என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள பாமநல்லூர் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் தங்கையன் (45) தொழிலாளி.இவர் கடந்த 25.10.15 அன்று திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பாமநல்லூரில் உள்ள குட்டை அருகே எலும்பு கூடுகள் கிடப்பதாகவும் அதன் அருகில் லுங்கி கிடப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் திட்டச்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இது குறித்து தங்கையன் மனைவி லதாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து எலும்புக்கூடு அருகில் கிடந்த லுங்கியை பார்த்து இது தனது கணவர் லுங்கி தான் என அடையாளம் கூறினார்.
தங்கையன் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சந்திரா.இவர் செங்கற் சுவர் எழுப்பிய கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த சந்திரா தண்ணீர் எடுக்க வெளியில் சென்ற போது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவத் தொடங்கியது.
இதில் வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. சேத மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோவன் சம்பவ இடத்திற்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சந்திராவிற்கு அரசு உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகூர் அருகே உள்ள கண்ணமங்கலம் காலனியை சேர்ந்த இளங்கோவன்- பழனியம்மாள் ஆகியோரின் மகள் பிரியங்கா (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாமாண்டு படித்து வந்தார்.
பிரியங்கா செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்ததால் சந்தேகம் அடைந்த பழனியம்மாள் அவரை கண்டித்து வந்தார். மேலும் கடந்த 2 மாதமாக பிரியங்கா கல்லூரி செல்லவும் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று பிரியங்கா பாத்ரூமில் இருந்து செல்போனில் பேசி உள்ளார். இதனை கண்ட பழனியம்மாள் தனது மகளை மீண்டும் கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரியங்கா எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் பிரியங்கா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாகூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நாகூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூர் மெயின் ரோட்டில் சண்முகம் என்பவர் பட்டாசுகடை நடத்தி வருகிறார். இந்த கடை ஆண்டு முழுவதும் செயல்படும். இங்கு விஷேச நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் பட்டாசுகளை வாங்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த பட்டாசு கடைக்கு புதிய பட்டாசுகள் அதிகமாக வாங்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த பட்டாசு கடையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. கடைக்கு சற்று தள்ளி இருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குத்தாலம், மயிலாடுதுறை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும பரவாமல் அணைத்தனர். இருந்தபோதிலும் கடை முழுவதும் எரிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சேதமாகி விட்டது. இது தொடர்பாக கடை உரிமையாளர் சண்முகம் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பட்டாசு வாங்க வந்த கண்டியூரை சேர்ந்த 3 பேர் தகராறு செய்ததாகவும், அவர்கள் தான் கடை பூட்டை உடைத்து தீ வைத்து இருப்பதாக சந்தேகப்படுவதாக கூறியிருந்தார். அதன் பேரில் கண்டியூரை சேர்ந்த 3 பேரை பிடித்து பட்டாசு கடை தீ விபத்துக்கு அவர்கள் காரணமா? என்பது தொடர்பாக குத்தாலம் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே உள்ள கண்டியூர் பெரிய தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 30) விவசாய கூலி வேலை பார்த்துவந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவரது மனைவி மரியா.
இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று வேலை பார்த்துவிட்டு இரவு வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் குத்தாலத்திற்கு கூலி வேலைக்கு சென்றார்.
பின்னர் இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கண்டியூர் அருகே வந்த போது திருமணஞ்சேரியிலிருந்து குத்தாலம் நோக்கி சென்ற மினி வேன் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் போலீசார் சத்தியமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி வேன் டிரைவர் திருமணஞ்சேரி காலிவாய்க்காலை சேர்ந்த விஜயபாலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆன புது மாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் தாண்டவன் குளத்தை சேர்ந்தவர் அகோர மூர்த்தி. இவரது மனைவி சீத்தா (35). இவர்களுக்கு குழந்தை இல்லை. அகோர மூர்த்தி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் படகு கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
தாண்டவன் குளத்தில் சீத்தா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி சீத்தாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் பின் பக்கம் சென்று பார்த்தனர். அப்போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சீத்தா கழுத்தில் கத்தி குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
அவரை கொள்ளை கும்பல் கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம்? என்ற கோணத்தில் புதுப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து சீத்தாவின் அண்ணன் எத்திராஜ் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சுதாகர், விஜய்கணேஷ், அருள் ஆகியோர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
நீண்ட நாட்களாகியும் கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவந்தனர். இந்நிலையில் சீத்தாவின் தவறான நடவடிக்கை பற்றி அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் கூறியதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வேறு கோணத்தில் விசாரிக்க தொடங்கினர். இதனை தொடர்ந்து சீத்தாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை செய்துவந்தனர். இருந்து 20 நாட்களாக கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்தனர்.
