என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சுதந்திர தினத்தன்று ஆன்லைன் வர்த்தக ஒப்பந்த நகல் எரிக்கப்படும் என்று மயிலாடுதுறையில் வெள்ளையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக வர்த்தகத்தை எதிர்த்து வருகிற 21-ந்தேதி தமிழகம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெறுகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்தும், அன்னிய முதலீட்டை எதிர்த்தும் நடைபெற உள்ளது.

    ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரதினத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும். பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும் அதன்பின்பு வணிகர்கள் கருப்பு உடை அணிந்து தமிழகம் முழுவதும் உலக ஆன்லைன் வர்த்தக ஒப்பந்த நகல் எரிக்கப்படும்.

    பொதுவாக ஆன்லைன் வர்த்தகம் வாடிக்கையாளர் வீடு தேடி வருகிறது. உற்பத்தி விலையை விட குறைவாக இருக்கும். ஆனால் தரம் இருக்காது. இவ்வாறு செய்வதால் சில்லரை வணிகர்கள் அழிக்கப்படுவர். பின்னர் அன்னிய வர்த்தகம் மட்டுமே இந்தியா முழுவதும் ஆட்கொள்ளும். முந்தைய மத்திய அரசு, தற்போதைய மத்திய அரசும் வணிகர் சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

    எனவே வெளிநாட்டு அன்னிய நிறுவனங்கள் காலூன்ற அனுமதிக்க மாட்டோம். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடன் நாகை மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஆர்.சி விஸ்வநாதன், பாண்டு, ஜெயக்குமார், மற்றும் வணிக பிரமுகர்கள் இருந்தனர்.
    இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாகை அக்கரைப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் வெற்றி வேல், விசைப்படகு உரிமையாளர். இவரது விசைப்படகில் வெற்றி வேல், ரமேஷ், அருள், ராஜூ, ஆனந்த், பிரவீன், மணியன், ஆனந்தராஜ் ஆகிய 8 பேர் நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதே போல் அக்கரைப்பேட்டையை சேர்ந்த வீரமணிக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த முத்து, பக்கிரிசாமி, இடும்பன்சாமி, ராமன், சுந்தர், தங்கராஜ், பன்னீர், ராஜூ, முருகவேல் ஆகிய 9 பேரும் கடலுக்கு சென்றனர்.

    பருத்திதுறை பகுதியில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு எந்திர படகில் வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி சுட்டவாறு மீனவர்கள் 17 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் மீனவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் யாழ்ப்பாணம் சாப்னா ஜெயிலில் 17 மீனவர்களும் அடைக்கப்பட்டனர்.

    மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதால் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தினர் சோகத்தில் உள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. நடுக்கடலில் கைது செய்யும் தமிழக மீனவர்களை அடித்து விரட்டுவதும், சிறைப்பிடித்து செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தமிழக மீனவர்களை கைது செய்யும்போது அவர்களது படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விடுகின்றனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்டாலும், படகுகளை விடுவிப்பது கிடையாது. இதனால் தாயகம் திரும்பும் மீனவர்கள் வாழ வழியின்றி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

    இதுவரை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இருப்பினும் தற்போது மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளது.

    இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த வெற்றிவேல் (வயது 45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 8 பேரும், அதே பகுதியை சேர்ந்த வீரமணிக்கு சொந்தமான விசைப்படகில் 9 பேர் என மொத்தம் 17 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லைபகுதியில் நேற்று மதியம் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 17 பேரையும் கைது செய்து, அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் விரிவாக்கம் தொடர்பான பணிகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் விரிவாக்கம் தொடர்பான பணிகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் பழனிசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மீன்வளத்துறை அமைச்சர்டி.ஜெயக்குமார் பேசும்போது கூறியதாவது:–

    தமிழக முதல்-அமைச்சர் மீன் உற்பத்தியினை மாநில அளவில் உயர்த்தி தரமான மீன் உணவினை மக்களுக்கு வழங்கிடவும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மீன்பிடித் தொழிலில் சிறந்து விளங்கும் தளங்களில் நாகப்பட்டினமும் ஒன்றாகும். நாகப்பட்டினத்தில் மீன்பிடித் தொழில் சிறந்து விளங்குவதால் மீன்பிடி கலன்களின் எண்ணிக்கையும் அளவுகளும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. இதனால் நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

    கடந்த 2004-ம் வருடம் டிசம்பர் திங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் நாகப்பட்டினம் மீன்பிடித்துறைமுகம் முற்றிலுமாக சேதமடைந்ததை தொடர்ந்து தமிழக அரசு மீனவ மக்களின் துயரினை நீக்கும் பொருட்டு உலக வங்கி நிதியுடன் 45.21 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கியது.

