என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே பறக்கும் படை சோதனையின் போது மலேசிய பணம் சிக்கியது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள வேட்டைக்காரனிருப்பு மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் மலேசிய நாட்டு பணம் (ரிங்கிட்) சிக்கியது. இதன் இந்திய மதிப்பு ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 240 ஆகும். இது குறித்து பறக்கும் படையினர் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது காரில் வந்தவர்கள் மலேசிய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்பது தெரிய வந்தது. அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பணம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆவணங்கள் சரியாக இருந்ததால் அந்த பணம் மலேசிய சுற்றுலா பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
    நாகை மாவட்டம் வேதராண்யம் பகுதியில் திடீர் கோடை மழை பெய்தது.

    வேதராண்யம்:

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் ஒருசில இடங்களில் மழை பெய்யலாம் என்ற வானிலை அறிவிப்பு தமிழகம் முழுவதும் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடும் வெயிலுக்கு இடையே வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும் போது நிச்சயம் நமது பகுதியில் தான் மழை பெய்யும் என்று எதிர்பார்த்து ஏமாந்தும் வந்தனர்.

    இந்நிலையில் நாகை மாவட்டம் வேதராண்யம் பகுதியில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. எங்கே வருவது போல் ஏமாற்றி விடுமோ மழை என்று மக்கள் நினைத்திருந்தனர். அப்போது திடீரென மழை பெய்யத்தொடங்கியது. சிறிது நேரமே மழை நீடித்தாலும் கோடை வெயிலில் இருந்து நிரந்தரமாக தப்பியது போன்ற சங்தோஷத்தை மக்கள் அடைந்தனர்.

    நாகையில் கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவருக்கு சுந்தரவேல் (36), சிங்காரவேல் (26), மணிவேல் (23), சக்திவேல் (20) ஆகிய 4 மகன்கள் உண்டு. இதில் சக்திவேலை தவிர மற்ற 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் சக்திவேலை திருமணம் செய்ய சொல்லி அவரது அக்காள் ஜெயந்தி வற்புறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக நேற்று சக்திவேலுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சிங்காரவேல், சக்திவேலையும், மணிவேலையும் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதில் படுகாயம் அடைந்த சக்திவேலையும், மணிவேலையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை குறித்து நாகை டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் சிங்கார வேலை கைது செய்தனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுக்கடைகளை கொண்டு வந்த கட்சிகளே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது வேடிக்கையாக உள்ளது என்று சீமான் கூறியுள்ளார்.
    மயிலாடுதுறை:

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:&

    நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து முதன் முறையாக 234 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்கிறோம். இந்த தேர்தலை மாற்றத்திற்கான தேர்தலாக பார்க்கிறோம்.

    கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட தி.மு.க. - அ.தி.மு.க.வை மாற்ற வேண்டும். பணப்புழக்கத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்.

    மே 4-ந் தேதிக்கு மேல் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை காண்பீர்கள். தமிழக மீனவர்கள் 840 பேரை இலங்கை ராணுவம் கொலை செய்ததை எந்த கட்சியும் கண்டித்ததா?

    ஆந்திராவில் 20 கூலி தொழிலாளிகளை வனத்துறையின் சுட்டு கொன்றார்களே? அதற்கான நடவடிக்கை எடுத்தார்களா?
    மதுக்கடைகளை கொண்டு வந்த கட்சிகளே பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது வேடிக்கையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து 10 மீனவ கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செயதுள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதற்காக போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில் 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று தரங்கம்பாடியில் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து மே 16-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    “மீன்பிடி துறைமுகம் தேவை என்பதை கடந்த 15 ஆண்டுகளாக மீனவர்கள் வலியுறுத்தினர். இத்தனை ஆண்டுகளும் எந்த அரசியல் கட்சியும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த கோரிக்கைக்காக கடந்த ஆண்டு மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தது. எனினும் ஒன்றும் நடக்கவில்லை.

