என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் கடற்பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்பிடி தொழில் பாதிப்பு அடைந்துள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை, வானவன்மகாதேவி, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடும் சூறைக்காற்றால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் வீடுகளிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

    45 நாட்கள் தடைகாலம் முடிந்து கடந்த ஒருவார காலமாக மீனவர்கள் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என கடலுக்கு சென்று வந்தனர். ஆனால் குறைந்த அளவே மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் கோடியக்கரை முதல் வெள்ளப்பள்ளம் வரையான கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருவதால் சுமார் 2000 பைபர் படகுகளில் நாள்தோறும் சென்று வரும் 5000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியவில்லை.

    மீனவர்கள் கடும் காற்றினால் மீன்பிடிக்க முடியாமல் வெறும் கையோடு கரைக்கு திரும்பி வந்தனர். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கடும் காற்றினால் வலைகள் ஒன்றோடு ஒன்று சிக்கி சேதமடைந்து கரை திரும்பியுள்ளனர். வேதாரண்யம் தாலுக்காவில் இயற்கை சீற்ற காலங்களில் படகை நிறுத்துவதற்கு துறைமுக வசதி இல்லாததால் தங்களது படகுகளை கரையிலும் கடலிலும் நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் கடும் காற்றினால் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன என மீனவர்கள் தெரிவித்தனர். 45 நாட்கள் தடை காலத்திலேயே அதாவது 15 நாட்களுக்கு முன் கூட்டியே வீசவேண்டிய இந்த தென்றல்காற்று (சூறைக்காற்று) தடைகாலம் முடிந்து தற்போது வீச துவங்கியுள்ளதால் மீன்பிடி தொழில் பாதிப்படைந்துள்ளதாகவும் இக்காற்று ஓய்வதற்கு ஒருவார காலம் ஆகும் எனவும் அதன்பிறகே மீன்பிடிக்க செல்வோம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
    துபாயில் விபத்தில் பலியான நாகை வாலிபரின் உடலை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் பழனிச்சாமியிடம், மனைவி மனு அளித்துள்ளார்.
    நாகை:

    நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா வழுதலைக்குடி அக்ரஹாரத்து மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். கொத்தனார். இவரது மனைவி முத்தரசி. இவர் நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பழனிச்சாமியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    என் கணவர் கடந்த ஆண்டு துபாய் நாட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கொத்தனார் வேலை பார்ப்பதற்காக உரிய பாஸ்போர்ட், விசாவுடன் சென்றார். கடந்த 2ந்தேதி பணியில் இருந்த போது ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக, அங்குள்ள என் உறவினர் ஒருவர் செல்போன் மூலம் தெரிவித்தார்.

    அவரது உடல் ஷிகிமிதி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். துபாய் சென்று என் கணவரின் உடலை வாங்கி வரும் அளவிற்கு எனக்கு வசதியில்லை. நான் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்.

    என் மீது கருணை காட்டி, என் கணவரின் உடலை இந்திய தூதரகம் மூலம் பெற்று திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டி கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
    மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே காருகுடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் ராஜதுரை (வயது 21). இவரது நண்பர்கள் கடலங்குடி அரண்மனை தெருவை சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டியன் (25), அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் விஜய் (17). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் காருகுடியில் இருந்து கடலங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அருண்பாண்டியன் ஓட்டினார்.

    கடலங்குடியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் அருகே ஒரு வளைவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அந்த பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜதுரை, அருண்பாண்டியன், விஜய் ஆகிய 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜதுரை, அருண்பாண்டியன் ஆகிய 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜதுரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே இறால் மீன் விற்கும் தகராறில் அண்ணன்–தம்பியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரன் இருப்பு பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருக்கு ராஜா (வயது 27), அருள் (25) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    இவரின் மூத்த மகன் ராஜா இறால் மீன்களை பிடித்து அதே ஊரில் வசிக்கும் கோவிந்தசாமி மகன் அருள் என்பவரிடம் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

    சம்பவத்தன்று ராஜா தான்பிடித்த இறால் மீன்களை அருளிடம் கொடுக்காமல் வேறு ஒரு வாடிக்கையாளருக்கு மீனை விற்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அருள் தனது நண்பர்களான செல்லத்துரை மகன் அருள், செல்வராஜ் மகன் சதீஷ், பக்கிரிசாமி மகன் உதயகுமார், சொக்கலிங்கம் மகன் முருகன், சுதாகர் ஆகிய 6 பேருடன் சென்று ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதை தட்டி கேட்ட ரா ஜாவின் தம்பி அருளிடம் அவர்கள் தகராறு செய்து தாக்கினார். இதில் பலத்தகாயம் அடைந்த ராஜா வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு திருவாரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில் வேட்டைக்காரன் இருப்பு சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து சதிஷ் (27), அருள் (30), சுதாகர் (26) ஆகிய 3 பேரை கைது செய்தார். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்.

    வேதாரண்யம் அருகே ரோட்டில் 2 பேர் மது குடித்து கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள ஆண்டகத்துறையைச் சேர்ந்தவர் சேகர். இவரும் கரியாப்பட்டினத்தை சேர்ந்த சித்திரவேல் என்பவரும் செண்பகராயநல்லூர் என்ற இடத்தில் மோட்டர் சைக்கிளை நிறுத்தி வைத்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் அவர்களை கண்டித்தார்.

