என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள சேசமுலை புதுத் தெருவை சேர்ந்தவர் மோகன் (34). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டிற்கு விருந்தினர் வந்துள்ளனர். அப்போதும் மோகன் குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை மனைவி சந்திரகலா கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மோகன் தலைக்கு தடவும் எண்ணையை குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, கரியாப்பட்டினம் காவல் சரகம், தென்னம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி சந்திரா (வயது 42). இவர் தனது மகள் திரிஷா (8) என்பவரை தனது சைக்கிளில் அழைத்து கொண்டு மெயின்ரோட்டில் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தேத்தாகுடி தெற்கு சுப்பிரமணியன் மகன் பாரதிராஜா (22) என்பவர் மோதியதில் சந்திராவும், திரிஷாவும் படுகாயமடைந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இது குறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குபதிவு செய்து பாரதிராஜாவை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள வடகரையை சேர்ந்தவர் கண்ணன் (40) கொத்தனார். இவர் குடி போதையில் அதே பகுதியை சேர்ந்த கலைச் செல்வனை திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் அவர்களுக்குள் தகராறு இருந்தது. இந்த நிலையில் கண்ணனை கலைச்செல்வன் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
பலத்த காயம் அடைந்த கண்ணன் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கலைச்செல்வனை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முட்ட அரசபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வீரமணி (40). செங்கல் சூளை தொழிலாளி.
இவரது மனைவி சரஸ்வதி உடல் நலம் சரியில்லாததால் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை அழைத்து வர வீரமணி சென்ற போது உடல் நலம் சரியான பின்பு வருவதாக கூறி உள்ளார். இதனால் மனம் உடைந்த வீரமணி விஷம் குடித்து விட்டார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன் கோவிலில் செயல்படும் அரசு பள்ளிகளுக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மாணவர்கள் அரசு பஸ்சில் இலவச பஸ் பாஸ் மூலம் வந்து படித்து செல்கிறார்கள். இவ்வாறு பள்ளி செல்லும் மாணவர்கள் 2 அரசு பஸ்களில் சென்று வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அரசு பஸ்சை நிறுத்திவிட்டனர். இதனால் 2 பஸ்களில் சென்ற மாணவர்கள் ஒரே பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் அந்த பஸ்சில் இடம் கிடைக்காமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் தவறி விழுந்து காயமடையும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கும்பகோணத்தில் இருந்து சீர்காழிக்கு செல்லும் பஸ் பெருமங்கலம் பகுதிக்கு காலை 6.40 மணிக்கு வருவதில்லை எனவே 7.40 மணிக்கு வரும் பஸ்சுக்காக மாணவர்கள் காத்திருந்தனர். அந்த பஸ் இன்று காலை 8 மணி அளவில் வந்தது. இதில் காலை கூட்டம் நிரம்பி வழிந்ததால் அதில் மாணவர்களால் ஏற முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மாணவர்கள் அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பெருமங்கலம், ஆதமங்கலம், மானாந்திருவாசல், மணல் மேடு, பட்டவர்த்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் சீர்காழி இன்ஸ்பெக்டர் அழகுதுரை சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். முகூர்த்த நாட்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. அப்போது பஸ்களில் எங்களை ஏற்றாமல் சென்று விடுகின்றனர். இதனால் பள்ளிக்கு தாமதமாக சென்று சரியாக படிக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே மாணவ-மாணவிகளுக்காக அரசு தனியாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி மெயின் ஆர்ச் அருகில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். சுமார் 72 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். அவரது அருகில் வயலுக்கு அடிக்கும் பூச்சிக் கொல்லி மருந்து காலி டப்பா ஒன்று கிடந்தது.
தகவலறிந்து அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
டெல்டா பகுதிகளில் விவசாய பணிகளுக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
எனவே நிலத்தடி நீரை கொண்டு செய்யப்படும் விவசாயத்திற்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில் ஒரு கட்டமாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நிலத்தடி நீரை கொண்டு எந்திரம் மூலம் நடவு செய்யப்படும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் மானியம் அறிவிக்கப்பட்டது.
நாகை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, செம்பனார் கோவில், சீர்காழி மற்றும் கொள்ளிடம், கீழ் வேளூர், திருமருகல் பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு இவ்வாறு மானியம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஏக்கருக்கு தலா ரூ. 4 ஆயிரம் வீதம் ரூ. 12 கோடி மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி மானியம் பெற விண்ணப்பம் அளித்த விவசாயிகளிடம் மயிலாடுதுறை அருகே உள்ள கோமல் வேளாண்மை உதவியாளர் கண்ணன் ஏக்கருக்கு ரூ. 500 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
அவர் மீது நாகை கலெக்டர் பழனிச்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அவரது உத்தரவின் பேரில் வேளாண் உதவியாளர் கண்ணனை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி வீரம்மாள். இவர் ஆதனூர் ஆப்பக்கன்னிபாலம் அருகே உள்ள தூண்டிவீரன் கோவில் எதிரே சர்பத் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இரவு தனது வீட்டின் அருகே தண்ணீர் குடம் தூக்கி கொண்டு வரும் போது அதிவேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வீரம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) என்பரை வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்புராசன் கைது செய்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு, மணக்குடி பகுதியை சேர்ந்தவர் அருள்மணி (வயது 35) விவசாயி. இவரது மனைவி கோமகள் (30). இவர்களுக்கு கருனி என்ற 7 வயது மகளும், ஹரிஹரன் என்ற 5 வயது மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுவந்தது. இதில் மனமுடைந்த கோமகள் தனது 2 குழந்தைகளுக்கும் அதிக அளவில் தூக்க மாத்திரையை உணவில் கலந்து கொடுத்து விட்டு அவரும் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






