என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    குத்தாலம் அருகே தேர்தலில் சீட் கேட்டு அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் பகுதி கோமல் மேலத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது54). இவர் குத்தாலம் தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் கடந்த 34 வருடங்களாக அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கோமல் வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வார்டை தனது மனைவி ஜெயந்திக்கு வழங்குமாறு பாலசுப்பிரமணியன் கட்சி நிர்வாகிகளிடம் கூறி உள்ளார். மேலும் அவர் அ.தி.மு.க. தலைமை தனது மனைவிக்கு சீட் ஒதுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதையறிந்த கட்சி நிர்வாகிகள் அவரை அழைத்து மேலிடம் உத்தரவு வருவதற்கு முன்பு இதுபோல் செய்யக்கூடாது என்று தடுத்து உள்ளனர்.

    இந்நிலையில் முத்துக்குமார் என்பவரும் தனது மனைவிக்கு சீட் கேட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பால சுப்பிரமணியன் தனது மனைவி ஜெயந்தி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் கோமல் கடைத்தெருவிற்கு இன்று காலை வந்தார். அவர் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.

    இதையறிந்த பாலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மண்எண்ணை கேனை கைப்பற்றினர்.

    இதையடுத்து பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.தகவலறிந்து அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

    வேதாரண்யத்தில் அனுமதி பெறாமல் மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 960 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் அவரிக்காடு பகுதியில் அனுமதி பெறாமல் பார் நடத்தி மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு உத்தரவின்பேரில் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அனுமதி பெறாமல் மதுபானம் விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அப்போது அங்கு மதுபானம் விற்ற கடை உரிமையாளர் அண்ணாதுரை (வயது47), விற்பனையாளர் தனபால் (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடையில் அனுமதியின்றி விற்பனைக்காக 20 பெட்டிகளில் 960 குவார்ட்டர் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேறு படகுகளில் மீனவர்கள் சென்று நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த 4 மீனவர்களையும் மீட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி. இவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 30-ந் தேதி குட்டியாண்டி (வயது 50), வேதையன் (50), மகேந்திரன் (46), சுந்தர் (55) ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நேற்று மதியம் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை. நேற்று அவர்கள் சென்ற படகு பழுதாகி விட்டதால் நடுக்கடலில் தத்தளித்தனர். இதுபற்றி மகேந்திரன் படகு உரிமையாளர் தெட்சிணாமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அப்போது இரவாகி விட்டதால் அவர்களை தேட முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து இன்று வேறு படகுகளில் மீனவர்கள் சென்று நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த 4 மீனவர்களையும் மீட்டனர். அவர்களுடன் கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் சென்று உதவி புரிந்தனர். மீட்கப்பட்ட மீனவர்களை கரைக்கு அழைத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகையில் மின்னல் தாக்கியதில் படகில் இருந்த மீனவர்கள் கரைக்கு செல்ல முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு அண்ணாநகர் தெருவை சேர்ந்தவர் நேரு (வயது 48). இவருக்கு சொந்தமான விசை படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த செல்வம் (26), மணிகண்டன் (20), காமராஜ் (28), சுமன் (25), ஏலமுத்து (26), சங்கர் (35), சுரேஷ் (28), பொன்னுசாமி (50) ஆகிய 8 பேரும் பழையாறு துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க புறப்பட்டனர்.

    பின்னர் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி படகில் இருந்த திசைக்காட்டும் கருவி, ஏக்கோ சிலிண்டர் (கடலில் மீன்கள் இருக்கும் இடத்தை காட்டும் கருவி), வாக்கிடாக்கி, மின்சாரம் தேக்கி வைக்கும் எந்திரம் உள்ளிட்ட கருவிகள் மட்டும் சேதம் அடைந்தன. இதனால் மீனவர்கள் 8 பேரும் எந்த பாதிப்பும் இல்லாமல் படகிலேயே இருந்தனர். ஆனால், மின்னல் தாக்கியதில் படகில் இருந்த சாதனங்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் மீனவர்களால் மேற்கொண்டு படகை இயக்க முடியவில்லை.

    இதனால் படகில் இருந்த மீனவர்கள் கரைக்கு செல்ல முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். இந்த நிலையில் மீனவர் பொன்னுசாமியிடம் இருந்த செல்போன் மட்டும் இயங்கியது. அதன் மூலம் மீனவர்கள், படகு உரிமையாளர் நேருவை தொடர்பு கொண்டு மின்னல் தாக்கியதால் படகை இயக்கமுடியாமல் நடுக்கடலில் தத்தளிப்பதாகவும், உடனே வந்து காப்பாற்றும் படியும் கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பழையாறு பகுதி மீனவர்கள் விசை படகுகள் மூலம் கடலுக்கு விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    மீட்கப்பட்ட சேதமடைந்த படகை பாரதி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    நாகை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்திட உள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தினைச் சேர்ந்த நல்ல உடல்நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் தாசில்தார் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை சந்தித்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விருப்பக் கடிதத்தினை கொடுக்கலாம்.

