என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி வடக்கு வீதியை சேர்ந்தவர் வெற்றி செல்வன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராசய்யன், மச்சவல்லவன், மாரியப்பன், முனியன் மற்றும் தேத்தாக்குடி வடக்கு பகுதியை சேர்ந்த முருகேசன் ஆகிய 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் கோடியக்கரை பகுதியில் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென கடல் பரப்பில் பலத்த காற்று வீசியது. மழையும் பெய்தது.
இதனால் படகை கரைக்கு திருப்ப முயன்றனர். அப்போது படகின் என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் படகை இயக்க முடியவில்லை.
பலத்த காற்றின் காரணமாக படகு திசை மாறி இழுத்து செல்லப்பட்டு இலங்கை கடல் பரப்புக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து 5 மீனவர்களும் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித் துறையில் கரை சேர்ந்தனர்.
அவர்களிடம் இலங்கை பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய்தனர். கைதான 5 பேரும் பருத்தித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து 5 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தகவல்களை மீனவர்கள் செல்போன் மூலம் தங்கள் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகராட்சி கூட்டம் தலைவர் பவானிசீனுவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:
ரமேஷ்:சுடுகாட்டிற்கு அருகே அமைந்துள்ள பொது கழிப்பிடத்திற்கு செப்டிக் டேங்க் இல்லாமல் உள்ளதால் அதை கட்ட வேண்டும். திருவிழந்தூர் பகுதியில் தண்ணீர் சரிவர வருவதில்லை. அதை சரிசெய்து தரவேண்டும்.
எஸ்.கணேசன்: மயிலாடுதுறை நகரில் அனைத்து வார்டுகளிலும் தெருநாய் கூட்டம் கூட்டமாய் இருக்கிறது. இதனால் பொதுமக்கள், இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை இணைப்புக்கு பொதுமக்கள் செலுத்தும் டெபாசீட் தொகையை 2 தவணை முறையில் கட்ட நகராட்சி ஆவன செய்ய வேண்டும்.
ரகு: மழைக்காலம் வரவுள்ளதால் நகரில் மழைநீர் வடிகால் வாய்காலில் உள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
காமராஜ்: மயிலாடுதுறை நகராட்சி பொன்விழா 150–ம் ஆண்டை முன்னிட்டு நினைவு தூண் அமைக்க வேண்டும்.
தனபால்: நகரின் பிரதான சாலைகளில் தனியார் நிறுவனங்களின் ஓட்டல்களின் பெயரில் விளம்பரம் உள்ளதை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.எஸ்.ராஜேந்திரன்: வண்டிக்கார தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் அழுகிய பழங்களை கொட்டுவதை நகராட்சி தடுக்க வேண்டும். கச்சேரி சாலையை உயர்த்துகிறேன் என பொதுப்பணி துறையினர் வடிகால் வாய்காலை உடைத்து சென்றுள்ளனர். இதனால் மழை நேரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி வருகிறது. அதை நகராட்சி மழைகாலத்துக்கு முன் சரிசெய்ய வேண்டும் .
டி.ஆனந்தகுமார்: 7–வது வார்டில் விடுதியும், 34–வது வார்டில் தனியார் பள்ளியும் நகராட்சி அனுமதியில்லாமல் செயல்படுகிறதா? மட்டக்குளத்துக்கு காவிரி தண்ணீர் வரும் வழியை அடைத்து சாலை அமைத்துள்ளது ஏன்?
ஆணையர்: பொக்லைன் வைத்து மட்டக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
அசோக்குமார்: தருமைபுரம் ஆர்ச் எதிரில் பாதாள சாக்கடை வால்வு உள்ளது. பம்பிங் ஸ்டேஷனில் மோட்டார் போட்டால் இங்குள்ள வால்வு வழியாக அசுத்த நீர் துர்நாற்றதுடன் வெளியேறுகிறது. உடனடியாக சம்மந்தபட்ட ஒப்பந்ததாரர் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உஷாராணி: நகரில் தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
ஜெயலெட்சுமி:– குடிநீர் கலங்கலாக வருகிறது. மேலும் அறிவிப்பின்றி சிலநாட்கள் குடிதண்ணீர் வருவதில்லை. குடிநீர் காலையிலும், மாலையிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் துணைத் தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை நீலா வீதி நாலுகால் மண்டபம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த கல்வி ஆண்டில் 9–ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 வகுப்பில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக மாற்றி அறிவிக்க பள்ளி நிர்வாகம் பணம் கேட்பதாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை சந்தித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பணம் கேட்பது குறித்து விசாரித்துள்ளனர்.
அப்போது ஆசிரியர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளி முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களை முதன்மை கல்வி அலுவலகத்துக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் என அனுப்பி வைத்தனர்.
இதன் பின்னர் பெற்றோர்கள் அங்கிருந்து சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே சேர்ந்தவர் பாலு. இவரது மகள் பிரியா (12). மயிலாடுதுறையில் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்தது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த பிரியா சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புரம் 3-ம் சேத்தியை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் ராகவன் (22).
இவர் நேற்று இரவு விஷம் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள வாடியக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மோக பிரியா (17). இவர் தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று மாயமாகி விட்டார்.
அவரை கரையங்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் மூனிஸ்வரன் கடத்தி சென்று விட்டாக மோகபிரியா மாமா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வாய்மேடு காவல் சரகம் பஞ்சநதிக்குளம்மேற்கு வேம்பதேவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வேம்பையன்(49).
இவரது மகள் துர்கா(22). இவர் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்து வருகிறார். இவர் கடந்த 17-ந்தேதி வாய்மேட்டிலுள்ள வங்கிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வேம்பையன் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதில் வேம்பதேவன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பூபாலன், காளிதாஸ் மகன் வீரமுருகன், ராதா மகன் ராஜீவ்காந்தி ஆகிய 3 பேரும் தன் மகளை கடத்தி சென்று விட்டதாக வாய்மேடு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அருகே உள்ள திட்டச்சேரி திருக்கண்ணபுரம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (32). தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. கணவன்– மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த பிரபாகரன் விஷம் குடித்து விட்டார். அவரை நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் விசாரணை நடத்தி வருகிறார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறைக்கு நேற்று தேசிய கயிறு வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதா கிருஷ்ணன், ஒரு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கேரளாவில் முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கும், புதிய அணை கட்டுவதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது வேதனைக்கு உரியது. தற்போது நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் நதிநீர் இணைப்பு குறித்து தெளிவான தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாயும் பாலாறு, காவிரி, வைகை ஆகிய நதிகளை இணைத்து செயல்பட வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. இந்த நதிநீர் இணைப்புக்கு பாரதீய ஜனதா கட்சியும் உறுதுணையாக இருக்கும். அதற்கு நீர்பாசன துறை மந்திரி உமாபாரதியிடம் வலியுறுத்தி திட்டத்திற்கு தேவையான நிதியை பெற்று தர தமிழக பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்யும். மயிலாடுதுறை அருகே கொள்ளிடத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நீர்தேக்க அணைகளை கட்டி நீர்ஆதாரங்களை பெருக்க அ.தி.மு.க. அரசு அறிவித்து இருந்தது. இதற்கான முயற்சிகளை தமிழக அரசு விரைவில் எடுக்க வேண்டும்.
கச்சத்தீவில் தமிழகத்தின் உரிமை குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் முதல்–அமைச்சர் அளித்த வாக்குறுதிப்படி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து இருப்பது வரவேற்கதக்கது. இதனை தமிழக பெண்களும் வரவேற்கின்றனர். தமிழக மக்கள் முழுபலன் பெற பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி, ஈழதமிழர்கள் மீது உள்ள அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார். இலங்கையில் கட்டப்பட்ட புதிய தமிழர்களுக்கான குடியிருப்பு திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் புதிய விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். இவை ஈழத்தமிழர்களின் மீது உள்ள அக்கறையை காட்டுகிறது.
மயிலாடுதுறையில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் வேண்டுகோளை ஏற்று கயிறு உற்பத்தி தொழிற்பேட்டை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவி. சேதுராமன், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதர், மற்றும் பலர் இருந்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள வானகிரி மீனவர் காலனி தெற்கு தெருவை சேர்தவர் சிவபாலன் மீனவர். இவரதுமகன் சந்தோஷ் (வயது 10). 5–ம் வகுப்பு மாணவர். இவன் நேற்று பூம்புகார் சென்று தனது தந்தை சிவபாலனின் படகில் ஏறி விளையாடி கொண்டு இருந்தான்.
பின்னர் அவன் மாயமாகி விட்டான். அவன் கடலில் தவறி விழுந்து இருக்கலாம் என்பதால் அவனை கடலில் மீனவர்கள் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 55) இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன்கள் காளிதாஸ், கலையரசன், கிருஷ்ணசாமி மகன் வினித் ஆகிய 3 பேரும் கடந்த 15–ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
வெள்ளப்பள்ளத்தில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 3 பேரும் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அவர்கள் மீன்பிடித்து விட்டு அன்று மதியம் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளப்பள்ளத்தில் இருந்து கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் காளிதாஸ், வினித் ஆகிய 2 பேரின் உடல் மிதந்தது. உடனே 2 பேரின் உடலையும் மீனவர்கள் மீட்டு வெள்ளப்பள்ளத்திற்கு கொண்டு வந்தனர். கலையரசனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 11 படகுகளில் சுமார் 50–க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று கலையரசனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் வெள்ளப்பள்ளத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் ஒரு பிணம் மிதந்தது. இந்த பிணத்தை மீனவர்கள் மீட்டு பார்த்த போது அது கடலில் மாயமான கலையரசன் என்பது தெரியவந்தது.
கலையரசன் உடலை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடல் கடற்கரையில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அவரது உடல் வெள்ளப்பள்ளத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை கண்ட சாமிகண்ணு மீன்பிடிக்க சென்ற தனது 2 மகன்களும் படகு கவிழ்ந்து இறந்துவிட்டதால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு ஆறுதல் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் கடலில் விழுந்து இறந்த சம்பவம் வெள்ளப்பள்ளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் மறைஞாயநல்லூர் பச்சையன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டபானி. இவர் வேதாரண்யம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டு முன்வாசலில் வைத்திருந்த பெயர் பலகையை எடுக்குமாறு தேத்தாகுடிதெற்கு பூசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த ராமையன்(63) மிரட்டினாராம். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமையனை கைது செய்தனர்.






