என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றியவர்கள் சுற்றுச்சூழல் விருது-2015 பெற விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சிக்கு  சிறப்பாக சேவையாற்றியவர்கள் சுற்றுச்சூழல் விருது-2015 பெற விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, ஆராய்ச்சி கட்டுரை ஆகியவற்றில் 2015-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல்களை இயக்குநர், சுற்றுச்சூழல் துறை தரைதளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை என்ற முகவரியில் வருகிற 18-ந்தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பெற்றுக்கொள்ளலாம்.
     
    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 20-ந்தேதி ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பம் 6 நகல்களுடன் ரூ.100 மதிப்பிலான கேட்புக் காசோலையுடன் 3 புகைப்படங்கள் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். 

    சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் தகுதியுடைய கல்வியாளர்கள், தனி நபர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும தனி நபர்கள், நிறுவனங்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 38 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாகளை கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியம் அருவாப்பட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:–

    அருவாப்பட்டி கிராமம் முழு சுகாதாரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமத்தின் அனைத்து இடங்களிலும் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. நாம் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

    முகாமில் 25 பேருக்கு ரூ. 2,43,000 மதிப்பிலான இயற்கை மரண உதவித் தொகையும், 32 பயனாளிகளுக்கு ரூ.32,000 மதிப்பிலான முதியோர் உதவிர் தொகைக்கான ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.11,010 மதிப்பிலான தையல் எந்திரங்களையும், தோட்டக்கலைத்துறை சார்பில ரூ.19,600 மதிப்பிலான தெளிப்புநீர் பாசனக் கருவிகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1000 மதிப்பிலான நெல் நுண்ணூட்டங்களையும், 38 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார்.

    முன்னதாக பொது சுகாதாரத்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமையும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தோட்டக்கலைத்துறை , வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த காட்சி அரங்குகளையும் அவர் பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, ஒன்றியக்குழுத் தலைவர் சந்தோஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுபாநந்தினி, வட்டாட்சியர் பெருமாள், ஊராட்சிமன்றத் தலைவர் கலையரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை வடகரை கடகத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது30). கிளியனூர் கடகத்தை சேர்ந்தவர் சரவணன் (30). இருவரும் நண்பர்கள்.

    சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகையை அடுத்த புத்தூர் என்ற இடத்தில் இருந்து காரைக்கால் நோக்கி சென்றனர். இ.சி.ஆர். மெயின்ரோடு பாலையூரில் சென்றபோது முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதினர்.இதில் படுகாயமடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சரவணன் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் மாணிக்கவாசகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மயிலாடுதுறையில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நாகை மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் உள்ள கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நாகை மாவட்ட டாஸ்மாக் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.முருகேசன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமானுஐம் தலைமை தாங்கினார். இதில் கண்டன உரை நிகழ்த்திய ராமனுஐம் தற்காலிகமாக மதுக்கடைகள் மூடப்படுவதால் பணியிழக்கும் பணியாளர்களை கடைகளிலேயே பணியமர்த்த வேண்டும். மூடப்பட்ட கடைகளில் உள்ள மதுபானத்தை கிடங்கில் ஒப்படைக்க ஏற்ப்பட்ட போக்குவரத்து செலவு தொகையை சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

    மூடப்பட்ட கடைகளில் பணியிழந்த தொழிலாளர்களுக்கு தினம் அலுவலகம் சென்றுவர பயணப்படி அரசு வழங்க வேண்டும். இரவு நேரங்களில் கடைகளில் காவல் இருப்பதற்காக டாஸ்மாக் ஊழியர்களை நிர்ப்பந்திப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், இளங்கோவன், முருகன், ரமேக்ஷ்குமார், அருண் மாவட்ட இணைச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 50–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறையில் போலீசார் அதிரடி சோதனையில் 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
    மயிலாடுதுறை:

    18 வயதிற்குட்பட்ட காணாமல் போன குழந்தைகளை கண்டறிய ‘ஆபரே‌ஷன் உஸ்கான்’ என்ற செயல் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை பகுதியில் நேற்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மயிலாடுதுறை கால்டெக்ஸ், விஜித்திராயர் அக்ரஹாரம், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் கடைகளில் 5 பேர் குழந்தை தொழிலாளர்களாக வேலைபார்ப்பது தெரியவந்தது. உடனே போலீசார், அந்த 5 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் அவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து 5 பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

    இந்த சோதனையில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயலட்சுமி, கலியமூர்த்தி, போலீஸ் ஏட்டுகள் வசந்தகுமாரி, கயல்விழி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரியும் சமூக பணியாளர் ரம்யா ஆகியோர் ஈடுபட்டனர்.
    கொள்ளிடம் அருகே கார் மோதியதில் கோவில் குருக்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58) கோவில் குருக்கள்.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கொள்ளிடம் கடை வீதிக்கு சென்றார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடன் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆத்தூரை சேர்ந்த கார் டிரைவர் ஷேக் அலாவுதீன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் நாளை (16–ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு துணை மின் நிலையத்தில் நாளை (16–ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என வேதாரண்யம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    இதனால் வாய்மேடு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வாய்மேடு, ஆலங்காடு, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், கருப்பம்புலம், வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    ×