இந்நிலையில் சீத்தாவின் அண்ணன் எத்திராஜ் (வயது 37) நேற்று புதுப்பட்டினம் வி.ஏ.ஓ விமல்ராஜிடம் தனது தங்கை சீதாவை கொலை செய்தது நான்தான் என கூறி சரணடைந்தார். அவரை புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசாரிடம் அவர் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் வீட்டில் தனியாக வசித்து வந்த தனது தங்கை வேறு நபர்களுடன் தகாததொடர்பு வைத்திருப்பதாக எனக்கு தகவல் வந்தது. இதனால் நான் சீத்தாவை கண்டித்தேன். பின்னர் எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அங்கு சென்று வேலை பார்த்து வந்தேன். அப்போது எனது மனைவி காயத்திரி வேறு நபர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சீத்தா என்னிடம் தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்து உடனே வெளிநாட்டில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்து எனது மனைவி காயத்திரியை கண்டித்தேன். நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது என கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். எனது மனைவி குறித்து தவறாக கூறி என்னிடம் இருந்து அவரை பிரித்ததால் சீத்தாவின் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால் கடந்த 19-ந் தேதி சீத்தாவின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்றேன். அங்கு அறையில் தூங்கிக்கொண்டிருந்த சீத்தாவின் கழுத்தில் கத்தியால் குத்தினேன். இதில் சீத்தா துடிதுடித்து இறந்தார். போலீசார் நான் கொலை செய்ததை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் கொலை செய்தது போல் மாற்றி அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மட்டும் பறித்துக்கொண்டு வீட்டில் இந்த துணி மற்றும்பொருட்களை கலைத்து போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் என் வீட்டில் வந்து படுத்துக்கொண்டேன்.
அதிகாலை சீத்தா கொலை செய்யபட்டிருப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக சென்றேன். அப்போது போலீசார் கொள்ளையர்கள் கொலை செய்திருக்கலாம் என்று விசாரணை நடத்த தொடங்கினர். நானும் என்மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது தங்கையை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு போலீசில் புகார் தெரிவித்துவிட்டு நிம்மதியாக இருந்தேன்.
இந்நிலையில் போலீசாரின் விசாரணை எங்கள் பக்கம் திரும்பியது. போலீசார் என்னிடமும் எனது உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். இதனால் நான் எப்படியும் மாட்டிக்கொள்வேன் என பயந்து வி.ஏ.ஓவிடம் சரண்அடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து எத்திராஜை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த மரகத லிங்கம் உள்ளது.
இந்த மரகத லிங்கத்துக்கு தினமும் காலை, மாலை நேரங்களில் அபிஷேகம், ஆராதனை நடப்பது வழக்கம்
கோவில் அர்ச்சகர் கணேச குருக்கள் கடந்த 9-ந் தேதி காலை மரகதலிங்கத்துக்கு அபிஷேகம், ஆராதனை செய்து விட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் மாலை 6 மணிக்கு மரகதலிங்கத்துக்கு பூஜை செய்வதற்காக மெய்க்காப்பாளர் ரவிச்சந்திரனுடன் பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க சென்ற போது பெட்டகத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.
அங்கிருந்த மரகதலிங்கத்தை காணவில்லை. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து கோவில் கண்காணிப்பாளர் சவுந்தர ராஜன் திருக்குவளை போலீசில் புகார் அளித்தார்.
தகவல் கிடைத்ததும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, டி.எஸ்.பி. அன்பு மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து கோவில் அர்ச்சகர், மெய்க்காப்பாளர் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தினார்கள்.
தஞ்சை சரக டி.ஐ.ஜி. செந்தில் குமாரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் உத்திராபதி. விவசாயி. இவர் தனது வீட்டு தோட்டத்தில் பலவகை கீரைகள், திப்பிலி, மிளகு, பிரண்டை, ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அரிய செடிகளையும், மூலிகைகளையும் வளர்த்து வருகிறார்.
மேலும் இப்பயிர்களுக்கு எவ்வித ரசாயன உரங்களையும் பயன்படுத்தாமல் தொழு உரம், சாணக்கரைசல் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வழக்கமாக 6 மாதத்தில் 4 அடி உயரமே வளரும் செங்கீரை தண்டு எனும் கீரைத் தண்டை வளர்த்துள்ளார்.
இந்த செங்கீரைத் தண்டானது அபரிமிதமான வளர்ச்சியை கண்டு 11 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. இந்த அபூர்வ கீரைத்தண்டை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
நாகை வெளிப்பாளையம், வண்டிப்பேட்டை ஏழை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் அன்பரசன் (வயது 30). இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அன்பரசனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மனமுடைந்த அன்பரசன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஆனைக்கோவில் வடக்குதெருவை சேர்ந்தவர் நாகரத்தினம்(வயது29). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் நாகரத்தினம் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்த உறவினரின் 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகரத்தினத்தை கைது செய்தனர். இந்த நிலையில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி குழந்தையை பெற்றெடுத்தாள். இது குறித்த வழக்கு நாகை மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வசுந்தரி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக நாகரத்தினத்துக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அந்த பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.
அபராதத்தை செலுத்த தவறினால் நாகரத்தினம் மேலும் ஒரு ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மேலும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக நாகரத்தினத்துக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கும் ரூ.2 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 55), இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். நேற்று காலையில் அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கம், 3 பவுன் நகையை கொள்ளையடிக்கப் பட்டிருந்தது.
இதுகுறித்து கீவலூர் போலீசில் மனோகரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலத்தின் அடியில் 24 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
அப்போது இறந்த வாலிபர் கூத்தாநல்லூரை சேர்ந்த நூர்முகமது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தண்ணீரில் அடித்து வரப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






