என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி மாநில செயலாளராக கே.சரண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சீர்காழி:

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி மாநில செயலாளராக கே.சரண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரையின்பேரில், இளைஞரணி மாநில தலைவர் வினோ. பி.செல்வம் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.

    புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட கே.சரண்ராஜ் தன்னை இந்த பொறுப்பில் நியமித்த மாநில தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் கருப்பு.முருகானந்தம், இளைஞரணி மாநில தலைவர் வினோஜ்.பி.செல்வம், கோட்ட பொறுப்பாளர் தங்க.வரதராஜன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

    மேலும் மாநில் செயலாளர் வேதரத்தினம், நாகை மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் மாநில, மாவட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

    சரண்ராஜ் 2009 –ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்து நகர பொது செயலாளராகவும், மாவட்ட இளைஞரணி தலைவராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுவாதி கொலை வழக்கை போலீசார் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும் என எச். ராஜா கூறினார்.
    சீர்காழி:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா வைத்தீஸ்வரன் கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இது தனி நபர் விரோதமாக நடந்ததா? அல்லது இதற்கு பின்னால் அமைப்பு ஏதேனும் இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஏன் என்றால் கடந்த 2 மாதமாகவே சுவாதியை பின் தொடர்ந்து ஒருவர் மிரட்டி உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.

    அதே போல் சுவாதி வீட்டை சுற்றி மர்ம நபர்கள் கண்காணித்து வந்ததாக செய்தி வந்துள்ளது. எனவே போலீசார் நேர்மையான முறையில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.

    இந்த வழக்கின் விசாரணை சரியான பாதையில் செல்ல வேண்டுமானால் ஐகோர்ட்டு இந்த வழக்கை தாங்களே முன் வந்து எடுத்து கொள்ள வேண்டியிருக்கும் என்று சொன்னது மட்டும் போதாது.

    சுவாதி வழக்கை நேரடியாக ஐகோர்ட்டு எடுத்துக் கொண்டு ஒரு சிறப்பு விசாரணை குழு மூலமாக வரையறைக்கு உட்பட்ட நாட்களுக்குள் விசாரித்து சுவாதி குடும்பத்துக்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும்.

    சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் செய்தி அனுப்பி அவர்களது குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய முதல்-அமைச்சர் சுவாதியின் கொலை வழக்கில் மவுனம் காப்பது ஏன்?

    அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காதது துரதிருஷ்டவசமானது. இதற்கு காரணம் என்ன என்று புரியாத நிலையில் தமிழக மக்கள் உள்ளனர்.

    அதே போல் போலீசாரின் அலட்சிய போக்கு தான் சேலம் வினுப்பிரியாவின் தற்கொலைக்கு காரணம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த திருமண விழாவில் இந்தியாவை உடைக்க வேண்டும் என வைகோ பேசி உள்ளார். தொடர்ந்து இதுபோல் பேசி வரும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

    இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்த தடை செய்யப்பட்ட சாதனங்களை கொண்டு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது முறையல்ல.

    இவ்வாறு எச். ராஜா கூறினார்.

    பேட்டியின் போது கோட்ட பொறுப்பாளர் வரதராஜன், மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் சரண்ராஜ், மாநில பொது செயலாளர் நாஞ்சில் பாலு, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    மயிலாடுதுறை அருகே கோவில் திருவிழாவில் மோதலில் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுக்கு முன்பு இப்பகுதியில் குடியேறிய ராஜகம்பள வகையறாவான குறிஜோதிடம் சொல்லும் இனத்தவர்கள் இக்கோவிலை கட்டி வழிப்பட்டு வந்தனர். தற்போது அந்த பகுதியில் 105 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குறி ஜோதிடம் சொல்லும் அவர்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று 10 மாதம் வரை தங்கி சம்பாதித்து விட்டு 2 மாதம் சொந்த ஊரில் இருப்பார்கள்.

    ஓவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் 7 நாட்கள் கோவில் திருவிழா நடைபெறும். சமீபகாலமாக அங்கு உள்ள 105 குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் துரைராஜ் என்பவர் தரப்பு ஒருபிரிவாகவும், சரவணன் என்பவர் ஒருபிரிவாகவும் உள்ளனர். இதில் சரவணன் தரப்பினர் 7-ம் ஆண்டு திருவிழா நடத்த பத்திரிக்கை அளித்துள்ளனர். ஆனால் துரைராஜ் தரப்பினருக்கு பத்திரிக்கை வழங்க மறுத்துவிட்டனர். இதனால் கடந்த 24-ம் தேதி கோவிலில் நடந்த யாகத்தை ஒரு தரப்பினர் தண்ணீர் ஊற்றி நிறுத்தி உள்ளனர். இத்தகவல் அறிந்து குத்தாலம் போலீசார் இருதரப்பினரையும் ஒன்றாக இணைந்து கோவில் திருவிழா நடத்தவேண்டும் என்று கூறி கோவிலை பூட்ட வைத்தனர்.

