என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி, வைகை, பாலாறு நதிநீர் இணைப்புக்கு பா.ஜனதா உறுதுணையாக இருக்கும்: சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    காவிரி, வைகை, பாலாறு நதிநீர் இணைப்புக்கு பா.ஜனதா உறுதுணையாக இருக்கும்: சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

    தமிழகத்தில் பாயும் பாலாறு, காவிரி, வைகை ஆகிய நதிகளை இணைத்து செயல்பட வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. இந்த நதிநீர் இணைப்புக்கு பா. ஜனதா கட்சியும் உறுதுணையாக இருக்கும் என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறைக்கு நேற்று தேசிய கயிறு வாரிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதா கிருஷ்ணன், ஒரு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    கேரளாவில் முல்லைப்பெரியார் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கும், புதிய அணை கட்டுவதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது வேதனைக்கு உரியது. தற்போது நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் நதிநீர் இணைப்பு குறித்து தெளிவான தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாயும் பாலாறு, காவிரி, வைகை ஆகிய நதிகளை இணைத்து செயல்பட வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. இந்த நதிநீர் இணைப்புக்கு பாரதீய ஜனதா கட்சியும் உறுதுணையாக இருக்கும். அதற்கு நீர்பாசன துறை மந்திரி உமாபாரதியிடம் வலியுறுத்தி திட்டத்திற்கு தேவையான நிதியை பெற்று தர தமிழக பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்யும். மயிலாடுதுறை அருகே கொள்ளிடத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நீர்தேக்க அணைகளை கட்டி நீர்ஆதாரங்களை பெருக்க அ.தி.மு.க. அரசு அறிவித்து இருந்தது. இதற்கான முயற்சிகளை தமிழக அரசு விரைவில் எடுக்க வேண்டும்.

    கச்சத்தீவில் தமிழகத்தின் உரிமை குரல் ஒலிக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும். தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் முதல்–அமைச்சர் அளித்த வாக்குறுதிப்படி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்து இருப்பது வரவேற்கதக்கது. இதனை தமிழக பெண்களும் வரவேற்கின்றனர். தமிழக மக்கள் முழுபலன் பெற பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி, ஈழதமிழர்கள் மீது உள்ள அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார். இலங்கையில் கட்டப்பட்ட புதிய தமிழர்களுக்கான குடியிருப்பு திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் புதிய விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார். இவை ஈழத்தமிழர்களின் மீது உள்ள அக்கறையை காட்டுகிறது.

    மயிலாடுதுறையில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் வேண்டுகோளை ஏற்று கயிறு உற்பத்தி தொழிற்பேட்டை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவி. சேதுராமன், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதர், மற்றும் பலர் இருந்தனர்.

    Next Story
    ×