என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் பகுதியில் பரவலான மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்காவில் ஆதனூர் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், மருதூர், வாய்மேடு, தகட்டூர், தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் சுமார் 11 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி துவங்கப்பட்டு நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர்.
நேரடி நெல் விதைப்பு செய்ததிலிருந்து கடும் வெயில் நிலவி வந்தது. இதனால் நேரடி நெல் விதைப்பு நெல் விதைகள் கருக தொடங்கின. ஒரு சில இடங்களில் முளைத்த பயிர்களும் மழை இல்லாமல் கருகிவிட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே நல்ல மழை பெய்தது. இந்த மழை நேரடி நெல் விதைப்பு செய்துள்ள நெல் விதைகள் முளைப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
கடும் வெயிலால்சம்பா சாகுபடியும் பொய்த்து போய்விடும் என்று கவலைப்பட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் ஆற்றுப்பாசன பகுதியான தலை ஞாயிறில் பெய்துள்ள மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பணப்பயிர்களான சவுக்கு, முந்திரி, மா, தென்னை போன்ற சாகுபடிகளுக்கு ஏற்ற மழையாக உள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.






