என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை மீனவர்களால் மீட்கப்பட்ட இலங்கை தம்பதி கைது
    X

    நாகை மீனவர்களால் மீட்கப்பட்ட இலங்கை தம்பதி கைது

    நாகை மீனவர்களால் மீட்கப்பட்ட இலங்கை தம்பதியை வேதாரண்யம் கடலோர போலீசார் கைது செய்தனர். அவர்களை 13 நாட்கள் காவலில் வைக்க வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    வேதாரண்யம்:

    இலங்கையில் உள்ள வவுனியா மாவட்டம் கல்வெட்டு சந்தி மகாரம்பைகுளத்தை சேர்ந்தவர் துஸ்வந்தியதேவர். இவருடைய மனைவி துவாரகா. இவர்களது மகள் சுகிதா. இவர்கள் 3 பேரும் கடந்த 7-ந்தேதி கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவிலுக்கு உறவினர்களுடன் சென்றனர். கோவிலுக்கு சென்று விட்டு கச்சத்தீவை சுற்றி பார்த்து விட்டு படகுத்துறைக்கு வந்த போது அவர்கள் வந்த படகை காணவில்லை.

    அதனைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் படகுத்துறையில் நின்றுகொண்டிருந்த பைபர் படகில் ஏறி தூங்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்து படகு கடலுக்குள் சென்றது. கோடியக்கரைக்கு அருகே தத்தளித்து கொண்டு இருந்த துஸ்வந்திய தேவர் உள்பட 3 பேரையும் நாகை மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரையும் வேதாரண்யம் கடலோர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாஸ்போர்டு இல்லாமல் படகில் வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தீனதயாளன் அவர்களை 13 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் சென்னை புழல் சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.
    Next Story
    ×