என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே கார் மோதி பெண் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசேகரன். இவரது மனைவி மேரி (எ) ஜெயமணி (வயது 34). இவர் சம்பவத்தன்று நாகை மெயின்ரோட்டில் நடந்து வந்த போது எதிரே வந்த கார் மோதி படுகாயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஜெயமணி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சிக்கல் கோவிலில் நெடுங்கன்னி அம்மனிடம் முருகன் வேல் வாங்கினார் இன்று மாலை சூரசம்ஹாரம்
    நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலவர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் அதை எடுக்க முயன்றபோது சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.

    இக்கோவிலில் சன்னதி கொண்டுள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கிச்சென்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு பெற்ற ஒன்றாகும். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் முருகன் சிங்காரவேலவர், வேல்நெடுங்கன்னி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் உற்சவம் முக்கிய நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    முன்னதாக காலையில் தேரில் அலங்கார கோலத்தில் சிங்காரவேலவர் வள்ளி-தெய்வானையுடன் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு சிங்காரவேலவர் தேரில் சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து காலை 7.30 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தேரை நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து சக்திவேல் வாங்குதல், முருகனுக்கு வியர்வை சிந்தும் காட்சி மற்றும் வேல்நெடுங்கன்னி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.

    இன்று சண்முகார்ச்சனை, செய்யும் நிகழ்ச்சியும் சிங்காரவேலவர் தங்க ஆட்டு கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடக்கிறது. 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்க குதிரை வாகனத்தில் பவனி, தெய்வானை திருக்கல்யாணம், முருகன் வெள்ளி ரதத்தில் வீதி உலாவும், 7-ந் தேதி வள்ளி திருக்கல்யாணம் நடக்கின்றன. 8-ந்தேதி விடையாற்றி உற்சவமும், சயன அலங்காரத்தில் எழுந்தருளலும் நடக்கிறது.

    ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம், ஆய்வாளர் பழனித்துரை, நிர்வாக அதிகாரி ராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    சீர்காழியில் ஆஸ்திரேலிய ஆந்தையை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த ஆந்தை ஆஸ்திரேலிய நாட்டுபறவைகள் இனத்தை சேர்ந்த ஒரு அதிசய ஆந்தை என கூறப்படுகிறது.

    சீர்காழி:

    நாகப்பட்டினம் திருவேங்கடம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் புனித நம்பி மகன் பிரதீப்(23) அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(18) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சீர்காழி நோக்கி வந்துக்கொண்டிருந்தனர். அப்போது தலச்சங்காடு அருகில் சாலையோரத்தில் ஒரு அதிசய ஆந்தையை காகங்கள் கொத்திக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் காகங்களிடம் இருந்து அந்த ஆந்தையை மீட்டு சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த ஆந்தை ஆஸ்திரேலிய நாட்டுபறவைகள் இனத்தை சேர்ந்த ஒரு அதிசய ஆந்தை என கூறப்படுகிறது.

    வேதாரண்யம் அருகே பஸ் நிற்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி வாய்மேடு மார்க்கத்தில் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் சென்று வருகின்றன. இதில் ஆதனூர் பகுதியில் எக்ஸ்பிரஸ் பஸ்கள் நிற்பது கிடையாது.

    சம்பவத்தன்று வேதாரண்யத்திலிருந்து திருச்சி சென்ற எக்ஸ்பிரஸ் பஸ் ஆதனூர் பகுதியில் நிற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த ரெங்கராஜன், நடராஜன், கோவில்தாவைச் சேர்ந்த சேகர், மாரிப்பிள்ளை ஆகியோர் முன்னறிவிப்பு இல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் 45 நிமிடம் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    மயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமர். இவருடைய மனைவி கலாவதி (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டுகள் ஆகின்றன. 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கலாவதி 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் சோழம்பேட்டை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளராக இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கலாவதி மீது ராமருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ந் தேதி கலாவதிக்கும், ராமருக்கும் குடும்ப பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த கலாவதி வீட்டில் இருந்த மண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த கலாவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கலாவதி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கலாவதிக்கு திருமணமாகி 3½ ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் விசாரணைக்காக போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

    வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளியில் சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் 3 ஆயிரம் ஏக்கரிலும் கோடியக்காடு கடினல்வயல் பகுதியில் 6 ஆயிரம் ஏக்கரில் தனியார் நிறுவனமும் சாப்பாடு மற்றும் ரசாயண உப்பை தயார் செய்கின்றனர்.

    தமிழகத்தில் தூத்துக்குடி அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 முதல் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடைபெறும் வழக்கமாக ஜனவரி 2ம் வாரத்தில் உப்பு உற்பத்தி துவங்கப்பட்டு அக்டோபர் வரை சுமார் 9 மாதங்கள் உப்பு உற்பத்தி நடைபெறும். ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் முழு வீச்சில் உப்பு உற்பத்தி நடைபெறும். இத்தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும், சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நாள்தோறும் இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ரெயில் வசதி இல்லாத காரணத்தால் லாரி மூலமே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலத்திற்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு இடைஇடையே பெய்த மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ஆண்டு மொத்த உற்பத்தியில் 20 சதவீதம் பாதிக்கப்பட்டது. உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பிற்கு நல்ல விலை கிடைக்கும் என்றிருந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தினால் இங்கிருந்து கர்நாடகவிற்கு லாரிகள் செல்வது தடைப்பட்டது. இதனால் இந்தாண்டு வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியில் 40 சதவீதம் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது டன் ஒன்று 500 முதல் 600 வரை விற்பனை ஆகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உப்பு ஏற்றுமதி செய்யும் தொழிலாளர்கள் மட்டும் வேலை வாய்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தாங்கள் உற்பத்தி செய்த உப்பை மழையிலிருந்து பாதுகாக்கவும் விலை கூடும் என்ற நம்பிக்கையிலும் பனை மட்டை, பிளாஸ்டிக் தார் பாய்களை கொண்டு மூடி வைத்துள்ளனர்.