    1. 3.10.2016 (திங்கட்கிழமை) தாசில்தார் அலுவலகம், சீர்காழி

    2. 5.10.2016 (புதன்கிழமை) தாசில்தார் அலுவலகம், திருக்குவளை.

    3. 7.10.2016 (வெள்ளிக்கிழமை) தாசில்தார் அலுவலகம், கீழ்வேளுர்

    4 13.10.2016 (வியாழக்கிழமை) தாசில்தார் அலுவலகம், தரங்கம்பாடி.

    5. 14.10.2016 (வெள்ளிக்கிழமை) தாசில்தார் அலுவலகம், வேதாரண்யம்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம், அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் ரோஜா (22). இவர் வேதாரண்யம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரே சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (27) என்பவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு கல்லூரிக்கு செல்ல வந்த ரோஜாவை தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தரக்குறைவாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரோஜா வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து சக்திவேல் (27) என்பவரை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    வேதாரண்யம் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல்சரகம் ஆயக்காரன்புலம் 2-ம்சேத்தி பாப்புரெட்டிகுத்தகை பகுதியை சேர்ந்தவர் விஜயன். விவசாயி. இவரது மகள் சந்திரா (வயது22).

    சந்திராவின் பெற்றோர் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்று விட்டனர். சந்திரா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மதியம் 3 மணியளவில் அதே தெருவை சேர்ந்த கணபதி மகன் கண்ணன்(30), முருகையன் மகன் விஜயகுமார்(31) ஆகிய 2 பேரும் விஜயனின் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சந்திராவை மிரட்டி கற்பழித்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்ததை கூறி சந்திரா கதறி அழுதுள்ளார். பின்னர் இதுபற்றி வாய்மேடு போலீசில் சந்திரா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் வழக்குப்பதிவு செய்து சந்திராவை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த கண்ணன், விஜயகுமார் ஆகிய 2 பேரையும் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகை அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள திருக்குவளை போலீஸ் சரகம் மேலவாழக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மகன் சங்கர் (வயது 18). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சங்கர் அப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு கொண்டார். உடனே அவரை மீட்டு நாகை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்கு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

    இதுகுறித்து திருக்குவளை இன்ஸ்பெக்டர் விவேகானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நாகை அடுத்த பாகசாலை போலீஸ் சரகம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 52) கூலி தொழிலாளி. இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிகிச்சை அளித்தும் வயிற்று வலி குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். உடனே அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

    இது குறித்து பாகசாலை இன்ஸபெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வேதாரண்யத்தில் குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கீழஆறுமுககட்டளை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 34). இவரது மனைவி ராதா (23).

    ராதாவின் அக்காள் கலைமணி, அவரது கணவர் வேதமூர்த்தி ஆகியோருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் தனிக்குடித்தனம் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த சக்திவேல் அவர்கள் தனிக்குடித்தனம் போக நீதான் காரணம் என்று கூறி மனைவியை கட்டையால் தாக்கி உள்ளார். இதற்கு சக்திவேலின் அண்ணன் சந்திரசேகரன், ராதாவின் மாமியார் வேதவள்ளி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இது குறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி, சக்திவேல், சந்திரசேகரன், வேதவள்ளி ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, ராதாவின் கணவர் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    நாகூர் அருகே சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலியானார். இது பற்றி நாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன்(வயது 50) கொத்தனார். இவர் நாகூர் பட்டினச்சேரியில் உள்ள முல்லையம்மாள் என்பவர் வீட்டில் கட்டிடவேலை செய்த போது சுவர் இடிந்து சவுந்திரராஜன் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி நாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே ஜோசியம் பார்ப்பதற்காக வெளியே சென்ற ஜோதிடர் மாயமானார். இது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா, வாய்மேட்டில் தரங்கம் பாடியை சேர்ந்த காட்டு நாயக்கர் குடும்பத்தினர் கூடாரம் அமைத்து தங்கி தங்கள் பரம்பரை தொழிலான ஜோசியம் பார்த்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் அதிகாலை எழுந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜோசியம் பார்த்துவிட்டு மாலை வீடு திரும்புவார்.

    இந்நிலையில் வாய்மேட்டில் தங்கியிருந்த தரங்கம்பாடியை சேர்ந்த பாக்கியராஜ் மகன் ராஜூ (வயது 27) கடந்த 6ம் தேதி ஜோசியம் பார்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

    ஆனால் அவர் இதுவரை கூடாரத்திற்கு வரவில்லை. இதுகுறித்து அவரது மனைவி கஸ்தூரி வாய்மேடு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சிவதாஸ் வழக்குபதிவு செய்து ராஜூவை தேடி வருகின்றார்.

    வேதாரண்யம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் தென்னம்புலம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (58). இவர் வீட்டருகே உள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடிப்பது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில் அதே ஊரே சேர்ந்த ராமச்சந்திரன் மகன் செந்தில் (38) என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் சேகரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சேகர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ×