என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர்கள் 17 பேர் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
    X

    தமிழக மீனவர்கள் 17 பேர் சிறைப்பிடிப்பு: இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. நடுக்கடலில் கைது செய்யும் தமிழக மீனவர்களை அடித்து விரட்டுவதும், சிறைப்பிடித்து செல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தமிழக மீனவர்களை கைது செய்யும்போது அவர்களது படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விடுகின்றனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையின் பேரில் விடுவிக்கப்பட்டாலும், படகுகளை விடுவிப்பது கிடையாது. இதனால் தாயகம் திரும்பும் மீனவர்கள் வாழ வழியின்றி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

    இதுவரை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இருப்பினும் தற்போது மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளது.

    இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த வெற்றிவேல் (வயது 45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 8 பேரும், அதே பகுதியை சேர்ந்த வீரமணிக்கு சொந்தமான விசைப்படகில் 9 பேர் என மொத்தம் 17 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லைபகுதியில் நேற்று மதியம் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 17 பேரையும் கைது செய்து, அவர்களது விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    Next Story
    ×