என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரம் குறைந்த மின்சாதன பொருட்கள்: நாகை கலெக்டர் எச்சரிக்கை
    X

    தரம் குறைந்த மின்சாதன பொருட்கள்: நாகை கலெக்டர் எச்சரிக்கை

    தரம் குறைந்த மின்சாதன பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை கலெக்டர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    இந்திய அரசு மின் சாதனங்கள் தரக்கட்டுபாட்டு ஆணை 2003-ன்படி மின் சாதனங்கள் மத்திய அரசின் தரச்சான்று இல்லாமல் உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ, இரும்பு மற்றும் இரும்பு பொருட்களை தயாரிப்பதோ, வைப்பில் வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ கூடாது. அவ்வாறு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாமல் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    மின் சாதன பொருட்களை தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்களை ஆய்வு செய்யும்போது பொருள்கள் தரம் குறைந்ததாக இருந்தால் பொதுமக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதால் அம்மாதிரியான நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் மற்றும் சிறைத்தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஐ எஸ் ஐ தரச் சான்றில்லாத வாட்டர் ஹீட்டர், மின் சலவைப்பெட்டி, மின்சார அடுப்பு, மின் சுவிட்ச், எலக்ட்ரிக் ரேடியேட்டர்ஸ் டியூப் லைட், சர்க்யூட் பிரேக்கர்ஸ் பல்புகள், பிவிசி கேபிள்கள் போன்ற மின் சாதனங்கள் மற்றும் மின் உபகரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதையும் அல்லது விற்பனை செய்வதையும் தவிர்க்குமாறு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தரம் குறைந்த பொருட்கள் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் இந்திய அரசு வெளியிட்டுள்ள இரும்பு மற்றும் இரும்பு பொருட்கள் தரக்கட்டுபாட்டு ஆணை 2012ன்படி உயர் அழுத்த மற்றும் உயர், மித மற்றும் குறைவான வெப்பக் கலன்களில் பயன்படுத்தப்படும் இரும்பு தகடுகள், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் சி.ஆர்.என்.ஓ. இரும்பு தகடுகள், சி.ஆர்.சி.ஓ இரும்பு தகடுகள், உயர் அழுத்த கட்டுமானக் கம்பிகள் போன்ற இரும்பு மற்றும் இரும்பு பொருட்கள் கட்டாயமாக இந்திய தரச்சான்று நிறுவனத்தின் சான்றினை பெற்றிருக்க வேண்டும்.

    மேற்கண்ட இரும்பு மற்றும் இரும்பு பொருட்களை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களை ஆய்வு செய்து மாதிரிகளை சோதனை செய்து உரிய வழிகாட்டுதல் வழங்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே இரும்பு மற்றும் இரும்பு பொருட்களை தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மேற்குறிப்பிடப்பட்ட இந்திய அரசு வெளியிட்டுள்ள இரும்பு மற்றும் இரும்பு பொருட்கள் தரக்கட்டுபாட்டு ஆணை 2012ன்படி தர நிர்ணய சான்றினை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×