என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கோவில்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ரவிச்சந்திரன். இவர் தனியே குடியிருந்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தருமையன் மகன் மகாதேவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகாதேவன் ரவிச்சந்திரன் தாய் பட்டம்மாள் (60) என்பவர் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளார்.
இதில் காயமடைந்த பட்டம்மாள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பட்டம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து தலைமறைவான மகாதேவனை தேடி வருகிறார்.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவர் காலணியை சேர்ந்தவர் வீரப்பிள்ளை. இவரது வீட்டில் நேற்று பட்டாசு விழுந்து தீப்பிடித்தது. இதில் வீட்டில் இருந்து டி.வி.உள்பட ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர்.
இதேபோல் சீர்காழி கீழத்தெருவைச் சேர்ந்த தவமணியின் கூரைவீடு, சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவேந்திரன், அன்பழகன் ஆகியோரின் கூரைவீடு ஆகியவற்றில் பட்டாசு விழுந்து ரூ 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும் புதுத்துறையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வீடு, மாதிரவேலுரை சேர்ந்த ராஜா என்பவரின் வைக்கோல் போர் ஆகியவற்றில் பட்டாசு விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
மணல்மேடு குறிச்சியை சேர்ந்த தங்க பிரகாசம், தர்மராஜன் ஆகியோரின் வீட்டில் மின்கசிவு காரணமாக நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
சீர்காழி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. இதையொட்டி சீர்காழி தீயணைப்பு நிலையம் மூலம் 2 தீயணைப்பு வாகனம் தயாராக வைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சீர்காழி கீழத்தெருவில் உள்ள தவமணி என்பவர் வீட்டிற்கு சென்று சீர்காழி பாரதி எம்.எல்.ஏ. நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார்.
நாகப்பட்டினம்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அய்யம்பேட்டை நேரு நகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் குத்புதீன். இவருடைய மகன் அப்துல்ரசீது (வயது30). இவரும் அய்யம்பேட்டை தானிஸ்நகரை சேர்ந்த முகமது அலி மகன் அபுதாஹிர், அய்யம்பேட்டையை சேர்ந்த ஜெகப்அலி மகன் அன்சாரி, அகமது இஸ்மாயில் மகன் உஸ்மான், முகமது இலியாஸ் மகன் யாசர்அராபத் ஆகிய 5 பேரும் அய்யம்பேட்டையில் இருந்து காரில் நாகை மாவட்டம் நாகூருக்கு சென்றனர்.
காரை தஞ்சை எஸ்.பி. நகரை சேர்ந்த தங்கையா என்கிற சாகுல்அமீது ஓட்டியுள்ளார். கார் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் திட்டச்சேரியை அடுத்த வாழாமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் சென்ற 6 பேரும் படுகாயம் அடைந்து காருக்குள் சிக்கிக்கொண்டனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருமருகல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் மூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி காரில் இருந்து 6 பேரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அப்துல்ரசீதை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த அன்சாரி, அபுதாஹிர், உஸ்மான், யாசர்அராபத், டிரைவர் தங்கையன் ஆகிய 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெரு பகுதியில் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ராக்கெட் வெடி விழுந்து தீப்பிடித்தது.
இதுபற்றி சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கலா. இவர்களுக்கு மீனு (24) என்ற மகளும், ஜெகன் (23) என்ற மகனும் உள்ளனர்.
வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு ஆரியநாத்தெருவை சேர்ந்த பிரகாசமேரி என்பவரது வீட்டின் மேல் மாடியில் கலா தனது மகள்- மகனுடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
கடந்த சில நாட்களாக அவர்கள் வசித்துவரும் வீட்டின் கீழ் பகுதியில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று வீட்டின் கீழ்பகுதியில் வேலை நடந்து கொண்டிருந்தபோது கலாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக மாடிக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டதால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது கலா வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் தூக்குமாட்டியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கலாவை மீட்டனர். பின்னர் மற்ற அறைகளுக்கு சென்று பார்த்தபோது கலாவின் மகள் மீனு, மகன் ஜெகன் ஆகியோரும் மின்விசிறிக்கு அருகே உள்ள கம்பியில் சேலையால் தூக்குமாட்டிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கலாவை நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் மற்ற இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்காள்-தம்பி இருவரும் ஏன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். தாயும் ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்காள்-தம்பி தூக்குபோட்டு இறந்ததும், தாய் தற்கொலைக்கு முயன்றதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் பி.விஜயன், செயலாளர் குருபிரசாத் ஆகியோர் தலைமை தாங்கினர். முதலில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் ஊதியமாற்றம் செய்யப்பட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் தமிழக அரசு அதனை நிறைவேற்றவில்லை.