    நாகப்பட்டினம் கடுவையாற்றின் வடக்கு கரையில் கரையோர வசதிகளுடன் கூடிய 250 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் சுவர் அமைக்கப்பட்டது. தென்கரையில் கரையோர வசதிகளுடன் கூடிய 500 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கரையோர வசதிகள் அலுவலக கட்டிடம் வலை பின்னும் கூடம் ஏலக்கூடம் பொருள் பாதுகாப்பு கூடம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கழிப்பறை வசதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதி மற்றும் வடிகாலுடன் கூடிய சாலை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்று கடுவையாற்றின் தென்கரையில் கூடுதலாக 450 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் சுவர் அமைத்திடவும், படகுகள் எளிதாக சென்றுவர ஆழப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மீன் விற்பனை கூடம், மீன்பிடி கலன்களை பழுது பார்க்கும் பொருட்டு சாய்வுதளம் கலன்களை ஏற்றி இறக்க வசதியாக 100 டன் கையாளக்கூடிய பளுதூக்கியும் மின்வசதி, சாலைவசதி, தண்ணீர்வசதி அனைத்தும் மேற்கொள்ள மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான அளவை பணிகள் மத்திய கடலோர பொறியியல் நிறுவனம் பெங்களுருவில மேற்கொள்ளப்பட்டு வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மக்களின் சமூக பொருளாதார நிலை சிறந்து விளங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி (சீர்காழி), ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), மாவட்ட ஊராட்சித்தலைவர் ஏ.கே.சந்திரசேகரன், நகர்மன்ற தலைவர் மஞ்சுளா சந்திரமோகன், மீன்வளத்துறை தலைமை பொறியாளர் தங்கப்பிரகாசம், செயற் பொறியாளர் வீரமணி, இணை இயக்குனர் சுப்புராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
    நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற சாமிக்கண்ணு மகன்கள் காளிதாஸ்(வயது 22) கலைப்பாண்டி (18) கிருஷ்ணசாமி மகன் வினித்(வயது 18)ஆகியோர் கடந்த மாதம் 15–ந்தேதி அன்று கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

    தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி வெள்ளப்பள்ளத்தில் உள்ள இறந்தவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    நாகை மாவட்டத்தில் கிராம சாலை அமைக்கும் பணியை நாகை கலெக்டர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கிடாங்கால் ஊராட்சி, வாழஒக்கூர் ஊராட்சி, ஏழேகால் ரோடு வாய்க்காலில் ரூ.79 லட்சம் மதிபீட்டில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1138 மீட்டர் சாலை மற்றும் 17.7 மீட்டர் பாலம் அமைக்கும் பணிகளையும், வெங்கிடாங்கால் ஊராட்சி முடிகொண்டான் சாலை 1 கி.மீ தூரத்திற்கு ரூ.29.65 லட்சம் மதிப்பில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.

    ஒக்கூர் ஊராட்சியில் அபூர்வசாமி என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடு கட்டுமானப்பணிகளையும், ஆனைமங்கலம் நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு பழுதுகளை சரி செய்யவும், பொதுமக்களுக்கு இடையூறின்றி பொருட்கள் வழங்கிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அங்குள்ள நூலகத்தினை பார்வையிட்டு, பொதுமக்களிடம் நூலகத்தினை பயன்படுத்துவது குறித்து கேட்டறிந்து, நூல்களை சரியான முறையில் பராமரிக்கவும், நூல்களின் இருப்பு குறித்து பதிவேட்டினை பராமரிக்கவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். உக்கூர் கிராம நிர்வாக அலுவலகத்தை ஆய்வு செய்து கிராமக் கணக்குகள் குறித்த பதிவேட்டினையும் பார்வையிட்டார்.

    தேவூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பராமரிக்கும் நாற்றாங்காலையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழையூர் ஒன்றியம் தண்ணிலப்பாடி ஊராட்சி, மரைக்காயர்கட்டளையில் பிரதம மந்திரி கிராம சாலைத் மேம்பாட்டுத்திட்டம் 2012–2013 ல் ரூ1.436 லட்சம் மதிப்பில் 2,500 கி.மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள சாலையைப் பார்வையிட்டு, சாலையோரங்களில் தென்னனை மரங்கள் வைத்து பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது கீழ்வேளுர் ஒன்றியக்குழுத் தலைவர் முருகானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவிப் பொறியாளர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    குத்தாலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவசாயி வி‌ஷம் குடித்து பலியானார்.

    குத்தாலம்:

    குத்தாலம் வட்டம் பாலையூர் காவல் சரகம் ஆட்டூர் கிராமம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (வயது55) விவசாயி. குடிப்பழக்கம் உள்ளவர். இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் மனைவியுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் பக்கிரிசாமி நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டுள்ளார். உடனே அவரை மீட்டு பக்கத்தில் இருந்தவர்கள் பக்கிரிசாமியை சிகிச்சைகாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம் வட்டம் பாலையூர் காவல் சரகம் கோடிமங்கலம் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது34) இவருக்கும் இவரது மனைவி அனுவிற்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

    ஆகவே குழந்தைபேறுக்காக சிகிச்சை பெற பணம் வாங்கி வரும்படி கூறி அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கு இளையராஜாவின் பெற்றோர் கலியபெருமாள், சுந்தரம்பாள் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அனு அளித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து இளையராஜாவை கைது செய்து கலியபெருமாள், சுந்தரம்பாள் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×