என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி மானியத்துக்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய அதிகாரியின் வீடியோ காட்சி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது,
    குத்தாலம்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆற்று பாசனத்தை நம்பி விவசாயம் பார்ப்பவர்கள் குறுவை சாகுபடியை கைவிட்டு சம்பா பயிரிட தயாராகி வருகின்றனர். நிலத்தடி நீரைக்கொண்டு குறுவை விவசாயம் செய்பவர்களை ஊக்குவிக்க எந்திரம் மூலம் நாற்று நடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    நாகை மாவட்டத்திற்கு 30 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு ரூ.12 கோடி மானியம் அறிவித்தது. எந்திரம் மூலம் நடவு செய்த விவசாயிகள் மானியம் பெறுவதற்கு, நாற்று நடவு செய்தது குறித்து போட்டோ, சிட்டா அடங்கல் போன்ற விபரத்தை வேளாண்மை உதவியாளரிடம் அளித்து அவர் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். அதிகாரிகள் பார்வையிட்டுவிட்டு அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைப்பார்கள்.

    நாகை மாவட்டம், குத்தாலம் வேளாண் விரிவாக்க அலுவலகத்துக்குட்பட்ட கோமல் பகுதி வேளாண் உதவியாளர் கண்ணன் என்பவர் கோமல், வழுவூர், மேக்கிரிமங்கலம், பழையகூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடவு மானியத்திற்காக விண்ணப்பதாரர்களை வற்புறுத்தி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.500 வீதம் வசூல் செய்ததாகவும், பணம் தர மறுத்த விவசாயிகளின் விண்ணப்பத்தை நிராகரித்ததாவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும் வேளாண் உதவியாளர் கண்ணன் விவசாயிகளிடம் பணம் பெறுவதை ரகசியமாக செல்போனில் பதிவு செய்துள்ள விவசாயிகள் வேளாண்மைதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

    நாகை மாவட்டம் முழுவதும் இதுபோன்ற வசூல் வேட்டை நடப்பதாகவும் உடனடியாக வேளாண்துறை அதிகாரிகளிடம் அரசு விசாரித்து விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், லஞ்சமாக வசூலித்த தொகையை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மத்திய அரசு சமஸ்கிருத மொழி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மயிலாடுதுறை:

    மத்திய அரசு சமஸ்கிருத மொழி திணிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர அமைப்பாளர் ஜி.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

    இதில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவர் ஜெயராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

    மத்திய மனிதவள அமைச்சகம். விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி ஐ.ஐ.டி.களிலும், மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாக திணித்து வருகிறது. அதேபோல் சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பன பண்பாட்டைத் திணிப்பதே அவர்களின் உண்மையான நோக்கமாகும்.

    அதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்புகளுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியுள்ளனர்.

    இந்தியாவில் சமஸ்கிருதத்தை பேசும் மக்கள் கொண்ட மாநிலம் இல்லை, அது பேச்சு மொழியாகவும் இல்லை. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் சமஸ்கிருத நூல்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த விஞ்ஞானியும் இதுவரை கூறவும் இல்லை.

    சமஸ்கிருதமொழியில் இந்தியாவில் ஒரு பத்திரிக்கை கூட வெளிவரவில்லை. சில ஆயிரம் பேர்கள் மட்டுமே அறிந்திருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட மொழி சமஸ்கிருதம் ஆகும். எனவே அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் அதிகார பூர்வ மொழியாக வைத்திருப்பதை மறுபரிசீலனை செய்து சமஸ்கிருதத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை மத்திய அரசு நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் மு.அன்பரசன், மாவட்ட தலைவர் ம.மகாலிங்கம், நகர செயலாளர் ப.தமிழ்வேலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம் வழக்கறிஞர் சங்கர், தமிழர் உரிமை இயக்கம் சுப்பு.மகேஷ், மனிதநேய மக்கள் கட்சி அப்துல் கபூர். ஜாகீர்,எஸ்.டி.பி.ஐ. சபீக்அகமது கலந்துகொண்டனர். முடிவில் நகரதலைவர் நாஞ்சில் சங்கர் நன்றி கூறினார்.

    வேதாரண்யம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் தெற்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகள் கார்த்திகா (17). இவர் வேதாரண்யத்தில் அரசு கல்லூரியில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வந்தார்.