    நீண்டகாலமாக நிலுவையில் உள்ள எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் தேர்தலை புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டத்தில் தேர்தல் பணி குறித்து மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயிற்சி அளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்,ஏப்.17–

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது மாவட்ட கலெக்டர் பழனிசாமி பேசுகையில் கூறியதாவது;

    தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கான 2–ம் கட்ட பயிற்சி நடைபெற்றுள்ளது. தற்போது 140 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு அலுவலர் தேர்தலுக்கு முன் வாக்குப்பதிவு இயந்திரத்தினை கையாளும் முறை, மாதிரி வாக்குப்பதிவு நடத்தும் முறை மற்றும் வாக்குப்பதிவின் போது செய்யப்பட வேண்டியவை போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது, செய்யப்படவேண்டிய பணிகள், போன்ற சந்தேகங்களுக்கு விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி அளிக்கப்பட்ட மண்டல அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இப்பயிற்சியினை அளிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இப்பயிற்சியில் உதவி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தெய்வநாயகி, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (ம) வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பு அலுவலர் ராமன், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில் நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட செங்கல் கால்வாய். 35 ஆயிரம் செங்கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

    இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயன் படுத்தப்பட்டு வருகிறது. கழுகானிமுட்டம் பகுதியில் கலியமூர்த்தி என்பவர் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நஞ்சை நிலத்தில் நெல் சாகுபடியை கடந்த 25 ஆண்டுகாலமாக செய்து வருகிறார்.

    தற்போது இந்த நிலத்தில் செங்கல் கால்வாய் அமைத்து நிலத்தை பாழ்படுத்தியுள்ளார். இத்தகவல் இந்து அறநிலையத் துறைக்கு தெரியவர இணை ஆணையர் கஜேந்திரன் உத்தரவின் பேரில் கும்பகோணம் உதவி ஆணையர்ஞானசேகரன் தலைமையில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் மயிலாடுதுறை போலீசார் உதவியுடன் விளைநிலத்தை பாழ்படுத்திய இடத்தில் உள்ள கால்வாயில் சுமார் 35 ஆயிரம் செங்கற்களை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில், கடந்த சில வருடங்களாக கோவிலுக்கு வழங்க வேண்டிய சுமார் 100 குவிண்டால் நெல் வழங்க வில்லை. இங்கு செங்கல் கால்வாய் அமைக்க அனுமதி பெறவில்லை. வருவாய்துறையினரின் அனுமதியும் பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் செயல் அலுவலர் சுரேஷ் புகார் செய்து உள்ளார்.
    வேதாரண்யம் அருகே குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி.
    தலைஞாயிறு:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் புதுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர்களது மகன்கள் சூர்யமூர்த்தி (வயது 30),  கார்த்திகேயன் (28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை.  கூலி வேலை செய்து வருகிறார்கள்.

    கார்த்திகேயன் எஞ்சின் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். ராமச்சந்திரன் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தாயார் சந்திராவுடன் அண்ணன், தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களது தங்கை சுகுணாவை திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.

    இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சூர்யமூர்த்தி அடிக்கடி குடித்து விட்டு வருவதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று 2 பேருக்கும் ஏற்பட்ட தகராறில் கார்த்திகேயன் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சூர்யமூர்த்தியை மார்பில் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் சூர்யமூர்த்தி  சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் இண்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார்த்திகேயனை தேடி வருகிறார். தகவலறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் சர்மா ராஜகோபால், வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளரை மாற்றக் கோரி போராட்டம் நடைபெற்றது.
    சீர்காழி:

    தமிழகம் முழுவதும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இத் தேர்தலில் நாகை மாவட்டம் சீர்காழி (தனி)தொகுதியில் போட்டியிட  முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் உள்பட 27 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.

    பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என கட்சியினர் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளராக கிள்ளை ரவீந்திரன் அறிவிக்கப்பட்டார்.

    இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர். இது உள்ளூர் தி.மு.க. வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தொகுதிக்கு அறிமுகம் இல்லாத கிள்ளை ரவீந்திரனை மாற்ற வேண்டும் என தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேட்பாளரை மாற்றக் கோரி சீர்காழி புதிய பஸ்ய நிலையம் அருகே 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின் போது தி.மு.க. கிளை நிர்வாகிகள் திருவாலி ரவிச்சந்திரன், மதி, திருவெண்காடு கிருஷ்ணசாமி மற்றொரு கிருஷ்ணசாமி உள்ளிட்ட 4 பேர் தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்தனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து தி.மு.க.வினர் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
    இந்த சம்பவத்தால் சீர்காழியில் பரபரப்பு நிலவியது.

