என் மலர்
நாகப்பட்டினம்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறப்பு யாகம் செய்தார்.
2016 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அ.தி.மு.க. தலைமை சீட்டு வழங்கியது. தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் பணம் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டதால் அந்த தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்துதேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் வந்தார். முன்னதாக கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த யாகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். அதைதொடர்ந்து சிக்கல் சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிங்காரவேலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, வேல் நெடுங்கண்ணி அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இதுதொடர்பாக கேட்டபோது சாமி தரிசனம் செய்வதற்காக வந்தேன் என்று கூறினார்.
நாகப்பட்டினம்:
கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
ஆனால் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்ப்பது, வர்ணம் பூசுவது, வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து 45 நாட்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 29-ந்தேதி நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஒரு வார காலம் நடுக்கடலில் படகிலேயே தங்கி மீன் பிடித்து கொண்டு கரைக்கு திரும்பி வருவார்கள்.
அவ்வாறு செல்லும் மீனவர்கள் ஒரு வார காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள், ஐஸ் கட்டிகள், டீசல் உள்ளிட்டவைகளை படகில் எடுத்து செல்கின்றனர். விசைப்படகு மூலம் இறால், நண்டு, சிங்கி இறால், பெரியவகை மீன்களான சுறா, கடல் விறால், வஞ்சிரம் உள்ளிட்ட மீன் வகைகள் பிடித்து வருவார்கள்.
இந்த நிலையில் 45 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற நாகைமீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அவர்களின் வலைகளில் அதிக அளவிலான மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மீன் விலை குறைந்ததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து நாகை கடுவையாற்றங்கரையில் நேற்று மீன் வாங்குவதற்காக மக்கள் அதிகமாக வந்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் 45 நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து கடந்த 29-ந்தேதி நள்ளிரவு கடலுக்கு சென்றோம். அப்போது எங்களது வலைகளில் அதிக அளவில் மீன்கள் சிக்கின. இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது மீன் விலை குறைந்ததால் ஏமாற்றமாக உள்ளது என்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் சமூக பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது
விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமபுறமாயின் 98 ஆயிரம் மற்றும் நகர்புறமாயின் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு அடைந்தவராகவும், 60 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் 1 நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். மகளிர் திட்ட அலுவலகத்தில் மதிப்பீடு பெற்ற சுய உதவிக்குழுக்களுக்கு தொழிற்கடன் வழங்கப்படும்.
சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள், விவசாயம், போக்குவரத்து, கைவினைஞர் மற்றும் மரபுவழிச் சார்ந்த தொழில்கள், இளம் தொழிற்பட்டதாரிகள் சுயதொழில், தொழிற்கல்வி பயிலுதல் போன்ற தொழில்களுக்கு இக்கடன் வழங்கப்படும்
கடன் விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்படும். கடன் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச்சான்று மற்றும் தொழில் சார்ந்த திட்ட வரைவறிக்கை ஆகியவற்றின் நகல்களுடன் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்: 22–ல் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பம் சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்பட்டு தகுதியிருப்பின் கடன் தொகை சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் இதனை கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம் தாலுகா வேட்டைகாரணிருப்பு காவல் சரகம் வேட்டைகாரணிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மகன் அருள்தாஸ்(50). வேட்டைகாரணிருப்பு ஊராட்சியில் வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஊர் பகுதியில் நாகை மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது விழுந்தமாவடியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த விழுந்தமாவடியை சேர்ந்த மாணிக்கம் மகன் அர்சுணன்(34) மாணிக்கம் மகன் ஆனந்தராசு(43) ராமசாமி மகன் சரவணன்(37) ஆகிய மூவரும் அருள்தாஸ் மீது மோதுவது போல் சென்றார்களாம்.
