என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள திருக்குவளையை சேர்ந்தவர் நடேசன் (வயது 70). இவர் சம்பவத்தன்று உழங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரமணி (வயது 45) என்பவர் நடேசனை கீழே தள்ளிவிட்டு அவர் கையில் வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த நடேசன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொது செயலாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமிமுன்அன்சாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி நதிநீர் உரிமை போராட்டத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துவிட்டது. அவர்களின் இரட்டைவேடம் அம்பலமாகி உள்ளது. இதில் அரசியல் லாபக்கணக்கோடு மோடியின் மத்திய அரசு செயல்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் பலம் உள்ளது. ஆனால், கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி பலமாக உள்ளது. எனவே, கட்சிக்கு வாய்ப்புகள் அற்ற தமிழகத்தைவிட, அரசியல் வாய்ப்புகள் நிறைந்துள்ள கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்பட பாரதீய ஜனதா கட்சியினர் முடிவெடுத்துவிட்டனர். இதனால் தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்கு உள்ளாக்கிவிட்டார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ச்சியாக முன்னெடுத்த சட்ட போராட்டத்தால் கிடைத்த வெற்றியின் பலனை தமிழக மக்கள் அடைய முடியாத வகையில் மத்திய அரசு துரோகம் செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி நதிநீர் விவகாரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சமரசம் இன்றி போராட்டங்களை முன்னெடுக்கும். விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் நடத்தும் போராட்டங்களிலும் நாங்கள் பங்கேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மாவட்ட செயலாளர் மாலிக், மாவட்ட பொருளாளர் ஆக்கூர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் சாகுல்அமீது, அபுசாலி ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம்:
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு பரப்பும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. தொண்டர் கலையரசன் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.
முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து பல வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக்கில் கடந்த 2-ந் தேதி முதல்வரின் உடல் நிலை குறித்து அவதூறு செய்திகளை பதிவு செய்துள்ளார்.
அவர் சுய விளம்பரம் தேடிக்கொள்ள விரும்புகிறார். அவருடைய செயல் மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி வருகிறது. எனவே தமிழச்சி மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம், பொறையாறு அருகே திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
காவிரி நதிநீர் பிரச்சினையில் 1974-ம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் தமிழக மக்களுக்கும், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கும் துரோகம் செய்த கட்சி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆகும். தமிழகத்தின் அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி செய்தவர். ஏன் அவர் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திலும் இரு கட்சிகளும் காவிரி பிரச்சினையில் நாடகம் ஆடுகின்றன. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தமிழக மக்களுக்கு ஆதரவாக தான் இன்று வரை செயல்பட்டு வருகிறது. சட்ட பாதுகாப்புடன் காவிரி மேலாண்மை வாரியத்தை பிரதமர் நரேந்திரமோடி அமைப்பார்.
சில கட்சிகள் குறைக்கூறும் நரேந்திரமோடி அரசை உலக நாடே பாராட்டுகிறது. பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தான் உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் மத்திய அரசு ஆதரவாக செயல்படும். ஒரு காலமும் துரோகம் இழைக்காது. குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க கேரள முதல்-அமைச்சர் பிரணயவிஜயன் பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவரது எதிர்ப்பை பிரதமர் நிராகரித்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மீண்டும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மகன் வீரையன் (26). இவர் தேத்தாகுடி ஒயின்ஷாப்பில் பீர் வாங்கி குடித்து விட்டு பாட்டிலை உடைத்து பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சின்னப்பன் என்பவரை மிரட்டி அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்து சென்று விட்டார்.
இது குறித்து சின்னப்பன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து வீரையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த செம்போடையைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 38). இவர் செம்போடை கருவைக்காடு பகுதியில் அனுமதியில்லாமல் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு ரோந்து பணி மேற்கொண்டிருந்த போலீசார் தேவேந்திரனை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோல் தேத்தாகுடி தெற்கு பகுதியில் மதுபானம் விற்றுக்கொண்டிருந்த நெய்விளக்கு மற்றும் தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்த சண்முகம் (31), சுதன் (40) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மறைஞாயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி மாரிமுத்து (80). தன் மகன் பன்னீர்செல்வத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தார்.
உடல்நலம் மிகவும் மோசமானதால் மனமுடைந்த அவர் விஷ மருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்து விட்டார்.
இது குறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் சப் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி வசந்தா (வயது 56). ராமு அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருப்பாராம். பக்கத்து வீட்டில் உள்ள கண்ணன் (30) ராமுவின் சத்தம் தாங்கமுடியாமல் ராமுவை தட்டிக்கேட்டாராம்.
அப்போது ராமு கீழே விழுந்து விட்டார். அதை பார்த்த ராமுவின் மனைவி வசந்தா ஏன் என் கணவரை அடித்தாய் என கேட்க, ஆத்திரமடைந்த கண்ணன் வசந்தாவை தரக்குறைவாக பேசி கையால் அடித்துள்ளார். இதில் கண் புருவத்தில் காயமடைந்த அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சீர்காழி:
நாகை வானகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 70), இவர் கடந்த 2 வருடமாக சீர்காழி அருகே பழையாறு பகுதியில் தங்கி மீன்பிடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை பழையாறு பங்கிங்காம் கால்வாயில் கோவிந்தராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியாக வந்தவர்கள் புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதை கண்டித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நாகை புதிய கடற்கரையில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட விவசாயிகள் உடல் மற்றும் நெற்றியில் பட்டை நாமம் போட்டியிருந்தனர். போராட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்த நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு, வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல நாகையை அடுத்த ஆயக்காரன்புலத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம், செட்டியார்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான சவுக்கு தோப்பு வழியாக அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மனைவி கமலம்மாள் நடந்து சென்றபோது, குழந்தை அழும் சத்தம் கேட்டு, பார்த்தபோது அங்கு பிறந்து சில நாட்கள் ஆன பெண் குழந்தை இருந்ததை கண்டு அதை மீட்டார்.
இந்நிலையில் பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாதததால் மீட்கப்பட்ட குழந்தையை தான் வளர்ப்பதாக விருப்பம் தெரிவித்து எடுத்துச் சென்றார்.
தகவலறிந்த வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் பெண் குழந்தையை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொட்டில் குழந்தை வளர்ப்புத் திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசின் விதிகளுக்கு உட்பட்டு குழந்தையை தத்தெடுக்க மாவட்ட நிர்வாகத்தை அணுகும்படி குழந்தையை வளர்க்க விருப்பம் தெரிவித்த தம்பதிக்கு அரசுத்துறையினர் அறிவுறுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகிற 17,19-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் தொடர்பான பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கின்ற வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி அமைக்கப்பட்டுள்ளது.
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களையும் மற்றும் தகவல்களையும் 18004253820 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கட்டணமில்லா தொலைபேசி மூலம் பெறப்படும் அனைத்து புகார்கள் மற்றும் தகவல்கள் தொடர்பாக உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆய்வின்போது தவறான தகவல்கள் கண்டறியும் பட்சத்தில் தகவல் தந்தவர்கள் மீது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மேற்படி தொலைபேசியில் உண்மையான புகார்களையும், தகவல்களையும் மட்டுமே பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






