என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் கரை சேர்ந்த வேதாரண்யம் மீனவர்கள் கைது
    X

    இலங்கையில் கரை சேர்ந்த வேதாரண்யம் மீனவர்கள் கைது

    பலத்த காற்று வீசியதால் இலங்கையில் கரை சேர்ந்த வேதாரண்யம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி வடக்கு வீதியை சேர்ந்தவர் வெற்றி செல்வன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராசய்யன், மச்சவல்லவன், மாரியப்பன், முனியன் மற்றும் தேத்தாக்குடி வடக்கு பகுதியை சேர்ந்த முருகேசன் ஆகிய 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கோடியக்கரை பகுதியில் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென கடல் பரப்பில் பலத்த காற்று வீசியது. மழையும் பெய்தது.

    இதனால் படகை கரைக்கு திருப்ப முயன்றனர். அப்போது படகின் என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் படகை இயக்க முடியவில்லை.

    பலத்த காற்றின் காரணமாக படகு திசை மாறி இழுத்து செல்லப்பட்டு இலங்கை கடல் பரப்புக்குள் நுழைந்தது. இதனை தொடர்ந்து 5 மீனவர்களும் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித் துறையில் கரை சேர்ந்தனர்.

    அவர்களிடம் இலங்கை பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய்தனர். கைதான 5 பேரும் பருத்தித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து 5 பேரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த தகவல்களை மீனவர்கள் செல்போன் மூலம் தங்கள் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×