என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறை அருகே ஒரே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் திடீரென மாயமான சம்பவம் மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள மாபடுகை அண்ணாநகரை சேர்நத ராஜேந்திரன் என்பவர் மகன் ராஜேந்திரன். இவரும், அந்தபகுதியை சேர்ந்த மணி என்பவர் மகன் கார்த்தி (12) ஆகிய இருவரும் மூவலூர் ஊராட்சி ஒன்றய பள்ளியில் படித்து வந்தனர்.

    இவர்கள் கடந்த 14–ந்தேதி பள்ளிக்கு சென்றனர். பின்னர் வீட்டுக்கு வரவில்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்கள் எனபது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மாயமான மாணவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று மயிலாடுதுறை ரெயில் நிலையம் சென்று அங்கிருந்து விழுப்புரம் பாசஞ்சர் ரெயில் ஏறி சென்றது தெரியவந்துள்ளது.

    எனவே அவர்கள் விழுப்புரம் பகுதியில் உள்ளனரா? அல்லது அவர்களை மர்ம நபர்கள் யாரும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே பள்ளியில் படிக்கும் 2 மாணவர்கள் திடீரென மாயமான சம்பவம் மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    குத்தாலம்:

    குத்தாலம் அருகே அடுத்த சித்தாம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் செந்தில். கோமல் பகுதி அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். கோமல் பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி. தி.மு.க வார்டு உறுப்பினர்.

    இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் கணபதியின் தாய் மற்றும் அவரது மனைவிக்கு செந்தில் வேலை வழங்கவில்லையாம். இது குறித்து கணபதி, செந்திலிடம் கேட்டபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செந்திலுக்கு கணபதி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அவர் பாலையூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    தரங்கம்பாடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை மேற்பார்வையில் சீர்காழி மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மயில் சாமி மற்றும் போலீசார் நேற்று இரவு தரங்கம்பாடி அருகே உள்ள ஆயப்பாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி ஒரு கார் வந்தது. அதனை போலீசார் நிறுத்தினார்கள். அப்போது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    அதனை போலீசார் சோதனை செய்த போது அதில் 20 அட்டை பெட்டிகளில் 180 மில்லி லிட்டர் கொள்ளவு கொண்ட 960 மது பாட்டில்கள் இருந்தது.

    இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுபாட்டில்கள் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். காரும் கைப்பற்றப்பட்டது. அதனை சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    மதுபாட்டில்கள் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அதனை கடத்தி வந்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மேலநாங்கூர் பாலசுப்பிரமணியன் மகன் செல்வம்(28). அதே ஊரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மணிவண்ணன்(27). இவர்கள் ராகவன் மகன் ரகுவரன் 3பேரும் மயிலாடுதுறை நோக்கி தரங்கை சாலையில் மன்னம்பந்தல் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    தருமபுரம் ஆர்ச் பகுதியில் முன்னே சென்ற பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே கார் வந்ததால் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்து மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிவண்ணன் இறந்தார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும் படுகாயம் அடைந்த இருவர் மயிலாடுதுறையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    காரைக்காலில் பஸ்சில் கடத்தி வந்த 8½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற ஆம்னி பஸ்சை காரைக்காலில் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது பஸ்சில் இருந்த ஒரு பையில் 8½ கிலோ தங்கம் இருந்தது. அதற்கு எந்த உரிய ஆவணமும் இல்லை. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 2½ கோடியாகும்.

    தங்கம் கடத்தியது தொடர்பாக காரைக்காலை சேர்ந்த ஒருவரையும், நாகூரை சேர்ந்தவரையும் அதிகாரிகள் நாகப்பட்டினத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னரே எந்த ஊருக்கு தங்கம் கடத்தப்பட்டது என்பது தெரிய வரும்.

    8½ கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம் அருகே மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 3 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை ஆறுகாட்டு துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, விழுந்தமாவடி உள்ளிட்ட பல கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களிலுள்ள மக்கள் மீன்பிடி தொழிலை தங்களது முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திலிருந்து சாமிக்கண்ணு(55) என்ற மீனவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த காளிதாஸ்(22) கலையரசன்(19) வினித்(19) ஆகிய 3 பேரும் வெள்ளப்பள்ளத்திலிருந்து தென்கிழக்கு பகுதியில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இவர்கள் மீன்பிடித்து விட்டு அன்று மதியமே கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    மீனவர்கள் திசைமாறி சென்று வேறு பகுதிக்கு கரை சேர்ந்தார்களா? அல்லது படகு என்ஜின் பழுதடைந்து நடுக்கடலில் சிக்கித் தவிக்கிறார்களா? இலங்கை கடற்படையினர் இவர்களை பிடித்து சென்றார்களா? என்று தெரியவில்லை. இது குறித்து கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மீனவர்கள் சென்ற படகு மட்டும் வெள்ளப்பள்ளத்திற்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் ஆள் இல்லாமல் மீன் மற்றும் வலையுடன் இருந்ததை கண்டு கடலோர காவல்படையினர் மீட்டு காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தப் படகு மாயமான 3 மீனவர்கள் பயன்படுத்திய படகு என்று சக மீனவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணியில் சக மீனவர்களும் கடலோர காவல்படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் வெள்ளப்பள்ளம் கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வேதாரண்யம் அருகே குடும்பத் தகராறில் 1½ மாத குழந்தையை தூக்கி வீசிய தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் காவல் சரகம் செண்பகராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சதீஷ்(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சீதாமணி(19) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ சக்தீஸ்வரராம் என்ற 1½ மாதம் ஆண் குழந்தை உள்ளது.

