என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள முத்தூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று காலை 8.30 மணிக்கு தனியார் மினி பஸ் புறப்பட்டு வந்தது.
இதனை இளந்த பட்டு கிராமத்தை சேர்ந்த சதிஷ் ஓட்டி வந்தார். பள்ளி மற்றும் அலுவலக நேரம் என்பதால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் பஸ்சில் பயணம் செய்தனர்.
இந்த பஸ் மயிலாடுதுறை -திருவாரூர் சாலை சீனிவாசபுரத்தில் வந்த போது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் பஸ்சில் பயணம் செய்த சுந்தர் ராஜ், ஐஸ்வர்யா, வீரமணி, அருள் தேவி உள்ளிட்ட 15 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர்.
தனியார் அலுவலகத்தில் வேலை செய்யும் அனிதா மற்றும் 14 பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த 30 பேரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் பார்த்து ஆறுதல் கூறினார். மினி பஸ் மரத்தில் மோதிய இடத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் சத்ய குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுராஜ் (43) என்பவர் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் தங்கியுள்ளார்.
இவர் நேற்று இரவு வங்கி பணிகளை முடித்துக் கொண்டு ஆயக்காரன்புலம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். கருப்பம்புலம் மேலக்காடு அருகே சென்ற போது எதிரே கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ராஜீவ்காந்தி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பட்டுராஜ் பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜீவ்காந்தி (35) என்பவரும் காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட அகரதனுர், முத்தூர், கொடவிளாகம், பெரம்பூர், எடக்குடி, அகரவல்லம், இளையாளு, கடக்கம் ஆகிய கிராமங்களில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புக்குள்ளாகாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
இந்த பகுதியில் அதிக மழை பெய்யும் போது, வாய்க்கால்களில் வடிகால்கள் இல்லாததால் மழைநீர் தேங்கி விடுகிறது. மழைநீர் அதிகமாக தேங்கும் தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் விரைவாக வடியும் வகையில் வாய்க்கால்களில் வடிகால்கள் சரி செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்பகுதி குளங்கள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு தேங்கும் மழைநீர் ஊருக்குள் புகாத வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்குவதைத் தவிர்க்கும் வகையில் பிரதான சாலைகளுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் இடையே உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும். அதிகமாக மழை பொழியும் காலங்களில், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரினை வெளியேற்றுவதற்கும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கும், மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது தாசில்தார் இளங்கோவன், நீர்வள ஆதாரம் (பாசனப்பிரிவு) உதவி செயற்பொறியாளர் பாட்ஷா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தைச் சேர்ந்த கைலவனம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ரவி (41). இவர் கடந்த 16-ந்தேதி இரவு வேதாரண்யம் வந்து விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இவர் பூப்பெட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த கீழையூர் காவல் சரகம், பூவத்தடி ஞானசேகரன் மகன் வினோத் (28) என்பவர் ஓட்டி வந்த கார் மோதியதில் ரவி பலத்த காயமடைந்தார்.
இவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்புராஜன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் மணல்மேடு அருகே நடுத்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது60). இவரது மகள் துர்கா தேவிக்கும் (வயது27), குத்தாலம் அருகே சென்னியநல்லுர் ஊராட்சி கச்சார் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கார்த்தி(30) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.
கார்த்தி சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நிலஅளவையராக பணிபுரிகிறார். துர்கா தேவிக்கு இம்மாதம் 11-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. 16-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை கார்த்தி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு சென்னைக்கு சென்று விட்டார்.
இந் நிலையில் துர்கா தேவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக கார்த்தி குடும்பத்தினரிடமிருந்து ரெங்கசாமிக்கு தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து ரெங்கசாமி தனது மகளின் திடீர் மரணத்தில் மர்மம் இருப்பதாக குத்தாலம் போலீசில் புகார் செய்துள்ளார். திருமணம் ஆகி ஒருவருடமே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சீர்காழி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ரெயில் மறியல் நடந்தது.
திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்தில் இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை வரை விடியவிடிய போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், விவசாய சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். 1000 பெண்கள் உள்பட 2000-க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அங்கேயே சமையல் செய்யப்பட்டு உணவு வழங்கப்பட்டது. சிலபெண்கள் கை குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் டெல்டா மாவட்டத்தில் விவசாயம் அழிந்து விட்டதாக கூறி ஒப்பாரி போராட்டமும் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட முத்தரசன் இரவு தண்டவாளம் அருகே படுத்து தூங்கினார்.
இன்று காலை திருவாரூர் ரெயில் நிலையத்தில் முத்தரசன் தலைமையில் போராட்டம் தொடர்ந்து நடந்தது. ரெயில் தண்டவாளத்தில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சீர்காழி முதல் பனமங்கலம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து இருந்தனர்.
இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது. அவர்கள் தீப்பந்தங்களை ஏந்தியும், டயர்களை எரித்தும், ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 2-வது நாளாக விவசாயிகள் தண்டவாளத் தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சன்னா நல்லூரில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் சென்ற பயணிகள் ரெயிலை மறித்தனர். விவசாயிகள் விடிய, விடிய அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் பயணிகள் ரெயிலை இயக்க முடியவில்லை. அங்கு தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று காலையும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தது. எனவே இன்று ரெயிலை இயக்க முடிய வில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேரந்தவர் முனியப்பன் (வயது34). இவரது மனைவி தேவி (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதம் ஆகிறது. முனியப்பன் உடல்நலமின்றி கஷ்டப்பட்டு வந்தார். கடந்த 9-ந்தேதி உடல் நலம் மோசமானதால் வீட்டில் இருந்த வயலுக்கு பயன்படுத்தும் விஷமருந்தை எடுத்து குடித்துவிட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி முனியப்பன் இறந்து விட்டார்.
இது குறித்து தேவி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம் தோப்புத்துறை மகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரெத்தினம்பிள்ளை (வயது 78). இவர் கடந்த 15-ந்தேதி இரவு வேதாரண்யம்-நாகை சாலை பாலமுருகன் கோவில் அருகே நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த தோப்புத்துறை அர்ஜூனன் மகன் மணிகண்டன் (26) என்பவர் மீது வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகூர், முட்டம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (வயது 42) டெய்லர். இவரது மனைவி லதா (38) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ரவி மது குடிப்பதை நிறுத்த சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதில் குணமாகாததால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாப மாக இறந்தார்.
இது குறித்து நாகூர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மயிலாடுதுறை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் நடைபெறும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்கள் தங்கள் வளத்தை தாங்களே வைத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழகமும் அதே போல் நினைக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு சட்டரீதியாக வெற்றி பெற்றாலும் இதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது.
காவிரி பிரச்சினை தொடர்பாக தி.மு.க.- காங்கிரஸ் கட்சியினர் தற்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து இருக்கலாமே?
தற்போது போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலையாகும். பண்டிகை காலம் நெருங்குவதால் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை அரசு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக முதல் -அமைச்சர் விரைவில் குணம் அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருவிடைக்கழி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் கார்த்திகேயன்.
இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி தனது மோட்டார் சைக்கிளில் வாட்டர் பாட்டில் கொண்டு வருவது போல் வந்தார். அவர் பொறையாறு சோதனைச்சாவடி வழியாக வந்த போது போலீசார் சந்தேகத்தின் பேரில் வாட்டர் பாட்டில் பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 450 மது பாட்டில்கள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
இதைத்தொடர்ந்து மது பாட்டில்களை கடத்தி வந்த கார்த்திகேயனை பொறையாற இன்ஸ்பெக்டர் முருகவேல் கைது செய்தார். மேலும் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், கடத்தலில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் நயினார் நகர் பழைய காலனி தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 55) தொழிலாளி. இவருக்கு 5 மகள்கள் உள்ளனர். இதில் 3 மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது.
இந்நிலையில் சின்னசாமியிடம் மற்ற மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க போதிய பணம் இல்லை. இதில் மனமுடைந்த அவர் தனது 2 மகள்களையும் காரைக்காலில் உள்ள மகள் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