இதை பார்த்த அருள்தாஸ் ஒதுங்கி செல்லக் கூடாதா என்று கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த மூவரும் அருள்தாசை தரக்குறைவாக பேசி காயமில்லாமல் கையால் தாக்கி கவுன்சிலராக இருந்தால் நீ எங்களை என்ன செய்ய முடியும் எனக் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினார்களாம்.
இது குறித்து அருள்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் வேட்டைகாரணிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அர்சுணன், ஆனந்தராசு, சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து வேதாரண்யம் கோர்டில் ஆஜர் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமைலாடி, சீயாளம் யாதவ தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் இளவரசு. விவசாயி. இவர் நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
சீர்காழி தாலுகா ஆணைக்காரன் சத்திரம், மேலவல்லம், காலனியை சேர்ந்த ரத்தினம் மகன் கலைச்செல்வன் என்பவர் கொள்ளிடம் ரெயில்வே ரோடு பகுதியில் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை சீட்டு நடத்தி வந்தார். நானும் இந்த ஏல சீட்டுகளில் பலமுறை சேர்ந்து ஏலம் எடுத்துள்ளேன். அந்த நம்பிக்கையில் கடைசியாக ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என 2 சீட்டுகளில் சேர்ந்தேன். இந்த 2 சீட்டுகளும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 35 நாட்களுக்கு முன்பு கலைச்செல்வனிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் தனக்கு சீட்டில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் ஏல சீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திரும்ப தரமுடியாது என்றும், தனது வாழ்க்கையை முடித்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை கண்டதும் எனக்கு பெரும் அதிர்ச்சியும், மனஉளைச்சலும் ஏற்பட்டது.
கடிதத்தை கண்டவுடன் கலைச்செல்வனை தேடி சென்ற போது அவரது வீடு மற்றும் அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. பின்னர் அருகில் விசாரித்தபோது கலைச்செல்வன் ஏலச்சீட்டு நடத்தி 100–க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.3 கோடிக்குமேல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
கலைச்செல்வன், அவரது மாமனார் மற்றும் மனைவி பெயரில் சிதம்பரம் பைபாஸ் சாலையில் 20 பிளாட்டுகள் வாங்கி உள்ளார். இதன் தற்கால மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும். மேலும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருப்பியுள்ளார். கலைச்செல்வன் ஏமாற்றும் நோக்கத்தோடு ஏலச்சீட்டு நடத்தி என்னிடமும், மற்றவர்களிடமும் பணத்தை வசூல் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவருடைய மாமனாரிடம் கேட்டபோது, கலைச்செல்வன் எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்று கூறுகிறார். எனவே, ஏலச்சீட்டு நடத்தி என்னையும், மற்றவர்களையும் ஏமாற்றி மோசடி செய்த கலைச்செல்வனையும், அவருக்கு உதவியாக உள்ள அவரது மாமனார் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட சிறுபாமையினர் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர்கள் ஆக மொத்தம் 10 மாணவ– மாணவியரைத் தேர்வு செய்து அவர்கள் விரும்புகின்ற தமிழகத்திலுள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் 11–ஆம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற ஏதுவாக அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் உதவிபெற விரும்பும் மாணவ மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந்தபட்சமாக ஆண்டுக்கு ரூ.28 ஆயிரத்துக்கு மிகாமல் இரண்டாண்டுகளுக்கு ரூ.56 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
தகுதியுடைய மாணவ–மாணவியர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கு பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் சுதாகரன் (வயது 30), இளைய மகன் ராஜ் (25). இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவரும் புஷ்பநாதனிடம் சொத்தை பிரித்துக்கொடுக்கும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் சொத்தை 2 பாகமாக பிரித்து கொடுத்துள்ளார். அதில் இளையமகன் ராஜூக்கு ஒரு சவுக்குதோப்பை அதிகமாக எழுதிவைத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகரன் நேற்று வீட்டில் இருந்த புஷ்பநாதனிடம் சென்று தகராறு செய்துள்ளார். அதனை கண்ட ராஜ் அண்ணனை தட்டி கேட்டுள்ளார்.