1.7.2016ல் வரவேண்டிய அகவிலைப்படி உயர் 3 மாதங்களாகியும் இன்னும் அறிவிக்கவில்லை. 28-ந்தேதி சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ரத்து செய்த கருவூலதுறை கணக்கு அதிகாரியை கண்டித்தும். தமிழக அரசு 125 சதவீத அகவிலைப்படியை 20 சதவீதம் இடைக்கால நிவாரணமாக உடனே வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் மருதூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வாசுகி (56). இவர் நேற்று காலை வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
திரும்பி வீட்டிற்கு வந்தபோது வீட்டிற்குள் இருந்து ஒரு வாலிபர் வெளியே ஓடினார். இதையடுத்து அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் துரத்திசென்று அந்த வாலிபரை பிடித்தனர். அவனிடம் வாசுகியின் வீட்டு பீரோவிலிருந்து திருடப்பட்ட வெள்ளிபொருட்கள், கடிகாரம், மெமரிகார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த வாலிபரை கரியாப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு முருகையன் மகன் வேலு (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்து கோர்டில் ஆஜர் படுத்தினர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த எருக்கூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். மேலும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பணத்தை மொத்தமாக பெற்று வங்கியில் செலுத்துவது மற்றும் ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் பணிசெய்து வருகிறார்.
இவர் தினமும் ஓவ்வொரு நிறுவனத்திற்கும் சென்று பணத்தை பெற்று பையில் வைத்துக்கொண்டு வங்கியில் செலுத்தி வருகிறார்.
இந்தநிலையில் இன்று காலை சீர்காழி பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள 2 தனியார் நிறுவனத்தில் இருந்து ரூ. 2¾ லட்சத்தை பெற்று அதனை வங்கியில் செலுத்துவதற்காக தனது பையில் வைத்துக்கொண்டு புதிய பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பணம் வைத்திருந்த பையை தோளில் தொங்கவிட்டபடி சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் விஜயகுமாரிடம் இருந்து பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என சத்தம்போட்டார்.அதனை பார்த்த சிலர் கொள்ளையர்களை துரத்தி சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சீர்காழி பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்.
இப்படி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவும், பரப்பாகவும் உள்ள இந்த பகுதியில் பட்டப்பகலில் தனியார் நிறுவன ஊழியரிடம் மர்ம ஆசாமிகள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி:
பாண்டிச்சேரியிலிருந்து தூத்துக்குடிக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் டேங்கர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரி சீர்காழி அருகே கொள்ளிடம் புத்தூர் பகுதி பாலிடெக்னிக் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
இதில் டிரைவர் அருகில் அமர்ந்து வந்த கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு டிரைவரான வீரப்பன் (38) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதையடுத்து லாரியை ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் வீரப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
மற்றொரு விபத்தில் விவசாயி பலியானார்.
சீர்காழியை அடுத்த மங்கைமடம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 19). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திருவெண்காட்டிலிருந்து மங்கைமடம் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது நெப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தார். அவருக்கு பின்னால் நெப்பத்தூர் தீவு தெருவை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 45) அமர்ந்து வந்தார்.
நெப்பத்தூர் சேம்பர் பகுதியில் 2 மோட்டார் சைக்கள்களும் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்காடு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் 3 பேரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி முருகன் இறந்தார். ராஜா மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்துக்குறித்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்காவில் ஆதனூர் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், மருதூர், வாய்மேடு, தகட்டூர், தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் சுமார் 11 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி துவங்கப்பட்டு நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர்.
நேரடி நெல் விதைப்பு செய்ததிலிருந்து கடும் வெயில் நிலவி வந்தது. இதனால் நேரடி நெல் விதைப்பு நெல் விதைகள் கருக தொடங்கின. ஒரு சில இடங்களில் முளைத்த பயிர்களும் மழை இல்லாமல் கருகிவிட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே நல்ல மழை பெய்தது. இந்த மழை நேரடி நெல் விதைப்பு செய்துள்ள நெல் விதைகள் முளைப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
கடும் வெயிலால்சம்பா சாகுபடியும் பொய்த்து போய்விடும் என்று கவலைப்பட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் ஆற்றுப்பாசன பகுதியான தலை ஞாயிறில் பெய்துள்ள மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பணப்பயிர்களான சவுக்கு, முந்திரி, மா, தென்னை போன்ற சாகுபடிகளுக்கு ஏற்ற மழையாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள நாச்சிகுளத்தை சேர்ந்த ராபர்ட் அடைக்கலராஜ் என்பவர் மகன் ஆரோக்கியராஜ் (வயது 30) இவரும், கோவிந்தகாட்டை சேர்ந்த செந்தில்குமார் மகன் கணேஷ் (25) என்பவரும் நேற்று இரவு 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் நாச்சிகுளத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி சென்றனர். அவர்கள் பரவை அருகே தனியார் மசாலா நிறுவனம் அருகே வந்தபோது அந்தவழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆரோக்கியராஜூம், கணேசும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் அருகே உள்ள திருப்பூண்டி காரை நகர் காலனி தெருவை சேர்ந்தவர் முரளி (26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அங்கு கோவையை சேர்ந்த அமுதா என்பவரும் வேலை பார்த்தார். இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. அக் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. அப்போது முரளியின் தாய், தங்கை ஆகியோர் அமுதாவிடம் 10 பவுன் நகை கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 24.9.16 அன்று அமுதா மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் கொடுத்து இருந்தார்.
மனைவி இறந்ததில் இருந்து முரளி வேதனையில் இருந்து வந்தார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