    அப்போது ரகளையில் ஈடுபட்ட அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யத்தில் கோடைவெயில் கொளுத்திய நிலையில் நேற்று இரவு 8.40 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் கோடைவெயில் கொளுத்திய நிலையில் நேற்று இரவு 8.40 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யத்தில் 20.4 மில்லி மீட்டர் மழையும், தலைஞாயிறில் 44.4 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதைப்போல் தஞ்சை மாவட்டத்திலும் நேற்று சில இடங்களில் மழை பெய்தது.

    கும்பகோணத்தில் நேற்று மாலை 1 மணிநேரம் மழை பெய்தது. தஞ்சையில் நேற்று மாலை மேகம் கருத்து மழைபெய்வது போல் இருந்தது ஆனால் மழை பெய்யவில்லை.

    நாகையில் கத்தியை காட்டி மிரட்டி பூ வியாபாரியிடம் ரூ. 1100 பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நாணயக்கார தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43) பூ வியாபாரி. இவர் புத்தூர் அண்ணாசிலை அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது நாகை, அக்கரை குளத்தை சேர்ந்த முனீஸ்வரன் (36) அங்கு வந்தார். அவர் கத்தியை காட்டி ரமேசை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1100–ஐ பறித்து சென்றுவிட்டார்.

    இதுபற்றி ரமேஷ் நாகை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த முனீஸ்வரனை கைது செய்தனர்.

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே தம்பியை கொலை செய்த அண்ணணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் பொறையாறு சின்னூர்பேட்டை மேலதெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது56). அதே பகுதியில் இவருடைய தம்பி ஆறுமுகம் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 2010–ம் ஆண்டு மே 8–ந்தேதி ஆறுமுகம் தனது மனைவி அஞ்சம்மாளுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கண்ணதாசனுக்கும், ஆறுமுகத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணதாசன் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஆறுமுகத்தை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை காரைக்கால் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு நாகை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார், கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதம் கட்ட தவறினால் ஓராண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

    சீர்காழி அருகே குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கலைச்செல்வி(வயது 26). இவர்களுக்கு சுபிக்ஷா(5), அருண்(2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 29-ந்தேதி சுரேஷ் மனைவி கலைச்செல்வி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது அவரது மனைவி, குழந்தைகளை காணவில்லை. உடனே அவர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குத்தாலம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி வெள்ளாளத் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி ரேவதி (வயது 38). இவருடைய மகன் சிரஞ்சீவி. இவர், நேற்றுமுன்தினம் திருமணஞ்சேரி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் தனது மினி ஆட்டோவை கழுவி கொண்டிருந்தார். அப்போது அவர் தனது நண்பர்களிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக தெரிகிறது.

    அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் மனைவி சுமதி, மகள் செல்வியுடன் சென்று கொண்டு இருந்தார். சிரஞ்சீவி பேசியதை கேட்ட சுமதி, அவரிடம் ஏன் தேவையில்லாமல் தகாத வார்த்தைகளை பேசுகிறாய்? என தட்டி கேட்டார். இதனால் சிரஞ்சீவிக்கும், சுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அதன்பின்னர் வீட்டிற்கு சென்ற சுமதி, இதுகுறித்து தனது கணவர் கல்யாணசுந்தரம், மகன் செல்வகணபதி ஆகியோரிடம் கூறினார். அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த செல்வகணபதி, தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் சிரஞ்சீவி வீட்டுக்கு சென்றார்.

    அப்போது சிரஞ்சீவி வீட்டில் இல்லாததால், அவரது தாய் ரேவதியை திட்டி, தாக்கினர். மேலும் அவர்கள் சிரஞ்சீவிக்கு கொலைமிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயம் அடைந்த ரேவதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீசார், சுமதி, கல்யாணசுந்தரம், செல்வ கணபதி, தனபால் உள்ளிட்ட 10 பேர் மீதும், செல்வகணபதி (23) கொடுத்த புகாரின் பேரில் சிரஞ்சீவி உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இருதரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மேலும் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திருமணஞ்சேரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாகப்பட்டினம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாகப்பட்டினம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை கலெக்டர் பழனிசாமி வழங்கி துவக்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:–

    நடப்பு கல்வியாண்டில் பள்ளி திறக்கும் நாளன்றே மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மாணவ-மாணவிகள் இந்த பாடப்புத்தகங்களை படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.

    ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு நல்ல முறையில் கல்வி கற்பித்து அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் எந்தெந்த பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்பதை கண்டறிந்து, அந்த பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளையும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம் மற்றும் சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளையும் பாராட்டி கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், மாவட்டக் கல்வி அலுவலர் அன்பழகி, மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகுமார் (வயது 24) இவர் கம்பியூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்து வந்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 30–ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வந்தார். அங்குள்ள லார்ஜில் தங்கியிருந்த அவர் நேற்று விஷமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட செல்வக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூர் ஆண்டவர் தர்ஹா குளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பது தெரியவந்தது. அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் யார் ? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது பற்றி தகவல் கிடைத்ததும் நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×