புதிய வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகேந்திரன், தாசில்தார் இளங்கோவன் அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சூரக்காட்டில் தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் திருமாறன் தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டுகள் செந்தில் குமார், செல்வேந்திரன், ஸ்ரீதர் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மதுரையை சேர்ந்த பாலமுருகன் பையில் 8 கிலோ 99 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது. அவரிடம் விசாரித்த போது வெள்ளி பொருட்கள் கொண்டு வருவதற்காக உரிய ஆவணங்கள் இல்லை.
இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த வெள்ளி பொருட்களை சீர்காழி சட்ட மன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் தேன் மொழி, தேர்தல் நடத்தும் துணை அலுவலரும், தாசில்தாருமான சண்முகத்திடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகையா மகன் ஆனந்த் (வயது–38). இவர் தாமரைபுலம் தென்கரையில் கஞ்சா விற்பனை செய்தார். அவரை அந்த வழியாக ரோந்து சென்ற வெளிபாளையம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பிடித்து அவர் வைத்து இருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள நெட்டலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி நிர்மா தேவி (35).இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது.
இதனால் அவதிப்பட்ட அவர் விஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16–ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 4 தேதி அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
கட்சி பிரமுகர்களின் படங்கள் மற்றும் சின்னங்கள் அடங்கிய சுவர் விளம்பரங்களயும், விளம்பரபதாகைகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்அவுட் வைப்பது, சுவர்விளம்பரங்கள் செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தேர்தல் ஆணையத்தால் எச்சரிக்கை விடப்பட்டிருந்து.
மேலும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் நிலையான கண்காணிப்புகுழு மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தேர்தல் விதிமுறைகளை மீறி பொது மக்களிடம் பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா என்பது குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வாணாதிராஜபுரத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் முருகேசன் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரை நிறுத்தி சோதனையிட்டதில் அவரிடம் 1 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது.
இப்பணத்தை ராமகிருஷ்ணன் தனியார் சுயஉதவிக்குழுவிற்கு எடுத்துச்செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அப்பணத்தை கைப்பற்றிய நிலையான கண்காணிப்புக் குழுவினர் மயிலாடுதுறை தாசில்தார் பெருமாளிடம் ஒப்படைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள சிக்கல் பகுதியை சேர்ந்த ஒரு மாணவி 10–ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த அப்பு(எ) காளிதாஸ்(22) என்பவர் அவரிடம் காதல் செய்வதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார்.
மேலும் சம்பவத்தன்று காளிதாஸ் மாணவியை தகாத வார்தையினால் திட்டி, திருமணம் செய்து கொள், இல்லை கட்டாய தாலி கட்டிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இயைடுத்து மாணவியின் தந்தை கீவலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் வழக்கு பதிவு செய்து காளிதாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள மகேந்திரபள்ளி சுப்பராயபுரத்தை சேர்ந்தவர் அறிவழகன் (38) தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.
நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவர் புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து புதுப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புதுப்பட்டினம் காவிரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகன் சிவா (8). இவன் புதுப்பட்டினம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று விடுமுறை என்பதால் மாங்கனாம்பட்டு கிராமத்தில் உள்ள தனது மாமா வீரபாண்டியன் வீட்டிற்கு சென்று இருந்தான்.
அங்கு பாழடைந்து பராமரிப்பு இன்றி இருந்த கூரை வீடு முன் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிவா பலத்த காயம் அடைந்தான். அவனை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தான். இது குறித்து கொள்ளிடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






