என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு போலீஸ்சரகம் சேனாதிகாடு பகுதியை சேர்ந்தவர் குமார். கொத்தனார். இவரது மனைவி கனகா (30). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது.
இவரது பக்கத்து வீட்டில் நாகமுத்து என்பவர் வசித்து வருகிறார். அவர் வளர்க்கும் நாய் கனகா வீட்டிற்குள் புகுந்தது. இதனை அவர் தட்டிக் கேட்டார்.
இது தொடர்பாக நாகமுத்து அவரது மனைவி வசந்தா, மகள் வனிதா, மருமகன் வீரசேகர் ஆகியோர் கனகாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனை அவர் கணவர் வேலைக்கு சென்று வந்தவுடன் கூறியுள்ளார்.
அவர் இதனை சாதாரண பிரச்சினை என நினைத்து கொண்டு தட்டிக் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கனகா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் கருகிய அவர் முதலில் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கனகா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக கனகாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த நாகமுத்து அவரது மனைவி வசந்தா ஆகியோரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த பாலையூர் காந்தி நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி விஜயா (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் அமிர் தலிங்கம் கடந்த 4 வருடத்திற்கு முன்பு கிட்டினி பாதிப்பால் இறந்துவிட்டார். இதையடுத்து இவரது 2-வது மகன் ஹரிதாஸ், 2 வருடத்திற்கு முன்பு கிட்டினி பாதிப்பால் இறந்தார். இதனால் விஜயா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இவரது மூத்த மகன் காளிதாஸ் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காளிதாஸ் கல்லூரிக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த விஜயா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்தகாயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பாலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள மணல் மேடு துணை மின் நிலையத்தில நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மணல்மேடு, ராதா நல்லூர், கிழாய், கடலங்குடி, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், வடவஞ்சார், கொற்கை,காளி, பந்த நல்லூர், திருமங்கலம், சித்தமல்லி, முடிகண்ட நல்லூர், திருச்சிற்றம்பலம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவல் மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கு. சந்தான கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சரகம், குரவப்புலம் நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தம்புசாமி (65). இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்தும் குழந்தை இல்லாத நிலையில் தனது சகோதரியின் மகளான புஷ்பவள்ளியை வளர்ப்பு மகளாக பாவித்து அவரது வீட்டில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை தம்புசாமி வீட்டை விட்டு சென்ற அவர் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் வீட்டின் அருகேயுள்ள வேவேரி பிளக் குளத்தில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.
இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பசுபதி உட்பட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை சேவபாரதி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் பிரபாகரன் (23). குடிப்பழக்கம் இருந்தது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
பின்னர் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த பிரபாகரன் சேலையால் தூக்கு போட்டு கொண்டார். இதில் மயங்கி விழுந்த அவரை நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை அருகே உள்ள திருப்பூண்டி காலனி தெருவை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி அமுதா (22). முரளி திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அதே கம்பெனியில் அமுதா வேலை பார்த்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. அமுதாவின் சொந்த ஊர் கோவை ஆகும்.
கடந்த சில நாட்களுக்கு முன் முரளியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள அமுதாவின் தாய் சாந்தி, முரளியின் தாயார் நீலாவதி, சகோதரி லதா ஆகியோர் வந்து இருந்தனர்.
அப்போது அமுதாவிடம் 10 பவுன் சீர்வரிசை கேட்டதாக கூறப்படுகிறது. பெயர் சூட்டு விழா முடிந்து அமுதாவின் தாய் சொந்த ஊர் திரும்பிவிட்டார்.
இந்த நிலையில் அமுதா மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதனை கேள்விப்பட்டதும் அவரது தாய் திருப்பூண்டி வந்தார். அவர் கீழையூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை அருகே நீடூர்-நெய்வாசல் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் இக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. வுமான தமீம்முன்அன்சாரி கலந்துகொண்டு பேசினார்.