    கடந்த 6-ம் தேதி வீட்டில் இருந்த போது இவரது தாய் தங்கம் நூறு நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் வீட்டிலிருந்த கார்த்திகாவிடம் சமைக்க கூடாதா என கேட்டுள்ளார். பின்பு தாய், மகள் அனைவரும் சமைத்து சாப்பிட்டு முடித்த பின்னர் கார்த்திகா மட்டும் அருகிலிருந்த கொட்டகைக்கு சென்று மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    படுகாயமடைந்த அவரை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட்டார்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    மயிலாடுதுறை அருகே பணத்தகராறில் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மணல்மேடு வடக்குவெளி. திருச்சிற்றம்பலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), இவரது மனைவி தேவிகா(34) இவர்கள் இரவு வீட்டில் தூங்கியபோது, அதே பகுதியை சேர்ந்த பன்னீர் மகன் பாலமுருகன் உள்பட 3 பேர் வந்து தகராறு செய்துள்ளனர். பணபிரச்சனை தொடர்பாக ரகளை செய்த அவர்கள் கட்டையால் செல்வத்தை அடித்துள்ளனர்.

    இதனால் அவரது வலதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அரிவாளை கொண்டும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த செல்வம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இதுகுறித்து மணல்மேடு போலீசில் தேவிகா புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டது. இதில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பேரூராட்சி அருகில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையின் மேலாளராக செந்தில்குமாரும், விற்பனையாளர்களாக மதியழகன், மாரிமுத்து, ரவிச்சந்திரன் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    நேற்று இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கடையின் ‌ஷட்டரை உடைத்தனர். பின்னர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீ மளமளவென்று எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனாலும் கடையில் இருந்த மது பாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து தலைஞாயிறு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    நாகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, வேதாரண்யம் டி.எஸ்.பி. பொன். கார்த்திக் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீ வைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர். தீ வைத்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

    கடந்த 1-ந் தேதி வெள்ளப்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம் அடைந்தது.

    தொடரும் தீ வைப்பு சம்பவத்தால டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
    மயிலாடுதுறையில் போதை பொருள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தீப்பாய்ந்தம்மன் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவரிடம் விசாரணை செய்ததில் அவர் மாப்படுகை அவயாம்பாள்புரம் சார்லஸ்(53) என்பதும், அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்ததில் டயோசிபார்ம் என்ற போதை பவுடர் 600 கிராம் விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடமிருந்த போதை பொருளை பறிமுதல் செய்து சார்லசை கைது செய்தனர்.
    சீர்காழி அருகே மாணவியை பாலியல் பலாத்கராம செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே சேத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியில் செயல்படும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 10–ம் வகுப்பில் படித்து வருகிறார். அவரிடம் மன்னிபள்ளம், உடையூரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் விமல்ராஜ் (20) ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார்

    இதுபற்றி அறிந்த மாணவியின் தாய் சீர்காழி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுதுரை வழக்குப்பதிவு செய்து விமல்ராஜை கைது செய்தார். விமல்ராஜ் கூலி தொழிலாளி ஆவார்.

    மாணவியை வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரவு 8 மணி முதல் தூரல் மழை பெய்தது. இந்த மழை 2 மணி வரை நீடித்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரவு 8 மணி முதல் தூரல் மழை பெய்தது. இந்த மழை 2 மணி வரை நீடித்தது. இதையொட்டி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 2 மணி வரை மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் பெரும் அவதி அடைந்தனர். கொசு கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு தூக்கமின்றி தவித்தனர்.

    வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பகுதியிலும் மழை பெய்தது. வேதாரண்யத்தில் 2.4 மில்லி மீட்டர் மழையும், தலைஞாயிறில் 6.2 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    இதே போல் திருவாரூரில் நேற்று மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உள்பட சில இடங்களிலும் மழை பெய்தது.

    வழி தவறி கோடியக்கரை வந்த இலங்கை தம்பதிக்கு காவல் நீட்டிப்பதாக வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    இலங்கை வவுனியா மாவட்டம் கல்வெட்டு சந்தி பகுதியை சேர்ந்தவர் துஷ்வந்த். இவரது மனைவி துவாரகா. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் துவாரகா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இவர்கள் கடந்த 7-ந் தேதி கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு சென்றனர். கோவிலை சுற்றி பார்த்து விட்டு படகுதுறைக்கு வந்தபோது அவர்கள் வந்த படகை காணவில்லை.

    இதனை தொடர்ந்து 3 பேரும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பைபர் படகில் ஏறி தூங்கினர். படகின் கயிறு அறுந்து கடலுக்குள் சென்றது.

    கோடியக்கரை அருகே அவர்கள் படகில் தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை நாகை மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அழைத்து வந்தனர்.

    அவர்களை கைது செய்த போலீசார் பாஸ்போர்ட் விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக அவர்கள் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை வருகிற 20-ந் தேதி வரை நீட்டித்து நீதிபதி தீனதயாளன் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து 3 பேரும் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×