    உப்பளத் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதியில் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல மழைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. ஆனால் இது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. உப்பளத் தொழிலாளர்கள் மழைக்காலத்தில் மாற்றுத் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கிப் போய் உள்ளனர்.

    எனவே அவர்களின் நலன்கருதி மீனவர்களுக்கு வழங்குவது போல மழைக்கால நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென உப்பளத் தொழிலாளர்கள் எதிர் பார்க்கின்றனர்.

    வீட்டில் மின்சார பல்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி அங்காடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மயிலாடுதுறை:

    மணல்மேடு அருகே சித்தமல்லி மணவெளி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடியில் எடையாளராக வேலை செய்து வந்தார்.

    இவர் தீபாவளி விடுமுறைக்காக சித்தமல்லிக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் மின்சார பல்பை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    நாகை அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த சாரம்பாடி புதிய நம்பியார் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது30). தொழிலாளி. இவரது மனைவி மேகலா(26). திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இவர்கள் இதற்கு முன்பு அக்கரைப்பேட்டை அருகே திடீர் குப்பத்தில் வசித்து வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டதால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் இந்த வீடு ராசியில்லை என்று கருதி புதிய நம்பியார் நகருக்கு குடிவந்துள்ளனர்.

    இந்நிலையில் செல்வம் இந்த வீடும் ராசியில்லை. எனவே வேறு வீட்டிற்கு செல்வோம் என்று கூறியதால் கணவன்-மனைவியிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 31-ந்தேதி மேகலா தனது குழந்தையுடன் ஒரு துக்கத்திற்கு சென்று விட்டாராம். பின்னர் அவர் வீடு திரும்பியபோது செல்வம் வீட்டில் தூக்குபோட்டு இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வெளிப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே மருமகளை தாக்கியதாக வந்த புகாரின் பேரில் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் வசிப்பவர் முகிலன். இவரது மனைவி தேவி (வயது 28). முகிலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    தேவி தனது மகன் ரித்தீசுடன் தனியே வசித்து வருகிறார். இந்த நிலையில் மாமனார் முருகையன் தன்னை திட்டி, முடியை பிடித்து இழுத்து தாக்கியதாக தேவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து முருகையனை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி அருகே சிறுவனை மதுகுடிக்க வைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    சீர்காழி:

    குடிப்பழக்கம் பல குடும்பங்களை சீரழித்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளும் மது குடிக்கும் பழக்கத்துக்கு உள்ளாகி வருவது சமீப காலமாக வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் சிறுவர்களை ஏமாற்றி மது குடிக்க வைத்து அதனை படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் வெளியிடும் விபரீத விளையாட்டு பரவி வருகிறது. இதை உறுதிபடுத்தும் விதமாக சீர்காழி அருகே சிறுவனை மதுகுடிக்க வைத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள அகர திருக்கோலக்காவை சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்களான தினேஷ் (வயது 24), அரவிந்த் (21), மதுபாலா (19) ஆகிய 3 பேரும் தீபாவளி அன்று தனியாக அமர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த 9 வயது சிறுவனை அழைத்து குளிர்பானம் தருகிறோம். குடித்துவிட்டு போ என்று கூறி உள்ளனர்.

    அதனை நம்பி சென்ற சிறுவனுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளனர். அதனை அவன் குடித்ததும் ஆட சொல்லி அதனை செல்போனில் படம் பிடித்துள்ளனர். மேலும் அதனை அவர்கள் வாட்ஸ்-அப்பில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    இந்தநிலையில் தனது மகனை தேடி வந்த தாய் அவனை வாலிபர்கள் மதுகுடிக்க வைத்து படம்பிடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தட்டிகேட்ட அவரை 3 வாலிபர்களும் மிரட்டி இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளனர்.

    ஆனால் அவர் இதுபற்றி நேற்று சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனுக்கு மது கொடுத்து செல்போனில் படம் பிடித்த 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேதாரண்யம் அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது தோப்புதுறை-பெரியகுத்தகை சாலை சந்திப்பில் உள்ள மாந்தோப்பில் அனுமதி பெறாமல் மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்தவரை பிடித்து அவரிடமிருந்த 5 பாட்டில்களை கைப்பற்றினர். விசாரணையில் அவர் நெய்விளக்கு கீழக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சங்கர் (30) என தெரிய வந்தது. அவரை கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    வேதாரண்யம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்கு வரத்திற்கு இடையூறாகவும் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத் துறையை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சுதன் (வயது 23). இவர் நாகை சாலையில் உள்ள தியேட்டர் முன்பு ரோட்டில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாகவும், போக்கு வரத்திற்கு இடையூறாகவும் தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தார்.

    இவரை  வேதாரண்யம் போலீஸ் ஏட்டு பன்னீர்செல்வம் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    ×