இந்து முன்னணி செய்திதொடர்பாளர் படுகொலை சம்பவத்தை மனிதநேய ஜனநாயகட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து பாட்டாளிமக்கள் கட்சிதலைவர் ராமதாஸ், விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடையை சூறையாடியதையும், பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டதை கூறி உள்ளார். பள்ளிவாசல்மீது கல்வீசியதை கூறவில்லை. அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் இந்துக்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறியது ஏற்புடையதல்ல.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பகுதியிலும் நம்கட்சியின் கொடிபறக்க வேண்டும். வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ராசுதீன், மாவட்ட செயலாளர் மாலீக், நகர செயலாளர் முகமது யாசர் அரபாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்தை ஹாலமாதர் மிஷ்பாஹீ தொடங்கி வைத்தார். மாநில அவைத்தலைவர் நாசர்உம்ரீ சிறப்புரையாற்றினார். இதில் அபுசாலி சாகுல் அமது, ஜப்ரூதின், ரியாத் அகமது, முகமது பாருக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள தாண்டவன் குளத்தை சேர்ந்தவர் அகோரமூர்த்தி. இவர் கேரள மாநிலம் கொச்சியில் படகு கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சீத்தா (வயது 35). இவர் தாண்டவன்குளத்தில் தனியாக வசித்து வந்தார். அகோரமூர்த்தி-சீத்தா தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி சீத்தா வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 5½ பவுன் தாலிச்செயின் மாயமாகி இருந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீத்தா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சீத்தா செல்போனில் அதிகமாக பேசிய 10 நபர்களை பிடித்து கொலை செய்தது யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்யாததால் சீத்தாவின் உறவினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் கொலையாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர்கோயிலில் அருள்பாலிக்கும் முத்துசட்டைநாதருக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பு வழிபாடு நகர செயலாளர் பக்கிரிசாமி தலைமையில் நடைப்பெற்றது.ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி, ஜெயலலிதா பேரவை தலைவர் ராசு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து முத்து சட்டைநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
இதில் பேராசிரியர்.ஜெயராமன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் பரணிதரன், மாவட்ட பிரதிநிதி கார்த்தி,வக்கீல் நெடுஞ்செழியன், நிர்வாகிகள் விஜி, பரக்கத்அலி, முரளி, கிருஷ்ணமூர்த்தி, ராகவன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இதேபோல் சீர்காழி ஆபத்துகாத்தவிநாயகர் கோவிலில் அண்ணா ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு அதன் தலைவர் மலையப்பன் தலைமையில் நடைப்பெற்றது. செயலாளர் குண்டுபிள்ளை, பொருளாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சிதறுதேங்காய் உடைத்தும், தீபங்கள் ஏற்றியும் அ.தி.மு.க. வினர்கள் முதல்வர் நலம்பெற வேண்டி பிராத்தனைகள் செய்தனர். புற்றடி மாரியம்மன்கோவிலில் முதலமைச்சர் ஜெயலலிதா பூர்ணகுணமடைய சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதில் நகர துணை செயலாளர் வேணுகோபால், நகர அவைத்தலைவர் ராமலிங்கம், நிர்வாகிகள் லாட்ஜ்.மணி, ரவிசண்முகம், சீனுவாசன் சுரேஷ், ராஜ்கண்ணன் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.
சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் முன்னாள் கவுன்சிலர் சேகர், பன்னீர்செல்வம், தங்கராசு, செந்தில்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. வினர்கள் கலந்துக்கொண்டு முதலமைச்சர் பெயரில் சங்கல்பம், அர்ச்சனைகள் செய்து வழிப்பட்டனர். வடபாதி மாரியம்மன் கோவிலில் அதிமுக மாவட்ட பிரதிநிதி லெட்சுமி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து, நெய்தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர். நகர்மன்ற தலைவர் இறைஎழில் உள்ளிட்டோர் பங்கேற்று வழிப்பட்டனர்.
கடைவீதி செல்வ விநாயகர் கோவிலில் நகர்மன்ற துணை தலைவர் தமிழ்செல்வம் தலைமையில் நடைப்பெற்ற சிறப்பு வழிப்பாட்டில் திரளான அ.தி.மு.க.வினர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர். சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து நலமுடன் வீடு திரும்பவேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
சீர்காழியை அடுத்த நந்தியநல்லூர் பெரிய தெருவைச் சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 80). அதே பகுதி அக்னி வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (75). இவர்கள் நேற்று நந்தியநல்லூரில் மண்எண்ணெய் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த வெறிநாய் ஒன்று இவர்களை கடித்தது. அதே போல் அந்த வழியாக சென்ற புவனேந்திரன் (15) என்பவரையும் கடித்து குதறியது. இதையடுத்து காயமடைந்த அவர்களை சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவர்களை தாசில்தார் மலர்விழி, கிராம நிர்வாக அதிகாரி ரேவதி ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் அந்த வெறிநாய் நந்தியநல்லூர், அக்னி, நிம்மேலி கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள கால்நடைகளையும் கடித்துள்ளது.
எனவே அந்த வெறிநாயை பிடிக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடகரை அரங்கக்குடி பகுதியை சேர்ந்தவர் கமாருதீன். இவரது மனைவி சகீலா நாச்சியா(வயது 45).
இவர் நேற்று இரவு தனது வீட்டில் கதவை திறந்து வைத்து தொழுகை செய்து கொண்டு இருந்தார். இதை நோட்டமிட்ட 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சகீலாவின் வீட்டிற்குள் நுழைந்தது. அங்கு சகீலா உள்பட 3 பெண்கள் தொழுகை செய்து கொண்டு இருந்தனர். அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்து இருந்த 12 பவுன் செயினை பறித்தனர். பின்னர் அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து 3 பேரும் அவர்கள் வீட்டின் சன்னல் வழியாக சத்தம் போட்டு உதவி கேட்டனர். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்து விட்டனர்.
இது குறித்து செம்பனார் கோவில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தொழுகை நாளில் இந்த திருட்டு நடைபெற்று இருப்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ் (25). இவர் வேதாரண்யத்தில் தனியார் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்று பக்கத்து வீட்டில் பேசி கொண்டிருந்தாராம். இதை பார்த்த அவரது சகோதரி உமா (35) ஏன் அங்கு பேசி கொண்டிருக்கிறாய். சாப்பிட்டு விட்டு படு என்றார். இதில் ஆத்திரமடைந்த முருகதாஸ், உமாவை தாக்கினாராம். இதை உமாவின் மகன் சிவமணி(15) தட்டி கேட்டாராம். அவரையும் முருகதாஸ் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த உமா, சிவமணி ஆகிய இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உமா வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முருகதாசை கைது செய்தனர்.