    இதனால் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் நேற்று இருதரப்பினருக்கும் இடையே திடீர் என தகாராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் . அரிவாளால் வெட்டியதில். 2 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டார்.

    இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை மயிலாடுதுறை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 2 பேரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த மோதல் குறித்து 44 பேர் மீது வழக்குபதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 26 பேரை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால். அங்கு 100-கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொள்ளிடம் அருகே 3 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மகேந்திரப்பள்ளி சாலையில் வெட்டாற்றங்கரை உள்ளது. இப்பகுதியில் வசிப்பவர் முரளி. இவரது மனைவி ரேவதி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு முரளி சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

    இதைத் தொடர்ந்து ரேவதி வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் வீடு திரும்பிய ரேவதி கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இதே நாளில் கொள்ளிடம் அருகே உள்ள தக்காஸ் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வெங்கடாசலபதி (வயது 50). குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அவரது வீட்டின் கதவை உடைத்து ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். மாங்கானம்பட்டு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அவரது வீட்டிலும் கதவை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை நடந்திருப்பது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழையாறு, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் கோவில்களில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்தது.

    ஒரு வாரத்தில் பல கொள்ளை சம்பவங்கள் நடந்ததால் நாகை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நேற்று இரவு கொள்ளை நடந்த பகுதிகளில் ரோந்து சென்று போலீசாரை உஷார் படுத்தினார். புதுப்பட்டினம், கொள்ளிடம் போலீசாரை சந்தித்து தீவிர சோதனை நடத்தி கொள்ளையர்களை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.

    வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா மலையாற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 45), இவர் நேற்று வேட்டைக்காரனி இருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வாணிப கிடங்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் சாவியை எடுத்து செல்லவில்லை.

    அதனை நோட்டமிட்ட சுனாமி குடியிருப்பு பூக்கார தெருவை சேர்ந்த சதீஸ் என்பவர் மோட்டார் சைக்கிளை வாலிபர் திருடி சென்றுள்ளார். அதனைகண்ட சிலர் ரங்கநாதனிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கடையில் இருந்து வெளியில் வந்த அவர் தனது மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வேட்டைகாரனிருப்பு போலீசில் புகார்செய்தார்.

    அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபரை தேடி வந்தனர்.

    வேதாரண்யம் மெயின் ரோட்டில் திருடிய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    உள்ளாட்சி, பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. அமோக வெற்றி பெறும் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.
    மயிலாடுதுறை:

    சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர். ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநில தலைவர் குரு ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் டாக்டர். ராமதாஸ் பேசியதாவது:-

    காவிரி நீர் பிரச்சனைக்கு தி.மு.க. அரசு தான் காரணம். கடந்த 1924-ல் மைசூர் அரசும், சென்னை அரசும் சேர்ந்து காவிரி ஒப்பந்தம் ஆனதை 1974-ம் ஆண்டு தி.மு.க. அரசு புதுப்பிக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டது.

    காவிரி டெல்டாவில் மீத்தேன், ஷெல் எரிவாயு எடுக்க முயன்றால் பா.ம.க. அதனை தடுத்து நிறுத்தும். உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அதில் பா.ம.க. அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பா.ம.க.வுக்கு தோல்வி அல்ல. ஒரு சறுக்குதான்.

    ஒரு பைசா கூட கொடுக்காமல் தமிழகத்தில் 23 லட்சம் வாக்குகள் பெற்று உள்ளோம். 97 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் தவிர்த்துள்ளனர்.

    தற்போது விற்பனை இல்லாத டாஸ்மாக் கடைகளை தான் மூடி உள்ளனர். டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படும் என அறிவித்து காலை 6 மணிக்கே கள்ளத்தனமாக விற்பனை நடைபெறுகிறது.

    இந்தியாவில் 21 மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் 20-வது இடத்தில் பின் தங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மயிலாடுதுறையில் கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.இக் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு பகுதியை சேர்ந்த சாரதா தனது மகன் முரளியுடன் வந்து இருந்தார்.

