என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தர்காஸ் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 50). இவர் கடந்த மாதம் 25-ந்தேதி அவரது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்ட அவர் மறுநாள் அதிகாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். அதே நாள் கொள்ளிடம் அருகே பழையாறு அண்ணாநகரை சேர்ந்த சண்முகம் (68) என்பவருக்கு சொந்தமான கடையின் பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.15 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார், புதுப்பட்டினம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக புதுப்பட்டினம் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர், கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டை கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகவேல் (29) என்பதும், கடந்த மாதம் (ஜூன்) 25-ந்தேதி வெங்கடாஜலபதியின் வீட்டிலும், சண்முகத்தின் கடையிலும் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகவேலை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை:
மத்திய அரசு அறிவித்துள்ள 7-வது ஊதியகுழு பரிந்துரையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை ரெயில்வே ஊழியர்கள் எஸ்.ஆர்.எம்.யூ ஊழியர்கள் கோட்ட பொறுப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் முதலாம் பிளாட்பாரத்தில் ஆர்ப்பாட்டம் செய்து கோஷங்கள் எழுப்பினர்.
ரெயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளில் ரூ.26 ஆயிரம் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என கேட்டதை 7-வது ஊதிய பரிந்துரைக்குழு ரூ.18ஆயிரம் என வெளியிட்டதை கண்டித்தும், மத்திய அரசு உடனடியாக ரெயில்வே ஊழியர்களின் 36 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறு செயல்படுத்தாத பட்சத்தில் வருகின்ற 11-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டதலைமை கழக பொறுப்பாளர் பாரத், சித்ரா, வீரமணி, ரகு, செந்தமிழ் செல்வன் .என்.சேகர் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கணபதிபுரம்-ஏர்வாடி சாலையில் இடையாத்தங்குடி என்னுமிடத்தில் அரசலாற்றின் குறுக்கே ரூ214.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளையும், கிடாமங்கலம்-விச்சூர் சாலையில் இடையாத்தங்குடி என்னுமிடத்தில் அரசலாற்றின் குறுக்கே ரூ214.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளையும் கலெக்டர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமானப் பணிகளை தரமாகவும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் வடகரையில் மரக்கன்றுகள் நடுவதற்காக வைக்கப்பட்டுள்ள நாற்றாங்காலையும் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், திடீர் ஆய்வு செய்து, மாணவ மாணவிகளின் கற்றல் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
திருக்கண்ணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? எனவும் மருந்து மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளதா எனவும், வெளி நோயாளிகள் வருகை குறித்து வருகை குறித்த பதிவேட்டினை ஆய்வு செய்தும், மருத்துவமனை வளாகத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், போலகம் ஊராட்சியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம், பணிகள் சரியானபடி நடைபெறுகிறதா? எனவும் கலெக்டர் அவர்கள் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், சாந்தி, உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) பிரபாகர், திட்டச்சேரி பேரூராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நாகப்பட்டிம்:
நாகையை அடுத்து திருக்குவளை நாட்டிருப்பு கீழதெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது 27). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரில் உள்ள கலைமகள் (24) என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்களது காதலுக்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவர்கள் வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக காமராஜ் பகல்நேர பணிக்கும், கலைமகள் இரவு பணிக்கும் சென்று வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கலைமகள் இரவு பணிக்கு சென்றதால் காமராஜ் அவர் மீது சந்தேகப்பட்டு கலைமகளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கலைமகள் திருக்குவளையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பாட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் கலைமகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்குவளை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருக்குவளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்துள்ளார். திருமணம் ஆகி 3 வருடங்களே ஆன நிலையில் கலைமகள் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளப்பள்ளம் கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது.
இங்கு சூப்பர்வைசராக லெட்சுமணன், விற்பனையாளராக ரத்தின குமார், சாமித்துரை ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று இரவு 10 மணிக்கு விற்பனை முடிந்து கடையை பூட்டி சென்றனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் ஷட்டர் பூட்டை உடைத்து பெட்ரோல் ஊற்றி கடைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். தீ மளமளவென்று எரிய தொடங்கியது.
இதனை பார்த்த பொதுமக்கள் தலைஞாயிறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனால் 30 பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த மதுபாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது.
டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகளை இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் தேடி வருகிறார்கள்.
சீர்காழி:
சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார்.திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஸ்தலம் ஆகும்.
காசிக்கு அடுத்தபடியாக இக்கோவிலில் தான் அஷ்டபைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது.பல்வேறு சிறப்புகளைக்கொண்ட சட்டைநாதர் கோவிலில் கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் சுமார் 30 அடி உயரத்தில் மதில் சுவர்கள் உள்ளன.
இந்த மதில் சுவர்களுக்கு கடந்த ஆண்டுதான் புதிதாக வர்ணங்கள் பூசி, சிவசிவ என்று வாசகங்கள் எழுதப்பட்டன. ஆனால் தற்போது கோவில் மதில் சுவற்றில் ஆபாச,கவர்ச்சி திரைப்பட சுவரொட்டிகள், திருமண வாழ்த்து சுவரொட்டிகள், அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. குறிப்பாக மேற்கு பகுதி மதில் சுவற்றில் தான் அதிகளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வேதனையை அளிக்கிறது. மேலும் அவ்வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ–மாணவிகளின் மனதை ஆபாசதிரைப்பட சுவரொட்டிகள் பாதிப்படைய செய்கிறது. எனவே கோவில் நிர்வாகம் காவல்துறை ஒத்துழைப்போடு சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்தி கோவிலின் புனித தன்மையை காக்கவேண்டும் என பக்தர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சீர்காழி:
சீர்காழியில் அரசு மருத்துவமனை எதிரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு குடிநீர் வடிகால் துறை சீர்காழி திட்ட உபகோட்ட உதவி பொறியாளர் சுபத்ரா தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகரன், துணைத்தலைவர் ஜெயராமன், சீர்காழி நகர கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி, துணைத்தலைவர் மணி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி மன்ற இளம்நிலை உதவியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.
பேரணியை பாரதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கட்சி நிர்வாகிகள் வேணுகோபால், செல்வம், ரிமில்டாதுரைராஜ், பேரூராட்சி எழுத்தர் நடராஜன், தியாகராஜன், பரகத்அலி மற்றும் கலந்து கொண்டனர். பேரணி பழைய பேருந்து நிலையம், கடைவீதி, வழியாக அரசு மருத்துவமனை சாலையை வந்தடைந்தது. பேரணியின்போது மாணவர்கள் குடிநீர் சம்மந்தப்பட்ட வாசகங்கள் அட்டையினை கைகளில் ஏந்தி சென்றனர்.
வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூர் ஆரிய கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (59) விவசாயி.
குடும்ப பிரச்சனை காரணமாக இவர் விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை ஆறுமுகச்சந்தி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பெரியகுத்தகை பகுதியைச் சேர்ந்த காளியப்பன் (56) என்பவரை பிடித்து விசாரித்த போது அவரிடம் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது.
அதனை போலீசார் கைப்பற்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்த காளியப்பனை கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தினர்.