    போராட்டம் குறித்து அல்லி விளாகத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறும் போது, தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தி.மு.க. வின் வெற்றி வாய்ப்பு குறைந்து விட்டது. தி.மு.க.வே அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு உதவியது போல் உள்ளது. வேட்பாளர் ஓட்டு கேட்டு தொகுதிக்குள் வந்தால் வரை தடுத்து நிறுத்துவோம். மாவட்ட செயலாளர் சமரம் செய்தாலும் ஏற்க மாட்டோம். அவரையும் திருப்பி அனுப்புவோம் என ஆவேசமாக தெரிவித்தார்.

    சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி இன்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் பஸ் நிலையத்தில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு சையது, மாவட்ட பிரதிநிதிகள் மணிமாறன், ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமரன், நாகராஜன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    போராட்டம் காரணமாக சீர்காழி-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேட்பாளரை மாற்றாவிட்டால் ஒட்டு மொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்வோம் என அவர்கள் தெரிவித்தனர்.
    கடன் தொல்லையால் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உள்ள வானவன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (32). மீனவர். இவர் 2 தடவை வெளி நாடு சென்று உள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.மேலும் குடும்ப பிரச்சினையும் இருந்து வந்தது. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டின் கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தலைஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தரங்கம்பாடியில் பள்ளி மாணவி கடத்திய வாலிபர் மீது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

    தரங்கம்பாடி:

    வேளாங்கண்ணி வடமலை பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் தரங்கம்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த வெற்றி என்ற வாலிபரும் அந்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த தகவல் அந்த பெண் படிக்கும் பள்ளிக்கு தெரியவந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் அந்த மாணவியின் பெற்றோரை அழைத்து புகார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து மாணவியை அவர்களது பெற்றோர் கண்டித்துள்ளனர். அதேபோல் அந்த வாலிபரையும் சந்தித்து தனது மகளுடன் சுற்றுவதை தவிர்த்து கொள்ளவும் என எச்சரித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று கேட்டபோது அவர் தேர்வு முடிந்தவுடன் சென்று விட்டதாக கூறியுள்ளனர்.

    பின்னர் மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை.

    எனவே தனது மகளை வெற்றி கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்த மாணவியின் தந்தை பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவ செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    குத்தாலம் அருகே விளையாட்டு மைதானத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க முயன்றதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடியில் 40 சென்ட் நிலப்பரப்பில் விளையாட்டு மைதானம் உள்ளது. இதில் 4.5 லட்சம் மதிப்பில் கிராம மக்கள் தரைதளம் அமைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த இடத்தில் 120 ஆண்டுகள் பழமையான புளிய மரம் ஒன்று இருந்தது. கடந்த மார்ச் மாதம் 1–ந்தேதி சிலர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வனத்துறையினரின் அனுமதியின்றி இந்த புளிய மரத்தை வெட்ட முயன்றதை கண்ட கிராம மக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது இங்கு 30 லட்சம் மதிப்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து கிராம மக்கள் நாகை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து இந்த இடம் அரசு உயர்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, பள்ளிவாசல், கடைவீதி ஆகியவற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் மாற்று இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்குமாறு மனு அளித்துள்ளனர். அப்போது மாவட்ட கலெக்டர் அவர்களிடம் தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் முடியும் வரை இந்த இடத்தில் எந்த பணியும் நடைபெறாது. தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு காணப்படும் என கிராம மக்களிடம் உறுதிஅளித்துள்ளார்.

    இந்நிலையில் வெட்டப்பட்ட புளிய மரத்தை நேற்று ஜே.சி.பி.இயந்திரம் மூலம் ஒப்பந்தகாரர்கள் அகற்ற முயன்றுள்ளனர். இதை கண்ட கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விரைந்து வந்த பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, ஒப்பந்தகாரர்கள் மற்றும் கிராம மக்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் தேர்தல் முடியும் வரை சட்டம்–ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க அந்த இடத்தில் எந்த பணியும் நடைபெறாது என உறுதிஅளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் நுகர்பொருள் வாணிப கழக உதவிப் பொறியாளர் ராமநாதன், வருவாய் ஆய்வாளர் கவிதாஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
    ×