    கும்பாபிஷேகம் முடிந்து அவர்கள் வெளியே பிரசாம் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி கொண்டு மர்ம ஆசாமி சாரதா கழுத்தில் கிடந்த 4¼ பவுன் செயின் மற்றும் டாலரை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டான். இது குறித்து மயிலாடுதுறை போலீசில் சாரதாவின் மகன் முரளி புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து நகை பறித்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    கோவில் கும்பாபிஷே கத்தில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தரம் குறைந்த மின்சாதன பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை கலெக்டர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    இந்திய அரசு மின் சாதனங்கள் தரக்கட்டுபாட்டு ஆணை 2003-ன்படி மின் சாதனங்கள் மத்திய அரசின் தரச்சான்று இல்லாமல் உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ, இரும்பு மற்றும் இரும்பு பொருட்களை தயாரிப்பதோ, வைப்பில் வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ கூடாது. அவ்வாறு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாமல் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    மின் சாதன பொருட்களை தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்களை ஆய்வு செய்யும்போது பொருள்கள் தரம் குறைந்ததாக இருந்தால் பொதுமக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதால் அம்மாதிரியான நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐ எஸ் ஐ தரச் சான்றில்லாத வாட்டர் ஹீட்டர், மின் சலவைப்பெட்டி, மின்சார அடுப்பு, மின் சுவிட்ச், எலக்ட்ரிக் ரேடியேட்டர்ஸ் டியூப் லைட், சர்க்யூட் பிரேக்கர்ஸ் பல்புகள், பிவிசி கேபிள்கள் போன்ற மின் சாதனங்கள் மற்றும் மின் உபகரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதையும் அல்லது விற்பனை செய்வதையும் தவிர்க்குமாறு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தரம் குறைந்த பொருட்கள் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் இந்திய அரசு வெளியிட்டுள்ள இரும்பு மற்றும் இரும்பு பொருட்கள் தரக்கட்டுபாட்டு ஆணை 2012ன்படி உயர் அழுத்த மற்றும் உயர், மித மற்றும் குறைவான வெப்பக் கலன்களில் பயன்படுத்தப்படும் இரும்பு தகடுகள், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் சி.ஆர்.என்.ஓ. இரும்பு தகடுகள், சி.ஆர்.சி.ஓ இரும்பு தகடுகள், உயர் அழுத்த கட்டுமானக் கம்பிகள் போன்ற இரும்பு மற்றும் இரும்பு பொருட்கள் கட்டாயமாக இந்திய தரச்சான்று நிறுவனத்தின் சான்றினை பெற்றிருக்க வேண்டும்.

    மேற்கண்ட இரும்பு மற்றும் இரும்பு பொருட்களை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களை ஆய்வு செய்து மாதிரிகளை சோதனை செய்து உரிய வழிகாட்டுதல் வழங்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே இரும்பு மற்றும் இரும்பு பொருட்களை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மேற்குறிப்பிடப்பட்ட இந்திய அரசு வெளியிட்டுள்ள இரும்பு மற்றும் இரும்பு பொருட்கள் தரக்கட்டுபாட்டு ஆணை 2012ன்படி தர நிர்ணய சான்றினை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை அருகே ஆசிரியை தாக்கி நகையை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஓப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி (வயது40). இவர் கன்னியாநத்தம் காமாட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் அணிந்திருந்த நகையை நோட்டமிட்ட 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    ஆள்நடமாட்டம் குறைவாக இருந்த கன்னியாநத்தம் மதகு திருப்பத்தில் அவர் வந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேரும் வேகமாக வந்து அவரது மோட்டார் சைக்கிளிளை கீழே தள்ளி விட்டு செந்தமிழ் செல்வி அணிந்திருந்த 13 பவுன் நகைகளை பறித்துள்ளனர். அதனை அந்த வழியாக வந்த சிலர் பார்த்து அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

    அப்போது மர்ம நபர்கள் தப்பி சென்ற மோட்டார் சைக்கிளின் டயர் சிறிது தூரம் சென்றதும் திடீர் என பஞ்சரானது. இதனால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு அருகிலிருந்த வயல் வெளியில் இறங்கி தப்பியோடினர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதுகுறித்து மணல்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் அந்த 2 பேரையும் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை நக்கம்பட்டியை சேர்ந்த சேதுராஜன் (வயது 34), புதுக்கோட்டை அறந்தாங்கி, அவுலியா நகர் சுபீர்கான் (25) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசிரியை தாக்கி நகையை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஓப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழ:

    சீர்காழி அருகே உள்ள பச்சபெருமாநல்லூரை சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி வைரம். இவர் வயலில் வேலை செய்த போது பாம்பு கடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நாகை அருகே தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள பாகச்சாலை, தண்டமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மனைவி மலர் (வயது 45).

    இவர் வீட்டின் பின்புறம் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிம்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி பாகச்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதி வாய்மேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெறுவதால் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை வாய்மேடு ஆலங்காடு, ஆயக்காரன் புலம், கரியாப்பட்டினம், வேதாரண்யம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என வேதாரண்யம் மின்துறை உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் தெரிவித்துள்ளார்.

    ×