அப்போது சுதாகரன் தனது தம்பி ராஜை தாக்கியுள்ளார். இளைய மகன் அடிவாங்குவதை பார்த்து ஆத்திரம் அடைந்த புஷ்பநாதன் கட்டையை எடுத்து சுதாகரன் தலையில் அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வேதாரண்யம் கருப்பம்புலம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டணர். அப்போது கருப்பம்புலம் கிராமத்தில் புழுதி மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் மணல் ஏற்றுவதற்கு எந்தவித அனுமதியும் ஆவணமும் இல்லை. இதனால் அந்த டிராக்டரை பறிமுதல் செய்து வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துவிட்டு இது சம்மந்தமான புகாரை நாகப்பட்டினம் வருவாய் கோட்டாசியருக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் கனகர் தெருவை சேர்ந்தவர் சேகர் (59). இவரது மனைவி அனுசியாபாய். இவர்களது மகன் விக்னேஷ். இவரின் திருமணத்துக்காக கடந்த 28-ம் தேதி வைத்தீஸ்வரன் கோவில் சன்னதிதெருவில் உள்ள ஒரு ஜோதிடரிடம் சேகர் ஜாதகம் பார்த்தார். பின்னர் அங்குள்ள ஒரு விடுதி அறையில் தங்கினார். நேற்று காலை அந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்துக்கு காவலாளி சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் அழகுதுரை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தவபாண்டி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சேகர் இறந்து கிடந்தார்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சேகர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன்கள் வீரகுமார் (வயது 25) மணிகண்டன் (22). இவர்கள் இருவரும் நாலுவேதபதியில் உள்ள அவர்கள் தங்கை வனிதா வீட்டிற்கு சென்று வெள்ளை அடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கோவில்பத்து திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ஜெயகுமார் (26) திலகரசன் (23) பிரபாகரன் (26) ரஞ்சித் (22) மகேஷ் (22) உள்பட சிலர் சேர்ந்து வீரகுமார், மணிகண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்களாம்.
இதைத் தொடர்ந்து வீரகுமார், மணிகண்டன், அவர்களது தங்கை வனிதா ஆகிய 3 பேரையும் பீர் பாட்டிலால் அடித்து தாக்கிஉள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட வீரகுமார், மணிகண்டன், வனிதா ஆகிய 3 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேட்டைகாரனிருப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கண்ட ஜெயகுமார், திலகரசன், பிரபாகரன், ரஞ்சித், மகேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட சிலரை தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம் அருகே ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60) கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேலை செய்து விட்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேதாரண்யத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு சாலை தடுப்பு இரும்பு தட்டிகள் ஏற்றி சென்ற போலீஸ் லாரி எதிர்பாராமல் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையை அடுத்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி கலா (வயது 37). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. சிவதர்ஷினி (7), பரிசா(4) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி கலாவின் அண்ணன் சிவலிங்கம் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது இறுதிசடங்கிற்காக கலா தனது கணவருடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் சிவலிங்கத்தின் தங்கை என்ற முறையில் கலா சடங்கு செய்ய சென்றார். அப்போது அவரது கணவர் பாண்டியன் சடங்கில் கலந்து கொள்ளவேண்டாம் என்று கலாவை தடுத்துள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கலா உறவினர்கள் முன் கணவர் பாண்டியனை திட்டியதால் அவமானமடைந்த அவர் கலாவிடம் இனி உன்னுடன் நான் வாழமாட்டேன். என்னுடன் நீ ஊருக்குவரக்கூடாது என கூறி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து கலா புதுச்சேரியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று கலா வீட்டிற்கு வந்துள்ளார். அவரை கண்டு ஆத்திரம் அடைந்த பாண்டியன் அவரை அடித்து, உதைத்து அவர் மீது மண்எண்ணை ஊற்றி எரித்து கொல்ல முயன்றுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிய கலா இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வெளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.
கணவரே மனைவியை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