    கணவன்–மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சதீஷ், தனது 1½ மாத குழந்தையை தூக்கி வீசினாராம். இதில் பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சதீஷை தேடி வருகின்றார்.
    வேதாரண்யம் அருகே வயலுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதி அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணியன் (வயது65). விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்வபத்தன்று அதே ஊரில் உள்ள ஒருவரது வயலுக்கு வேலைக்கு சென்றார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த மணியனை பாம்பு கடித்து விட்டது.

    உடன் அவரை மீட்டு தலைஞாயிறில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    நாகையில் பணியின்போது இறந்த கிராம நிர்வாக அலுவலர்களின் மகன்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 20 மனுக்களும், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 244 என மொத்தம் 264 மனுக்கள் பெறப்பட்டது.

    மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் குத்தாலம் வட்டம் மாதிரி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ் பணியின் போது மரண மடைந்ததால் அவரின் மகன் தென்னரசுக்கும், தரங்கம்பாடி வட்டம் மாணிக் கபங்கு கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் பணியின் போது இறந்ததால் அவரின் மகன் உதயகுமார் ஆகியோருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் மயிலாடுதுறை கோர்ட்டில் புதுச்சேரி காங்கிரஸ் கொறடா ஆஜர் ஆனார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவிலில் மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் மூர்த்தி கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 2–ந் தேதி மர்ம கும்பலால் வெடி குண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    போலீஸ் விசாரணையில் பா.ம.க. மாநில துணைத் தலைவர் அகோரத்திற்கும் மூர்த்திக்கும் ஏற்பட்ட உட்கட்சி பூசலே கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது.

    இந்த கொலை வழக்கில் புதுச்சேரி மாநில பா.ம.க. செயலாளராக இருந்த அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் மற்றும் கூலிப்படையினர் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இவர்களில் அனந்தராமன் மட்டும் தலைமறைவாக இருந்து முன்ஜாமீன் பெற்றிருந்தார். மற்ற 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

    கொலை வழக்கில் சேர்க்கப்பட்டதால் அனந்தராமன் பா.ம.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் காங்கிரசில் சேர்ந்தார்.

    சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மணவெளி தொகுதியில் போட்டியிட்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக உள்ளார்.

    இந்த நிலையில் மூர்த்தி கொலை வழக்கு மயிலாடுதுறை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனந்தராமன், பா.ம.க. முன்னாள் மாநில துணை பொது செயலாளர் அகோரம் மற்றும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் உள்பட 15 பேர் ஆஜரானார்கள். இந்த வழக்கை அடுத்த மாதம் (ஜூலை) 6–ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மணிகண்டராஜா உத்தரவிட்டார்.
    தமிழக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 5-வது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்ததை தொடர்ந்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகில் குறுவை சாகுபடிக்கு 5-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
    நாகப்பட்டினம்

    தமிழக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 5-வது ஆண்டாக குறுவை சாகுபடி பொய்த்ததை தொடர்ந்து, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகில் குறுவை சாகுபடிக்கு 5-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கீழையூர் ஒன்றிய செயலாளர் ராமசாமி, நாகை ஒன்றிய பொறுப்பாளர் மோகன், நாகை ஒன்றிய அமைப்பாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பொது செயலாளர் தனபாலன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா பகுதிக்கு குறுவை சாகுபடிக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது இல்லை.

    காவிரி நீர் பங்கீடு குறித்து அரசிதழில் வெளியிட்டு 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய-மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜனதா அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் காவிரி நீர் பங்கீடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பொய்த்து போனது. ரூ.7 ஆயிரத்து 500 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் இடம் பெயர்ந்து நகரத்தை நோக்கி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடி பொய்த்து போனதால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அனைத்து விவசாயிகளும் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காவிரி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி குறுவை சாகுபடிக்கு அஞ்சலி செலுத்தினர்.
    நாகை மீனவர்களால் மீட்கப்பட்ட இலங்கை தம்பதியை வேதாரண்யம் கடலோர போலீசார் கைது செய்தனர். அவர்களை 13 நாட்கள் காவலில் வைக்க வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    வேதாரண்யம்:

    இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டம் கல்வெட்டு சந்தி மகாரம்பைகுளத்தை சேர்ந்தவர் துஸ்வந்தியதேவர். இவருடைய மனைவி துவாரகா. இவர்களது மகள் சுகிதா. இவர்கள் 3 பேரும் கடந்த 7-ந்தேதி கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு உறவினர்களுடன் சென்றனர். கோவிலுக்கு சென்று விட்டு கச்சத்தீவை சுற்றி பார்த்து விட்டு படகுத்துறைக்கு வந்த போது அவர்கள் வந்த படகை காணவில்லை.

    அதனைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் படகுத்துறையில் நின்றுகொண்டிருந்த பைபர் படகில் ஏறி தூங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்து படகு கடலுக்குள் சென்றது. கோடியக்கரைக்கு அருகே தத்தளித்து கொண்டு இருந்த துஸ்வந்திய தேவர் உள்பட 3 பேரையும் நாகை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரையும் வேதாரண்யம் கடலோர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாஸ்போர்டு இல்லாமல் படகில் வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தீனதயாளன் அவர்களை 13 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.
    ×